சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

நல்லதொரு முடிவை எடுப்பாரா ரஜினி!

Added : டிச 13, 2019 | கருத்துகள் (2)
Advertisement
நல்லதொரு முடிவை எடுப்பாரா ரஜினி!

பா.ஜெயப்பிரகாஷ்,பொள்ளாச்சி, கோவைமாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: '2020ல் அரசியல் கட்சி துவங்குவார்; ரஜினி முதல்வரானால், மக்களை தேடிச் சென்று, அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பார்' என, அவரது அண்ணன் சத்தியநாராயணா கூறி இருக்கிறார். அரசியல் என்ன சமையலா... ருசியாக செய்து கொடுப்பதற்கு!

ஆட்சி என்பது, சிகரெட்டை வானில் துாக்கி போட்டு, 'ஸ்டைலாக' வாயில் கவ்வும் வித்தை அல்ல. அந்த, 'ஸ்டைலை' பழக, எத்தனை முறை முயற்சி செய்திருப்பார், ரஜினி. படத்தில் கூட, அந்த காட்சியை பதிவு செய்வதற்கு முன், பல தடவை செய்து பார்த்திருப்பார். முதல்வர் கனவில் உள்ள ரஜினி, கடந்த காலங்களில் நடந்த, லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், தன் ரசிகர் மன்ற தலைவர்களை களம் இறக்கி, ஆழம் பார்த்திருக்க வேண்டாமா... உங்கள் பலம் மக்களிடத்தில், எப்படி என அறிந்திருக்க வேண்டாமா?

ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என, சினிமாவையும், அரசியலையும் ஒன்றாக பார்த்தால், இலக்கை அடைய முடியாது. ரசிகர்களின் ஆவல்களையும் பூர்த்தி செய்ய முடியாது. தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என கூறும், ரஜினி, அதற்கு தகுதியானவர், ஆளுமை மிக்கவர் யார் என்பதை, எந்த வகையிலாவது தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அதைவிட்டு, 'மைக்' கண்ட பக்கமெல்லாம், 'வசனம்' பேசி, 'ஸ்டைலாக' கடந்து போவது தான் ஆளுமை தகுதியா?

'வெற்றிடம் இருப்பது உண்மை தான். அதை, ரஜினி நிரப்புவார்' என்கிறார், மு.க.அழகிரி. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீதுள்ள வெறுப்பில், இப்படி பகையை தீர்த்துக் கொண்டார் போலும். 'சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும்' என்றளவுக்கு புகழ் பெற்றவர், ரஜினி. அரசியல் என்ற புலிவாலை பிடித்து விட்டார். இனி, இதிலிருந்து மீள, அவர் விரைவில், நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும்!

***


தமிழக அரசின் நோக்கம் நிறைவேற மாத்தி யோசிக்கலாம்!

வி.எம்.மகிழ்நன், மாவட்ட தகவல் மற்றும் பயிற்சி அலுவலர் (பணி நிறைவு), கடலுாரிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், பள்ளிக் கல்வியின் தரத்தை, தேசிய அளவில், 'நிடி அயோக்' என்ற அமைப்பு ஆய்வு செய்து, அறிக்கையை, தமிழக அரசுக்கு சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், ஒட்டுமொத்த பாடப் பிரிவுகளில், செயல்திறன், மதிப்பெண் அடிப்படையில், கணக்கெடுத்ததாக கூறியுள்ளது. அவற்றில், மாணவர்களின் ஆங்கில பேச்சுத் திறன் பற்றிய ஆய்வும் அடங்கியிருக்கிறது. ஆக, ஒட்டுமொத்த பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், வேலை கொடுப்போர் எல்லாரும், மாணவர்களின் ஆங்கில பேச்சுத் திறன் வளர்ந்தாலே, மாணவர்கள் அறிவுள்ளவர்கள்; அவர்களால், நாட்டை தொழில் வாயிலாக, முன்னேற்றம் செய்வர் என, கருதுகின்றனர்.

ஆங்கிலம் பேசினாலே, சமூகத்தில் கவுரவம் என, நினைக்கின்றனர். அதனால் தான், அரசு பள்ளி மாணவர்களை விட, தனியார் பள்ளி மாணவர்கள் மதிக்கப்படுகின்றனர்; அதுவே, கல்வித் தரம் என, கணக்கிடுகின்றனர். இதை மனதில் வைத்து தான், தமிழக அரசின் பள்ளி கல்வித் துறையும், அரசுப் பள்ளி மாணவர்கள், நன்கு ஆங்கில மொழி பேச்சுக் கலையை கற்க, தனியாக பாடவகுப்பும் சேர்த்திருக்கிறது. ஆனால், நமக்கு ஏற்படும் சந்தேகங்கள்...

* ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே, இந்த வகை சிறப்பு வகுப்புகளையும் நடத்துவரா அல்லது பேச்சுத் திறன் கற்பித்தலுக்கான தனி ஆங்கில ஆசிரியர்கள் நியமிக்கப்படுவரா?

* ஆங்கில மொழி கற்பித்திலுக்கு, அடிப்படை இலக்கணம் ஓரளவுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான், பேச்சுத் திறன், உரையாடல் பயிற்சிகள் வாயிலாக, வளர்க்கலாம்

* இந்த பயிற்சிக் கட்டங்களில், வெறும் பாடம் தான் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டால், மொத்த நோக்கமும் அடிபட்டுப் போகும். அதையும், ஒரு கருவியாக வைத்து, பேச்சுக்கலையை வளர்க்க வேண்டும்.

இந்த அடிப்படையில் நோக்கினால், ஆங்கில மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள், பெங்களூரு ஆங்கில மொழிப் பயிற்சி நிறுவனத்திலோ அல்லது ஐதராபாத் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழி கற்பித்தல் நிறுவனத்திலோ அல்லது பிரிட்டீஷ் கவுன்சில் என்ற ஏதாவது ஒன்றில், டிப்ளமா பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே, அரசின் நோக்கம் நிறைவேறும்!

***


வேளாண் துறை, 'கொர்ர்ர்' - வெங்காயம், 'விர்ர்ர்...!'


கீ.உத்ரன், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்தியிலும், மாநிலங்களிலும், வேளாண் துறைகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு உணவு, பொருளையும், எவ்வளவு பரப்பில் பயிர் செய்ய வேண்டுமென்பதற்கு, ஒவ்வொரு ஆண்டும், இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த இலக்கு, நாட்டில் உணவுப் பொருளின் தேவை அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது.

குறிப்பிட்ட உணவுப் பொருளின் பரப்பளவு குறைந்தாலோ அல்லது எதிர்பாரா இயற்கை இடர்ப்பாடுகள் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டாலோ, பற்றாக்குறை ஏற்படும். இதை முன்கூட்டியே அறிந்து, அப்பொருட்களை தடையின்றி மக்களுக்கு வழங்க, அரசுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டியது, வேளாண் துறையின் தலையாய கடமை. அது, வெங்காயத்தின் விஷயத்திலும் கடைப்பிடிக்கப்பட்டிருக்குமாயின், வெளிநாடுகளிலிருந்து முன்கூட் டியே இறக்குமதி செய்து, இந்த அளவுக்கு மக்களை வருத்தாமல் தீர்வு கண்டு இருக்கலாம்.

வெங்காயம் விலை உயர்வுக்கு காரணம் யாரென்று சிந்தித்தால், நிச்சயமாக அது, வேளாண் துறையின் குறைபாடே என்பது தெளிவாக விளங்கும். அதுமட்டுமின்றி, முக்கிய உணவுப் பொருட்களை, ஆறு மாதங்களுக்கோ அல்லது ஓராண்டிற்கோ வரும் வகையில், எப்போதும் சேமித்து வைக்க வேண்டும். அவசர தேவைகளுக்கு, அந்தச் சேமிப்பிலிருந்து செலவு செய்து, பின், நல்ல மகசூல் ஏற்படுத்தி, மீண்டும் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இவ்வளவு விதிமுறைகள் இருந்தும், வேளாண் துறைகள் துாங்கி விட்ட காரணத்தாலேயே, வெங்காயம் விலை ரெக்கை கட்டிப் பறக்கிறது.

இனியாவது, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் சேமிப்பில், வேளாண் துறை கவனமுடன் செயல்பட வேண்டும். அதற்கு, மத்திய - மாநில அரசுகள் உரிய முனைப்பை காட்ட வேண்டும். வெங்காயம், பருப்பு வகைகள் விலை உயராமல் தடுக்க, இதுவே வழி!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
13-டிச-201915:18:53 IST Report Abuse
s.rajagopalan ரஜினி கட்சி துவங்க என்ன அவசரம் ? கமல் ஆரம்பிச்சு என்ன சாதித்தார் ? இதையெல்லாம் அவர் ஆழ்ந்து யோசித்துக்கொண்டிருப்பார். கட்ச் அமைத்தால் அவருக்கு நீங்கள் ஒட்டு போடா தயாரா ? அதை சொல்லுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
13-டிச-201903:47:27 IST Report Abuse
 nicolethomson ரஜினிக்கு நடிப்பது பிடித்திருந்தா அதையே விட்டுவிடுங்களேன் , எதற்க்காக போட்டு டார்ச்சர் பண்றீங்க?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X