மேற்கு வங்கத்தில் ரயில்வே ஸ்டேஷனுக்கு தீ : குடியுரிமை சட்டத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு

Added : டிச 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 மேற்கு வங்கத்தில் ரயில்வே ஸ்டேஷனுக்கு தீ :  குடியுரிமை சட்டத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு

புதுடில்லி: குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது.

ஹவுரா வில், ரயில்வே ஸ்டேஷனுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அசாமில், பதற்றம் நீடிக்கிறது. பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் சிறுபான்மையின ராக இருந்து, நம் நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்து, சீக்கியர் உள்ளிட்ட மதத்தினருக்கு, இந்தியக் குடியுரிமை வழங்குவதற் கான மசோதா, பார்லிமென் டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இதற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து, இந்த மசோதா சட்டமாகிஉள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்கத்திலும், போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல இடங்களின் வன்முறை வெடித்துள்ளது. அசாமில், வன்முறையை கட்டுப்படுத்த, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர். இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்தில், நேற்று போராட்டத்தின் தீவிரம் அதிகரித்தது.

கோல்கட்டாவிலும், முர்ஷிதாபாத், வடக்கு 24 பர்கானா மாவட்டங்களிலும், ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. சாலை மறியல் போராட்டங்களாலும், சாலைகளில் டயர்களை தீ வைத்து எரித்ததாலும், நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் முடங் கியது. ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரயில் ரயில்வே ஸ்டேஷனுக்கு, ஏராளமானோர் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசாரை விரட்டி அடித்த அவர்கள், ஸ்டேஷனில் டிக்கெட் கொடுக்கும் இடத்துக்கு தீ வைத்தனர். ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் இருந்த கடைகளுக்கும் தீ வைத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது.

இதேபோல், முர்ஷிதாபாதிலும், ரயில் பெட்டிக்கு, போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.உடல்குரி மாவட்டம், ஜிபாஜர் என்ற இடத்தில், பெட்ரோல் ஏற்றிச் செல்ல வந்த லாரியை, நேற்று முன் தினம் இரவு, போராட்டக் காரர்கள் மறித்து, தீ வைத்தனர். இதில், பலத்த காயமடைந்த லாரி டிரைவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அசாமிலும் பதற்றம்அசாம் மாநிலத்தில், தொடர்ந்து பதற்றம் நிலவியபோதும், கவுஹாத்தி, திப்ரூகர் போன்ற இடங்களில், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக, சில மணி நேரத்துக்கு மட்டும் தடை உத்தரவு தளர்த்தப்பட்டது. பள்ளி, கல்லுாரிகள் நேற்றும் மூடப்பட்டிருந்தன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படவில்லை. ஆட்டோ, டாக்சி போன்றவை இயங்கினாலும், பொதுப் போக்குவரத்து இயங்கவில்லை. சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. கலவரத்தை துாண்டும் வகையில், 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்கள் வழியாக, விஷமிகள் வதந்திகளை பரப்புவதை அடுத்து, அசாம் மாநிலம் முழுவதும் இணைய சேவை ஏற்கனவே முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு இந்த இணைய முடக்கம் தொடரும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடல் அடக்கம்கவுஹாத்தியில், சமீபத்தில் நடந்த போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான, சாம் ஸ்டாப்போர்டு என்ற இளைஞரின் உடல், நேற்று பலத்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில், ஏராளமான பொதுமக்கள், மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். 'எங்கள் போராட்டத்துக்காக உயிர் நீத்த சாமை, மாவீரனாக கருதுகிறோம்' என, கூடியிருந்தவர்கள் கோஷம் எழுப்பினர். மற்ற மாநிலங்கள்மற்றொரு வட கிழக்கு மாநிலமான நாகாலாந்திலும், குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மாநிலம் முழுவதும் கடைகள், வர்த்தக நிறுவனங் கள் மூடப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 'பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வரை போராட்டம் தொடரும்' என, நாகா மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேகாலயா மாநிலத்தில் பதற்றம் நிலவினாலும், நேற்று பகல் நேரத்தில் தடை உத்தரவு தளர்த்தப்பட்டது. சாலைகளில் ஓரளவு வாகன நடமாட்டத்தை காண முடிந்தது. குடியுரிமை சட்டம் குறித்து விவாதிக்க, மேகாலயா சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட, மாநில அரசு முடிவு செய்துள்ளது.டில்லியில் மாணவர்கள் கைதுடில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலை மாணவர்கள், குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரி வித்து, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான மாணவர்கள் குவிந்ததால், அவர்களை, போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசி, மாணவர்களை, போலீசார் கலைத்தனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில், 12 போலீசார் காயம் அடைந்தனர். போராட்டம் நடத்திய, 42 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர். மாணவர்கள் போராட்டத்தை அடுத்து, அடுத்த மாதம், 5ம் தேதி வரை, பல்கலைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது; தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் பல்கலை வளாகம் முழுவதும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, ஏராள மான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப் பட்டுள்ளனர்.வித்தியாசமான போராட்டம்அசாமில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களும், மற்றவர்களும், பாரம்பரியமான சிவப்பு கரை நெய்யப்பட்ட துண்டை கையில் பிடித்தபடி, கோஷமிடுகின்றனர்.

இந்த துண்டு, அசாம் மாநிலத்தின் கலாசார அடையாளமாக கருதப்படுகிறது. முக்கியமான திருவிழாக்கள், நிகழ்ச்சிகள், போராட்டங்களின் போது, இந்த துண்டை ஏந்திச் செல்வது, அசாம் மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. நேற்றைய போராட்டத்தின்போதும், இந்த துண்டை ஏந்தியபடி, 'ஜெய் ஆய் அசாம்... ஹோ ஹோ' என, பலரும் கோஷமிட்டுச் சென்றனர்.

வட கொரியாவுக்கு போங்க!
குடியுரிமை சட்டம் குறித்து, தலைவர்கள் கூறியதாவது:நம் நாடு, மதத்தின் பெயரால், ஒரு காலத்தில் பிளவுபடுத்தப்பட்டது. ஜனநாயகத்தில் பிளவுகள் இருப்பது மிகவும் அவசியம். குடியுரிமை சட்டத்தால், தாங்கள் பிளவுபடுத்தப் படுவதாக நினைப்பவர்கள், வட கொரியா நாட்டுக்கு செல்லலாம்.
ததகதா ராய், மேகாலயா கவர்னர்
எந்த போராட்டம் என்றாலும், ஜனநாயக முறையில் நடக்க வேண்டும்; அமைதியை பின்பற்ற வேண்டும். வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர்
குடியுரிமை சட்ட மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டது, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு வயிற்று வலியை ஏற்படுத்தி உள்ளது. அதனால் தான், பல மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளன.
அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர்
குடியுரிமை சட்டம், மேற்கு வங்கத்தில் கண்டிப்பாக அமல்படுத்தப்படும். நாட்டிலேயே, இந்த சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக, மேற்கு வங்கம் திகழும். இந்த சட்டத்தை மம்தாவால் நடைமுறைப்படுத்தாமல் இருக்க முடியாது.
திலீப் கோஷ், மேற்கு வங்க மாநில பா.ஜ., தலைவர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
15-டிச-201908:00:06 IST Report Abuse
Darmavan இந்த மாதிரி செய்திகளை ஊடகங்கள் வெளியிடாமல் இருப்பதே அமைதிக்கு வழி செய்யும்.. விருப்பு என்ற பெயரில் ஊடகங்கள் வன்முறையை பரப்புகின்றன. ஊடகங்கள் பொறுப்போடு செயல்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X