சோழவரம்: வருமான வரித்துறை உதவி ஆணையர் பதவியை, விருப்ப ஓய்வு வாயிலாக உதறிவிட்டு, பெண் வேட்பாளர் ஒருவர், ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சியை சேர்ந்தவர், பிரபாகரன், 54. இவர் தொடர்ந்து, 10 ஆண்டுகளாக, ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார்.
விருப்ப ஓய்வு
தற்போது, சோழவரம் ஊராட்சி, பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், பிரபாகரன் தன் மனைவி சாந்தகுமாரியை தேர்தல் களமிறக்கி உள்ளார். ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை, சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில், சாந்தகுமாரி, 52, நேற்று(டிச., 13) தாக்கல் செய்தார். இவர், சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில், உதவி ஆணையராக பணிபுரிந்து வந்த நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்காக, மாதம், 2 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் பதவியை, விருப்பு ஓய்வில் உதறியுள்ளார். சாந்தகுமாரிக்கு, இன்னும் எட்டு ஆண்டுகள், பணிக்காலம் உள்ளதுடன், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்காக, தன் பதவியை விட்டு வெளியேறி உள்ளார்.
சமூக சேவை
இதுதொடர்பாக, சாந்தகுமாரி கூறியதாவது: ஊராட்சி மக்களின் விருப்பத்திற்கேற்ப, என் பணிக்கு, விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு போட்டியிடுகிறேன். சமூக சேவை செய்வதில், எனக்கு மிகுந்த ஈடுபாடு உள்ளதால், இந்த முடிவை எடுத்தேன். இந்த ஊராட்சியில், பின்தங்கிய மக்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE