வயது பதினேழு. இப்போதும் பள்ளி மாணவி. எட்டாம் வகுப்பு படிக்கும் போதே ஒரு திரைப்படம்; பத்தாம் வகுப்பில் ஒரு படம், பிளஸ் 1 க்கு ஒரு படம் என்று குறுகிய நாட்களில் மலையாளத்தில் ஐந்து படங்கள் நடித்து முடித்து விட்டார் அழகிய முகமும், அற்புத நடிப்பாற்றலும் மிக்க அனஸ்வரா ராஜன். இப்போது தமிழுக்கும் தாவி விட்டது இந்த இளம் சிட்டு. பள்ளி நாட்களின் குறும்புகளையும், குட்டி காதலையும், குதுாகலத்தையும் தளும்ப தளும்ப சொன்ன, மலையாளத்தின் 'தண்ணீர்மத்தன் தினங்கள்' (தர்ப்பூசணி நாட்கள்) இவரது நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற படம்.
அலைகடலாய் ஆர்ப்பரித்து பேசும் அனஸ்வராவின் அழகிய நிமிடங்கள்...
* குழந்தை நட்சத்திரமாகவே திரைக்கு வந்து விட்டீர்களா
எட்டாம் வகுப்பு படிக்கும் போது, மஞ்சு வாரியருடன் 'உதாரணம் சுஜாதா' என்ற திரைப்படத்தில் அவரது மகளாக நடித்தேன். தாய், மகளுக்கான பாசப்போராட்டம் அது. அம்மாவுடன் அதிருப்தி காட்டிக்கொண்டே இருக்கும் அருமை மகள் பாத்திரம். பல விருதுகள் வாங்கிய அந்த முதல் படமே எனக்கு பெருமை பெற்று தந்தது. நடிப்பதற்கான வாய்ப்புள்ள கேரக்டராக
அது அமைந்தது.
* பள்ளியில் நடனம், நடிப்பிற்கு பரிசு பெற்றிருக்கிறீர்களா
நடனம் அவ்வளவாக இல்லை. தனிநடிப்பில் நான் பிரபலம்; பல பரிசுகள் வாங்கியிருக்கிறேன். முன்பு சில குறும்படங்களில் நடித்தேன்.
* மாணவியாக இருந்ததற்கும், நடிகை ஆனபிறகு பள்ளிக்கு படிக்க செல்வதற்கும் வித்தியாசம்...
நான் நடுத்தர குடும்பத்து பெண். என் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏதும் இல்லை. சாதாரண மாணவியாகவே பள்ளிக்கு செல்கிறேன்.
* தண்ணீர்மத்தன் தினங்கள்...
உங்கள் பள்ளி நாட்களின் நினைவுகளை திரும்ப தரும் படம். பத்தாம் வகுப்பு விடுமுறையில் தான் இதன் படப்பிடிப்பு. பிளஸ் 1 மாணவி கேரக்டர்; நிஜமாகவே நானும் அப்போது பிளஸ் 1 மாணவி. நிறைய புதுமுகங்கள் நடித்தனர். தமிழ், தெலுங்கு என பிற மொழிகளிலும் இப்படம் பேசப்பட்டதால், மலையாள திரையுலகிற்கு வெளியேயும் நான் அறிமுகமானேன்.
* இந்த வெற்றிக்கு பிறகு...
திறமை இருந்தால் திரை உலகில் வாய்ப்பிற்கு குறைவில்லை. என் வயதிற்கு மீறிய கேரக்டரில் 'ஆதியராத்ரி' என்ற படத்தில் நடித்தேன். நல்ல வரவேற்பு. பெண்ணிற்கு முக்கியத்துவம் தரும் 'வாங்கு' படம் விரைவில் வெளிவருகிறது. இப்படி என் பயணம் தொடரும் என நம்புகிறேன்.
* தமிழிற்கு எப்போது?
தமிழிற்கு வந்துவிட்டேனே. ஏ.ஆர்.முருகதாஸ் கதையில், 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கும் 'ராங்கி' என்ற படத்தில் த்ரிஷாவுடன் நடித்து வருகிறேன். எதுவும் தெரியாமல், பெரிய தமிழ் திரைஉலகிற்கு வந்து விட்டேன். தமிழ் மக்கள் வரவேற்பார்கள் என நம்புகிறேன். கடவுள் காப்பாற்றுவார் என்பதே நம்பிக்கை.
* தமிழ் படங்கள் பார்ப்பீர்களா
எனக்கு நன்றாக தமிழ் பேசத்தெரியும். சிறுவயதில் இருந்தே தமிழ்ப்படங்கள் பார்ப்பேன். சில படங்களை பார்த்து பிரமித்து போய் இருக்கிறேன். அந்த வரிசையில் 'வாரணம் ஆயிரம்' எனக்கு பிடித்த படம்.
* கேரளாவில் இருந்து நிறைய நடிகைகள் தமிழிற்கு வந்து பிரபலம் ஆகி விட்டார்கள். அவர்கள் வரிசையில் நீங்கள் யார் ஆகப்போகிறீர்கள்?
நயன்தாரா ஆக வேண்டும். அவரே 'ரோல் மாடல்' ; ஏனென்றால் அவர் போராடி வென்றவர்.