முகத்தை பார்த்தவுடனே சிரிக்காதவர்கள்கூட சிரித்து விடுகிறார்கள். கேரக்டரும் அப்படித்தான். அவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். இதனாலேயே தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஷார்ம் விஸ்வநாதன்.தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக இங்கே பேசுகிறார்...
''நான் திருச்சியைச் சேர்ந்தவன். படித்தது, வளர்ந்தது எல்லாம் அங்கதான். பாட்டி எனக்கு வச்ச பேரு சுவாமிநாதன். ஏன் ஷார்ம் விஸ்வநாதன் பெயரை மாற்றிக்கொண்டேன் என்பதை பின்னாடி சொல்றேன்.
எனக்கு 'சென்ஸ் ஆப் ஹூமயூர்' அதிகம். இதற்கு எனது அண்ணன் விஸ்வநாதனும் காரணம். அவர் ஒரு விகடகவி. அவருகிட்டேயிருந்து நிறைய கத்துக்கிட்டேன். மெக்கானிக்கல் இன்ஜி., முடித்துவிட்டு விராலிமலையில் ஒரு கம்பெனியில வேலை பார்த்தபோது நான் காமெடி செய்வதை பார்த்து சிரித்து வாந்தி எடுத்தவர்கள் எல்லாம் உண்டு. அங்கு ஜெயபிரகாஷ் என்பவர் 'உனது திறமையை ஏன் சினிமாவில் காட்டக்கூடாது' என அடுத்த விதையை போட்டார். அந்த நேரத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட என் கம்பெனியின் சென்னை கிளைக்கு யார் செல்ல விருப்பம் என கேட்டபோது, முதல் ஆளாக கை துாக்கினேன்.
சென்னை வந்த பிறகு கம்பெனியில் வேலை முடித்துவிட்டு சினிமா கம்பெனிகளில் சான்ஸ் கேட்டு அலைந்தேன். ஒருகட்டத்தில் 'ஏக்நாத் பிலிம் இன்ஸ்டிடியூட்' என்ற நிறுவனம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. 'உங்கள் திறமைகளை காட்டினால் அதை இயக்குனர்களிடம் கொண்டு போய் சேர்க்கிறோம்' என்றனர். 'ஆஹா, இது நல்ல ஐடியாவா இருக்கே'னு சேர்ந்தேன். என்னுடன் 15 பேர் சேர்ந்தனர். ஆனால் அங்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது.
திருப்புமுனை சந்திப்பு
பாலசந்தர் அலுவலகத்திற்கு சான்ஸ் கேட்க சென்றபோது இயக்குனர் சரணை தெரியும். பின்னாளில் அவர் எனக்கு 'காதல் மன்னன்' படத்தில் பியூன் கேரக்டர் கொடுத்தார். உதவி இயக்குனர் முருகானந்தம் என்பவர், 'அவ்வை சண்முகி' படத்தில் ஒரு கேரக்டர் இருப்பதாக தெரிவித்தார். அவரு சொன்ன நேரத்தில் சென்றபோது, அதற்கு முன்னதாகவே படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அப்போது அங்கு ஜெமினி கணேசன், டில்லி கணேஷ், கிரேஸி மோகன் இருந்தனர். அதுதான் என் வாழ்நாளில் திருப்புமுனை. கிரேஸி மோகன்கிட்டே சான்ஸ் கேட்டேன். அவரது நாடகத்தை வந்து பார்க்க சொன்னார். தொடர்ந்து போனேன். ஒரு கட்டத்தில் எனது ஆர்வத்தை பார்த்து சின்ன சின்ன கேரக்டர் கொடுத்தார். இக்கட்டத்தில்தான் எனக்கு திருமணம் நடந்தது. என் ஆர்வத்தை மனைவியும் புரிந்துக்கொண்டார்.
2001ல் அவருக்கு அரசு ஆசிரியர் பணி கிடைக்க, என் வேலையை ராஜினாமா செய்து முழு நேரமாக சினிமா சான்ஸ் தேட ஆரம்பித்தேன். வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன. இதுவரை 160 படங்களில் நடித்துவிட்டேன். ஏற்கனவே சினிமாவில் 'லொள்ளு சபா' சுவாமிநாதன் நடித்து வருவதால் பெயர் குழப்பத்தை தவிர்க்க ஷார்ம் என்று பெயரை மாற்றிக்கொண்டு எனது அண்ணன் பெயரை சேர்த்துக்கொண்டேன். காமெடியில் முதல் இடத்தில் வருவது எனது இலக்கு. அதை நோக்கி பயணம் தொடரும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE