இந்த செய்தியை கேட்க
பல்லடம்: உணவு, தானியம், காய்கறி, பழங்கள் என, அனைத்திலும் ரசாயனக் கலப்பு அதிகரித்துவிட்டது.

'இயற்கையானது எது?' என்ற விழிப்புணர்வு இல்லாததால், அபாயகர உணவுகளை உட்கொண்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.'தினமும் ஒரு வாழைப் பழம்' சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது'என, டாக்டர்கள் பரிந்துரைப் பதால், பெரும்பாலானோர் தங்களது அன்றாட உணவுபட்டியலில் அதையும் சேர்த்துக்கொண்டுள்ளனர்.

பழம் சாப்பிட்டால் நல்லதுதான், ஆனால், அது இயற்கையாக பழுத்திருக்க வேண்டும்; அதைவிடுத்து, ரசாயனத்தில் பழுத்திருந்தால், 'கேன்சர்' பாதிக்கும் அபாயமுள்ளது என, எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இக்கூற்றை உண்மையாக்கும் விதமாக திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மாணிக்காபுரம் அருகே, ரசாயன வாழைப்பழ குடோனை கண்டுபிடித்து 'சீல்' வைத்துள்ளனர், திருப்பூர் மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள். இது, வேல்முருகன் என்ற வியாபாரிக்கு சொந்தமானது.உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு, இவரது குடோனில் திடீரென நுழைந்து சோதனையிட்டபோது ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர்.

அதற்குமுன் அவர்கள், வாழைக் காய்களை விரைந்து பழுக்க வைப்பதற்காக, ரசாயனம் கலந்த நீரில் அவற்றை ஊறவைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.ஒரு புறம் பச்சை பசேலென வாழைத்தார்கள் குவியல் குவியலாக கிடக்க, மறுபுறம் ரசாயன ஊறலில் நிறம் மாறிய வாழைக் காய்கள் பழுத்த பழங்களைப் போல காட்சியளித்தன. குடோனுக்கு 'சீல்' வைத்த அதிகாரிகள் திருப்பூர் மாவட்டத்திலுள்ள மற்ற பழ குடோன்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
திடீர் சோதனை குறித்து, டாக்டர் விஜயலலிதாம்பிகை கூறுகையில், '' அறுவடைக்குப்பின் வாழைக் காய்களை, காற்றுப்புகாத அறையில் வைத்தால், அதிகபட்சமாக, 10 மணி நேரத்தில் பழுத்துவிடும்; ஆனால், இவர்கள், 'எலிக்ஸிர்' என்ற ரசாயனத்தை நீரில் கலந்து அதில் வாழைக்காய்களை ஊற வைத்து விரைந்து பழுக்கச் செய்கின்றனர்; அதாவது, பழுத்த பழம் போல நிறத்தை மாற்றி விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறான ரசாயன கலப்பு பழங்களைச் சாப்பிட்டால், 'கேன்சர்' பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள், உஷாராக இருக்க வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE