குடியுரிமை சட்டம் நாட்டின் உரிமை!

Updated : டிச 26, 2019 | Added : டிச 21, 2019 | கருத்துகள் (13) | |
Advertisement
புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்தின்படி, அண்டை முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட, வேறு எந்த நாடுகளிலும் அடைக்கலம் புக முடியாத ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு, இந்தியாவில் குடியுரிமை கிடைத்துள்ளது.இதனால், இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கோ அல்லது பிற
உரத்த சிந்தனை

புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்தின்படி, அண்டை முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட, வேறு எந்த நாடுகளிலும் அடைக்கலம் புக முடியாத ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு, இந்தியாவில் குடியுரிமை கிடைத்துள்ளது.இதனால், இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கோ அல்லது பிற சிறுபான்மையின மக்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. ஒரு நாட்டிற்கு, தன் எல்லைகளை பாதுகாக்கவும், எத்தகைய மக்கள், தன் நாட்டில் இருக்க வேண்டும் என முடிவு செய்யவும் உரிமை உள்ளது.அதுபோல, எத்தகைய பிற நாட்டினருக்கு குடியுரிமை வழங்கலாம் என்பதும், சுதந்திர நாட்டின் உரிமை.

மேலும், இந்த புதிய குடியுரிமை சட்டத்தால், அந்த மூன்று நாடுகளின் முஸ்லிம்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஏனெனில், முஸ்லிம்கள் யாரும், பாகிஸ்தான், ஆப்கனிலிருந்து விரட்டி அடிக்கப்படவில்லை. அந்த நாடுகளின் சிறுபான்மையினமாக இருக்கும் ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் மீது, அந்நாடுகளின் அரசுகள் மற்றும் அந்த நாடுகளின் பெரும்பான்மை மக்களால் நடத்தப்பட்ட மதவெறி தாக்குதலுக்கு அஞ்சி, இந்தியாவுக்குள் வந்தவர்களுக்கு, இங்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.இது, மனிதாபிமான நடவடிக்கையே; இதில், மத வேறுபாடு ஏதும் இல்லை.இந்தியா போல, அந்த நாடுகள், தங்களின் சிறுபான்மையின மக்களுக்கு, சமஅந்தஸ்து, மரியாதை, சலுகை அளித்திருந்தால், இந்தியாவில், புதிய குடியுரிமை சட்டம் கொண்டு வரத் தேவையே இருந்திருக்காது. ஆனால், முஸ்லிம் நாடுகள் என அறிவித்து கொண்டுள்ள, பழமைவாத கொள்கைகளை மிகவும் தீவிரமாக பின்பற்றும் பாகிஸ்தான், ஆப்கன் நாடுகளால் விரட்டி அடிக்கப்பட்டவர்கள், அண்டை நாடான, அமைதி நாடான, ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் பிற இனத்தவர் அமைதியாக வாழும், இந்தியாவுக்குத் தானே வர முயற்சிப்பர்!

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில், நீண்ட கால பிரச்னையாக இருக்கும், வங்கதேச முஸ்லிம்களின் சட்ட விரோத குடியேற்றத்தை தடுப்பதற்கும் தான், இந்த புதிய சட்டம் வழி வகை காண்கிறது. ஆனால், சட்டத்தின் அம்சங்களை புரிந்து கொள்ளாமல், 'முஸ்லிம்களைமத்திய, பா.ஜ., கூட்டணி அரசு வேறுபடுத்தி பார்க்கிறது' என்ற, எதிர்க்கட்சிகளின் பிரசாரம் ஏற்புடையது அல்ல.வங்கதேசத்திலிருந்து மத ரீதியான துன்புறுத்தலுக்கும், இன ரீதியான கொடுமைகளுக்கும் ஆளான லட்சக்கணக்கான ஹிந்துக்கள், வட கிழக்கு மாநிலங்களில் குடியேறியுள்ளனர். குடியுரிமை இன்மையால் அவர்களுக்கு எவ்வித அடிப்படை வசதியும் ஏற்படுத்தி தர இயலாத சூழ்நிலை இருந்தது. இதனால் அவர்கள், பிச்சைக்காரர்களை விட, கேவலமான வாழ்க்கை வாழ வேண்டி இருந்தது. இந்த புதிய சட்டத்தின்படி, அவர்களின் வாழ்க்கையில் ஒளிஏற்றப்பட்டுள்ளது.

இது தான், வட கிழக்கு மாநிலங்களில் உள்ள, சிலரின் எதிர்ப்புக்கும் காரணமாக உள்ளது. 'ஹிந்துக்கள் என்பதால், கோடிக்கணக்கானோரை, வட கிழக்கு மாநிலங்களில் குடியமர்த்த, மத்திய அரசு முயல்கிறது' என, அங்கும் பொய் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.ஆனால் உண்மையில், 'ஆறு லட்சம் பேர் தான், அங்கு குடியுரிமை பெற உள்ளனர்' என, அசாம் மாநில அமைச்சர் கூறுகிறார்.நிலைமை இவ்வாறு இருக்க, பா.ஜ.,வுக்கு எதிரான, நாட்டின் வளர்ச்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் மனநிலையில் உள்ள, காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், துாண்டி விட்ட போராட்டங்கள், நாட்டின் சில கல்லுாரிகளில், மாணவர்களால் நடத்தப்படுகின்றன. இதற்கு, அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளதால், நாடே தீப்பற்றி எரிகிறது என்பது போன்ற தோற்றத்தை, விபரம் தெரியாத சில ஊடகங்களும் மேற்கொள்கின்றன. மேலும், போராட்டங்களில் ஈடுபடுவோர், நடுநிலையான மாணவர்களே இல்லை. குறிப்பிட்ட மதம், கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களே, வன்முறை போராட்டங்களில் ஈடுபடுபவர்கள். எனினும், ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் மற்றும் இலங்கை தமிழ் அகதிகளை, இந்த சட்டத்தில், கணக்கில் எடுத்துக் கொள்ளாததற்கு தகுந்த காரணத்தை, மத்திய அரசு கூறி இருக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில், ஒரு புதிய விஷயம் தென்படுகிறது. குடியுரிமை சட்டத்தின் சிறப்பு அம்சங்களை, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரும் தான் பேசுகின்றனரே தவிர, அமைச்சரவை சகாக்கள், பா.ஜ., தலைவர்கள் அநேகமாக பேசுவதில்லை. இதைப் பார்க்கும் போது, அவர்களுக்கும், இந்த சட்டத்தின் அம்சங்கள் புரியவில்லையோ என்றசந்தேகம் ஏற்படுகிறது. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அல்லது இரட்டை குடியுரிமைக்கு இது வரை எந்த முயற்சியும் எடுக்காத, தமிழகத்தின் முன்னாள் ஆட்சியாளர்களான, தி.மு.க., இப்போது அந்த விவகாரத்தை ஊதி பெரிதாக்கி வருகிறது.இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கினால், அவர்களால், இலங்கைக்கு திரும்பிச் செல்லவே முடியாது; அவர்களின் சொத்துக்கள், பிறரால் ஆக்கிரமிப்பு செய்யப்படும் நிலை ஏற்படும். இந்த உண்மையை, தமிழகத்தின் எதிர்க்கட்சியினர் புரிந்து கொள்ளாமல், 'தமிழர்களையும், முஸ்லிம்களையும், மோடி அரசு புறக்கணிக்கிறது' என, பிரசாரம் செய்கின்றனர்; கலவரத்தை துாண்டிவிடுகின்றனர்.

எனினும், மத்திய அரசு, இந்த விவகாரத்தில் சற்று அவசரப்பட்டு விட்டது அல்லது சில அம்சங்களை கண்டுகொள்ள தவறி விட்டது என்பதிலும் ஐயமில்லை.ஒரு சட்டம் கொண்டு
வந்தால், அது மக்களுக்கு எந்த விதத்தில் பயனளிக்கும் என்பதை யோசிக்கும் மோடி அரசு, அந்த சட்டத்தை, எதிர்க்கட்சிகள் எப்படி திசை திருப்பும்; அதற்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது பற்றியும் யோசிக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்வதே இல்லை. இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். துாய்மை இந்தியா திட்டம், அருமையான திட்டம். உலக நாடுகள் பலவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும் நிலையில், நம் நாட்டின் நிலை வேதனை அளிக்கும் நிலையில் இருப்பதை கண்ட பிரதமர், அந்த திட்டத்தை துவக்கி வைத்தார்.
ஆனால், 'இதற்கு ஒரு பிரதமர் தேவையா; சுத்தம் செய்யும் வேலையை துப்புரவு தொழிலாளி செய்து விட்டுப் போகிறான்...' என்று, காங்கிரஸ் மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகள் கிண்டலடிக்கின்றன.

அனைத்து நிதி சேவைகளுக்கும், 'ஆதார்' அடையாள எண் கட்டாயம்; வங்கிக் கணக்கில் மானியங்கள் வரவு வைத்தல் போன்றவை, மக்களிடம் முதலில் சலிப்பை ஏற்படுத்தினாலும்,
போகப் போக அதன் பயன்களை, மக்கள் உணரத் துவங்கி விட்டனர்.ஆதார் எண்ணை வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைப்பதற்கும், 'பான்' எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன் இணைப்பதற்கும், மக்கள் அலைக்கழிக்கப்பட்டது என்னவோ உண்மை தான். எனினும், அதனால் ஏற்பட்ட நன்மைகளை, மக்கள் தற்போது உணர்ந்து கொண்டதும் உண்மை தான்.
அது போல, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., அமல் போன்றவற்றால், நாட்டு மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதும் உண்மை தான்.

நாட்டின் நலன் கருதி எடுத்த நடவடிக்கையாக இருந்தாலும், இந்த இரு விவகாரங்களில், மத்திய அரசு அவசரப்பட்டிருக்கக் கூடாது. ஜி.எஸ்.டி., அமல் விஷயத்தில், சாமானிய மக்களின் பாதிப்பை, மோடி அரசு கருத்தில் கொள்ளவில்லை.பண மதிப்பிழப்பால், வரி ஏய்ப்பு செய்த போலி நிறுவனங்கள் ஒழிக்கப்பட்டாலும், சிறு, குறு தொழில் செய்து, பிழைப்பு நடத்தி வந்த லட்சக்கணக்கான சாதாரண மக்கள், பெரும் பாதிப்புக்கு உள்ளானதை மறுக்க முடியாது. ஜி.எஸ்.டி.,யால் ஏழை மக்கள் செய்து வந்த, ஏராளமான குடிசைத் தொழில்கள் நலிவடைந்தன என்பதும் உண்மையே. அதுபோல, பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், நடுத்தர மக்களின் வங்கி வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தை குறைத்ததையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆளும், பா.ஜ., அரசிடம் உள்ள, இத்தகைய குறைபாடுகளை காங்கிரஸ் சுட்டிக் காட்டினால் அதில் தவறில்லை. ஆனால், பா.ஜ., அரசின் அனைத்து திட்டங்களையும் எதிர்ப்பது ஒன்றே கொள்கையாக மேற்கொள்வது, எதிர்க்கட்சிகளுக்கு அழகல்ல.

தற்போது வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தால், சட்ட விரோதமாக குடியேறியோரில், சமூக விரோதிகளையும், பயங்கரவாதிகளையும் அடையாளம் கண்டு விடலாம். எனினும், இந்த சட்டத்தை திருத்துவதற்கு முன், ஆளும், பாஜ., அரசு, வட கிழக்கு மாநில மக்களின், பொதுவான கருத்தை கேட்டு அறிந்திருக்க வேண்டும். இந்த சட்ட திருத்தம் கொண்டு வருவதன் பலனை, விரிவாக விளக்கி, பிரசாரம் செய்திருக்க வேண்டும்; அந்த மக்களின் பயத்தை போக்கியிருக்க வேண்டும். அதன் பிறகே, சட்ட திருத்தம் கொண்டு வந்திருக்க வேண்டும். இப்படிச் செய்திருந்தால், எதிர்க்கட்சிகளின் வியூகம், தவிடு பொடியாகி இருக்கும். எனவே, குடியுரிமை சட்ட திருத்தம் விவகாரத்தில், மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, அவசரப்பட்டு விட்டது என்பதே உண்மை. பார்லிமென்டில் சட்டம் நிறைவேற்றி விட்டால் போதும் என்ற மத்திய அரசின் எண்ணம், எதிர்க்கட்சிகளின் போராட்டம் மற்றும் பிரசாரங்களால் தவிடுபொடியாகியுள்ளது.

பார்லிமென்டில் இந்த சட்டத்தை தடுக்க முடியவில்லையே என்ற விரக்தியில், எதிர்க்கட்சிகள், பயங்கர கோபத்தில், குடியுரிமை மசோதாவை எதிர்க்கின்றன. இதனால், உண்மை அடிபட்டு போய், பொய் தோற்றம் மேலோங்குகிறது.பார்லிமென்டில், எதிர்க்கட்சிகளின் கைகள் ஓங்காமல் பார்த்துக் கொண்ட, பா.ஜ., அரசு, இந்த விஷயத்தில் கோட்டை விட்டது என்பதே உண்மை.
நாட்டின் வளர்ச்சிக்காக, பல அதிரடி திட்டங்களை கொண்டு வரும் அரசு, சிக்கலான விஷயங்களில் முடிவெடுப்பதற்கு முன், மக்கள் கருத்தை கேட்டிருக்க வேண்டும்; சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், எதிர்க்கட்சிகள், பொய் பிரசாரம் செய்ய முடியாமல் முடங்கி இருக்கும். இதற்கு முன், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்., முக்கிய பிரச்னைகளை, 'ஆற' போட்டதற்கான காரணத்தையும், அதற்கான படிப்பினையையும், மோடி அரசு, இப்போது நிச்சயம் புரிந்திருக்கும்.

பார்லிமென்டில் பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதற்காக, சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தில் உண்மை இருக்கிறதோ என, எண்ணத் தோன்றும் வகையில், மத்திய அரசின் செயல்பாடு அமைந்து விட்டது. 'முத்தலாக்' சட்டம்,காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தியில் ராமர் கோவில் போன்ற முக்கிய விவகாரங்களில் வெற்றி பெற்ற மத்திய அரசு, குடியுரிமை மசோதாவில் அடி வாங்கியுள்ளது. அந்த சட்டம்நல்லது தான்; நாட்டிற்கு தேவையானது தான். அதற்கான ஆதரவை, மக்களிடம் பெறத் தவறியது, மோடி அரசுக்கு உண்மையில் பின்னடைவு தான்!

வ.ப.நாராயணன்

சமூக ஆர்வலர்

தொடர்புக்கு:

இ - மெயில்: vbnarayanan60@gmail.com

மொபைல் எண்: 95510 13773.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (13)

Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
29-டிச-201911:57:33 IST Report Abuse
Shaikh Miyakkhan உங்களது கட்டுரையில் 1 .சட்டத்தின் அம்சங்களை புரிந்து கொள்ளாமல், 'முஸ்லிம்களை மத்திய, பா.ஜ., கூட்டணி அரசு வேறுபடுத்தி பார்க்கிறது' என்ற, எதிர்க்கட்சிகளின் பிரசாரம் ஏற்புடையது 2 . குடியுரிமை சட்ட திருத்தம் விவகாரத்தில், மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, அவசரப்பட்டு விட்டது என்பதே உண்மை 3 .பார்லிமென்டில் பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதற்காக, சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தில் உண்மை இருக்கிறதோ என, எண்ணத் தோன்றும் வகையில், மத்திய அரசின் செயல்பாடு அமைந்து விட்டது உண்மையை ஒத்து கொண்டு உள்ளீர்கள் .அப்படி பார்க்கையில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் சரியானதே .அரசுக்கு மிருக பலம் இருப்பதனால் எந்த தவறையும் செய்யலாம் என்ற எண்ணத்தால் தான் இந்த நிலைமை.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
28-டிச-201908:30:18 IST Report Abuse
spr சிறப்பான கருத்துக்களே பாராட்டுகள் ஆனால், இந்தக் கருத்துக்களை சொல்பவர் இப்படி திருமண் இட்ட முகத்துடன் சொன்னால் அது பாஜக ஆதரவாளர் பிரசாரம் என்றுதான் பார்க்கப்படும் இன்று குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து மக்களிடம் பிரசாரம் செய்ய முன்வரும் அரசு இதனை முன்பே செய்திருக்க வேண்டும் சிறுபான்மையினமாக இருக்கும் ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் மீது, அந்நாடுகளின் அரசுகள் மற்றும் அந்த நாடுகளின் பெரும்பான்மை மக்களால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அஞ்சி, இந்தியாவுக்குள் வந்தவர்களுக்கு, இங்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது இப்படி வருபவர்களுக்கு ஆதரவு தர அந்த மதத்து மக்கள் அதிகமுள்ள நாடு என்பதால் இந்தியாவுக்கு அந்த தார்மீக கடமை இருக்கிறது மற்ற நாடுகள் அவர்களுக்கு ஆதரவு தர வாய்ப்பில்லை பிற நாட்டு அரசுகளுடன் மோதல் போக்கைக் கையாளும் (இலங்கைத் தமிழர் ரோஹிங்யா முஸ்லீம்) மக்களுக்கு குடியுரிமை தந்தால் வருங்காலத்தில் இந்தியா போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தரும் ஒரு நாடாக அமைதியை விரும்பும் பிற நாடுகள் வெறுக்கும் நாடாக மாறும். இந்த நாட்டில் அகதிகளாக வாழ விரும்பாத இவர்களின் சொந்த நாட்டு உரிமை பறிக்கப்படும் ஆனால் மோடி அரசு பண மதிப்பிழப்பு, ஜி எஸ் டி, நீட் தேர்வு , முத்தலாக் தடை எனப் பல நல்ல திட்டங்களை முன்னேற்பாடுகள் தக்க கட்டமைப்புக்கள் இல்லாமல் மக்களை அதற்காகத் தயார் செய்யத் தக்க பிரசாரம் செய்யாமல் அதிரடியாகச் செய்வதால், எதிர்க்கட்சிகள் மக்களைக் குழப்புகின்றன ஆனால் காலத்தின் கட்டாயம் இந்த செயல்களை யாரேனுமொருவர் நாட்டின் நெடுநாள் நலம் கருதிச் செய்தாக வேண்டும் காங்கிரஸ் கட்சிக்கு அந்தத் துணிச்சலில்லை. ஒருவேளை முரட்டு மோடி பிரதமராக இருந்து திரு சிதம்பரம் உள்துறை அமைச்சராகவோ நிதியமைச்சராகவோ இருந்திருந்தால் அவரும் மேலும் அதிரடியாக இதனைச் செய்திருப்பார். முரட்டுத்தனமாக செயல்படுவதில் அவரும் மோடி மற்றும் அமித்ஷாவிற்கு சற்றும் சளைத்தவரில்லை என்பது அவர் காலத்திலேயே இவை உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்களே என்பதனை அறிந்தவர்கள் உணர்வார்கள் ஆனால் அவர் அதிர்ஷ்டம் அவருக்கு மன்மோகன் சிங் போல பிரதமர்தான் கிடைத்தார். மோடி அரசு செய்யும் இந்தச் செயலின் பலனை பின் வரும் ஆளும்கட்சிகள் அனுபவிக்கும் இவை எதுவும் மாற்றியமைக்கப்பட போவதில்லை ஆனால்
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
25-டிச-201912:03:43 IST Report Abuse
மலரின் மகள் மக்கள் க்ரெளத்தை கேட்கவேண்டும் என்றால் எப்படி அனைத்திற்கும் மக்கள் கருத்தை கேட்டு தான் ஆகவேண்டும் என்றால் அரசு இயந்திரம் இயங்காது அல்லவா? பிரெக்ஸிட் மக்கள் பற்றி மக்கள் கருத்தை கேட்டிருக்கவே கூடாது என்று அப்போதும் இப்போதும் கூறுகிறார்களே, அல்லவா? மக்கள் கருத்துக்களை தெரிந்து கொள்வது தவறில்லை ஆனால் மக்கள் சரியாக புரிந்து அதன் சாதக பாதகங்களை அறிந்து நடுநிலையாக பெரும்பான்மையானோரால் கருத்தை தர முடியுமா? கிரீஸ் பிரச்சினையில் மக்களின் ஒட்டு பெறப்பட்டது அதை அந்த அரசு ஏற்கவில்லை, அதை ஏற்றிருந்தால் நாடு திவாலா நிலையிலிருந்து மீண்டெழ முடியாமால் அதலபாதாளத்திற்கு சென்றிருக்கும். மக்கள் கருத்துக்கள் பெரும்பாலும் தனிநபர், தனிக்குழுக்கள் நலன் சார்ந்ததாகத்தானே இருக்கிறது? சிறப்பான அட்மினிஸ்டரேஷன் என்பதில் சிலவற்றை துணிந்து எடுத்து விடவேண்டும், அதன் விளைவுகள் எப்படி தீர்க்கப்படவேண்டும் என்றும் இப்படித்தான் அணுக வேண்டும் பிரைச்சினைகளை என்றும் அரசு அறிந்து வைத்திருந்து அதன் வழி நடக்கவேண்டும், என்பதை நிர்வாகத்தினர் புரிந்து தான் வைத்திருக்கிறார்கள். உயிரிழப்பும் பொருள் சேதமும் இல்லாத போராட்டங்கள் வரவேற்கப்படலாம் அதனால் பலருக்கு தெளிவும் அறிவும் பிறக்கும். கலவரம் செய்யப்படுவதற்கான போராட்டங்களை போலீஸ்காரர்கள் புரிந்து கொண்டு களை எடுக்கும் தருணமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். மாநில அரசுகளே ஊக்குவிக்கும் போராட்டங்கள், தேர்தலில் புரியவைக்கப்படவேண்டிய ஒன்று அந்த அரசிற்கு. சில தலைவர்கள் போராட்டத்திற்கான பிரச்சினைகளை தவறாக புரிந்து கொண்டு களம் இறங்கி விடுகிறார்கள். பெரும்பாலான மாநில தலைவர்களின் போராட்டங்களில் வெளிப்படுவது, போராட்டம் செய்தால் தான் ஒட்டு வங்கியை தக்கவைத்து கொள்ளமுடியும் என்று அவர்கள் அனுமானிப்பதாகவே இருக்கிறது. தொண்டர்களை (?குண்டர்களை) தூண்டிவிடுவது என்பது தான் பிரச்சினையாக இருக்கும். அது அவசியம் என்று நினைக்கும் தலைவர்களை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவது என்பதை பெரும்பாலும் அரசாங்கங்கள் தெரிந்துவைத்திருக்கவில்லை ஜனநாயக நடைமுறையில் என்பது புரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X