வேலை நேரத்தில் அதிகாரி லீலை... சேலைக்கு விரிக்கிறாரு வலை!| Dinamalar

வேலை நேரத்தில் அதிகாரி லீலை... 'சேலை'க்கு விரிக்கிறாரு வலை!

Updated : டிச 24, 2019 | Added : டிச 24, 2019 | கருத்துகள் (1)
Share
வீட்டு வராண்டாவில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை படித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.''அக்கா, ஸ்வீட் எடுத்துக்குங்க,'' என்றபடி, மைசூர் பா பாக்சை நீட்டினாள் மித்ரா.''என்னப்பா, என்ன விசேஷம்; ரொம்ப ஜாலி மூடுல இருக்க போலிருக்கே,''''ஒண்ணுமில்லக்கா... வீட்ல ட்ரை பண்ணினேன், அவ்வளவுதான்...'' என்றவாறு...''எட்டிமடையில இருக்குற எல்லை மாகாளியம்மன் கோவில்ல கொஞ்ச நாளைக்கு
 வேலை நேரத்தில் அதிகாரி லீலை... 'சேலை'க்கு விரிக்கிறாரு வலை!

வீட்டு வராண்டாவில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை படித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.''அக்கா, ஸ்வீட் எடுத்துக்குங்க,'' என்றபடி, மைசூர் பா பாக்சை நீட்டினாள் மித்ரா.''என்னப்பா, என்ன விசேஷம்; ரொம்ப ஜாலி மூடுல இருக்க போலிருக்கே,''''ஒண்ணுமில்லக்கா... வீட்ல ட்ரை பண்ணினேன், அவ்வளவுதான்...'' என்றவாறு...''எட்டிமடையில இருக்குற எல்லை மாகாளியம்மன் கோவில்ல கொஞ்ச நாளைக்கு முன்னாடி கால்நடை திருவிழா நடந்துச்சு; ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு சொந்த ஊராம். மூவேந்தர்களும் கலந்துக்கிட்டாங்க.
விழாவுக்கு வந்தவங்க எல்லோரும் ஆச்சரியமா பார்த்தாங்களாம்,''''அப்படியா, ஒருத்தரு வெளிநாட்டுல இருந்தாரே. எப்ப, நம்ம நாட்டுக்கு திரும்புனாரு,''''அதெல்லாம் ரொம்ப நாளாச்சு; அண்ணனை போல அவரும் சமூக விழாக்கள்ல கலந்துக்க ஆரம்பிச்சிட்டாரு,''''ஓ... அப்படியா, கார்ப்பரேஷன் ஆபீசுல உதவி கமிஷனர் அந்தஸ்துல இருந்த அதிகாரி, முறைகேடா பணி நியமனம் வாங்கிட்டாருங்கிற குற்றச்சாட்டுல, ஒரு வருஷத்துக்கு முன்னாடி சேலத்துக்கு துாக்கியடிச்சாங்களே. அவரு மறுபடியும் கோயமுத்துாருக்கே திரும்பி வந்துட்டாராமே,''''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன்.
கார்ப்பரேஷன்ல 'போஸ்டிங்' பஞ்சாயத்து ஓடிட்டு இருக்கறதுனால, 'வெயிட்டிங்' லிஸ்டுல வச்சிருந்தாங்க. அன்பானவரின் ஆதரவு இருக்கறதுனால, 'சென்ட்ரல் ஜோன்' அதிகாரிக்கு பதவி தப்பிச்சிடுச்சு. 'லேடி' அதிகாரியை, 'ஸ்மார்ட் சிட்டி' நிறுவனத்துல புது பதவி உருவாக்கி, நியமிச்சிருக்காங்க.
சேலத்துல இருந்து வந்தவருக்கு, நிர்வாக பொறுப்பு கொடுத்திருக்காங்க,''''யாரோ 'ஸ்டே' ஆர்டர் வாங்கியிருக்கறதா கேள்விப்பட்டேனே...''''இன்ஜி., செக்சன்ல ஒரு அதிகாரிக்கு மூணு பதவி கொடுத்திருக்காங்க. இல்லாத பதவிக்கு எப்படி அதிகாரி நியமிக்கலாம்னு சொல்லி, ஞானமுள்ள இன்ஜினியர் தடையுத்தரவு வாங்கியிருக்காரு. அந்த தடையை உடைக்கப் போறாங்களாம்,''நாளிதழ் ஒன்றில் வந்திருந்த உள்ளாட்சி தேர்தல் கோமாளித்தனம் பற்றியை செய்தியை படித்த சித்ரா, ''அன்னுார் பக்கத்துல வெள்ளானைப்பட்டி ஊராட்சியில, எப்படியாவது ஜெயிக்கணுங்கிறதுக்காக, வீட்டுக்கு வீடு 'பூட்டு சாவி' கொடுக்குறாங்களாம்...''''இதெல்லாம் சாதாரண விஷயம், சூலுார் முத்துக்கவுண்டம்புதுார் ஊராட்சியில ஒரு தரப்பு செம்பு சால், குண்டா, தட்டம், இன்னொரு தரப்பு குத்துவிளக்கு, அரை லிட்டர் பால் குக்குர், தட்டம் கொடுத்திருங்காங்க. நீலாம்பூர்ல அரிசி, அஞ்சு லிட்டர் எண்ணெய், தோசைக்கல் கொடுத்திருக்காங்க.
தெனமும் ஏதாவது ஒரு குரூப் ஓட்டு கேட்டு வீடு தேடி வர்றாங்க,''''உள்ளாட்சி தேர்தல்ல ஆளுங்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் கோஷ்டி பூசல் உச்சத்துல இருக்காமே,''''ஆமாக்கா, துடியலுார் அசோகபுரம் ஊராட்சியில அ.தி.மு.க., ஆதரவுல ரெண்டு கோஷ்டியா நிக்குறாங்க. ஒரு கோஷ்டிக்கு எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி சப்போர்ட் செய்றாரு. இன்னொரு கோஷ்டிக்கு கட்சி ஒன்றிய செயலாளர் துரைசாமி ஆதரவு கரம் நீட்டியிருக்காராம். இதே மாதிரி, தி.மு.க., ஆதரவிலும் ரெண்டு வேட்பாளர் போட்டியிடுறாங்க.
ஓட்டு பிரியறதுக்கு வாய்ப்பு இருக்கறதுனால, திக்...திக்குனு இருக்காங்களாம்...''''அதெல்லாம் சரி, ஒசந்த இடத்துல இருக்குற அந்த அதிகாரி, தொட்டு தொட்டு பேசுறாராமே... லேடீஸ் ரொம்பவே சங்கடப்பட்டு நெளியுறதா கேள்விப்பட்டேன்,''''அதுவா, கலெக்டர் ஆபீசுல, துணைக் கலெக்டர் அந்தஸ்துல அந்த அதிகாரி இருக்காரு. தனக்கு கீழே வேலைபார்க்குற லேடீஸ் யாராவது பைல் எடுத்துட்டு வந்தா, சந்தேகம் கேக்குற மாதிரி தொட்டு தொட்டு பேசுறாராம்; தடவுறாராம். பொதுமக்கள் முன்னாடியே, சில்மிஷ வேலையில ஈடுபடுறதுனால, லேடி அலுவலர்கள் தவிக்கிறாங்க,'' என்றாள்.
இடையிடையே போன்கால் வர, இந்த ஆளோட இம்சைய தாங்க முடியலையே என்றபடி, போனை ஆப் செய்த மித்ரா, ''ஊரே சேர்த்து எதிர்த்தும் கூட, 'பர்மிஷன்' கொடுத்திட்டாங்களாம்,'' என, நோண்டினாள்.''ஆமாப்பா, செட்டிபாளையம் பக்கத்துல ஓராட்டுக்குப்பைங்குற ஊர்ல கல் குவாரிக்கு அனுமதி கொடுத்துருக்காங்க. குடியிருப்பு, விவசாய நிலம், கோழிப்பண்ணை இருக்குன்னு சொல்லி, ஊர்க்காரங்க 'அப்ஜக்ஷன்' பண்ணிருக்காங்க.
எல்லாத்தையும் தாண்டி, இதுக்கு அனுமதி கெடைச்சுருக்கு. பின்னணில, யாரோ முக்கிய புள்ளிங்க இருப்பாங்கன்னு ஊர் மக்கள் சந்தேகப்படுறாங்க. கலெக்டர் ஆபீஸ்ல பெட்டிஷன் கொடுத்துட்டு, பொலம்பிட்டு போயிருக்காங்க,''''புலம்பல்னு சொன்னதும், எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. பி.எச்டி., முடிச்சவங்களும் புலம்பி போனதா சொன்னாங்களே,'' என, அடுத்த சப்ஜெக்ட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.''ஆமாப்பா, பாரதியார் யுனிவர்சிட்டியில பட்டமளிப்பு விழா நடந்துச்சு. பி.எச்டி., பட்டதாரிகள், கவர்னரிடம் பட்டம் வாங்கலாம்னு நினைச்சிருந்தாங்க. ஆனா, இளங்கலை, முதுகலை பிரிவுல அதிக மார்க் வாங்குனவங்கள, கவர்னர் கையால பட்டம் வாங்க வச்சாங்க; பி.எச்டி., பட்டதாரிகள வாங்க விடலை. விழா முடியுற சமயத்துல, உயர்கல்வி துறை அமைச்சருடன் போட்டோ எடுத்துக்கலாம்னு அறிவிச்சிருக்காங்க.
அதை விரும்பாதவங்க, புறக்கணிச்சிட்டு போயிட்டாங்க,''''ஓ... அப்படியா,'' என்றபடி வீட்டுக்குள் சென்ற மித்ரா,''ரொம்ப கடுமையா வேலை வாங்குனாலும், போலீஸ்காரங்களை கமிஷனர் பாராட்டுனாராமே...'' என, இழுத்தாள்.''அதுவா, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்துனாங்கள்ல.
போலீஸ் தரப்புல பாதுகாப்பு ஏற்பாடு பலமா செஞ்சிருந்தாங்க. அசம்பாவிதம் இல்லாம அமைதியா முடிஞ்சதுனால, பாராட்டு தெரிவிச்சிருக்காரு,'' என்ற சித்ரா, ''நைட் டியூட்டி போடுறதுனால, மன உளைச்சலோடு இருக்காங்களாமே'' என, பொடி வைத்தாள்,''உண்மைதான்ங்கா, அரசு போக்குவரத்து கழக 'டிப்போ'கள்ல, தொகுப்பூதிய அடிப்படையில், 'அப்ரன்டிஸ்' பணிக்கு ஊழியர் நியமிப்பாங்க, 'அப்ரன்டிஸ்' பணி காலம் முடிந்து ரெண்டு வாரமாச்சு; இன்னும் புதுசா ஆள் எடுக்கலையாம்; இருக்கற ஊழியர்கள் 'டபுள்' வேலை பார்க்குறாங்களாம்.''லீவும் கொடுக்கறதில்லை; தொடர்ந்து நைட் டியூட்டி பார்க்கச் சொல்றாங்களாம்.
வழக்கமா ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஆட்கள தேர்வு செஞ்சிருவாங்களாம். இதுவரைக்கும் ஆள் எடுக்காததால, சிக்கன நடவடிக்கையா இருக்குமோன்னு ஊழியர்கள் கிசுகிசுக்குறாங்க,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.மொபைல் போனுக்கு வந்திருந்த, 'வாட்ஸ்ஆப்' பதிவுகளை நோண்டிக் கொண்டிருந்த மித்ரா, ''ஆபீசரே நேரடியா 'பீல்டு விசிட்' போறதுனால ஊழியர்கள் பீதியில இருக்காங்களாம்,'' என, கொக்கி போட்டாள்.''எந்த டிபார்ட்மென்ட்டுப்பா, அப்படிப்பட்ட ஆபீசரை ஒழுங்கா வேலை செய்ய விட மாட்டாங்களே,''''கலெக்டர் ஆபீசுல இருக்கற, 'தங்கமான' அதிகாரிதான் அவரு. திருமண உதவி தொகை கேட்டு யாரு விண்ணப்பம் செஞ்சாலும் வீட்டுக்கு போயி விசாரிக்கணும். சில இடங்கள்ல, கரன்சி வாங்கிட்டு, விண்ணப்பதாரருக்கு சாதகமா அறிக்கை கொடுக்குறாங்களாம்.

அதனால, நேரடியா 'பீல்ட்டு'க்கு போறாராம்; களப்பணியாளர்கள் ஒவ்வொருத்தரும் கதிகலங்கி இருக்காங்களாம்,'' என, என்றபடி, 'டிவி'யை 'ஆன் செய்தாள் மித்ரா.போத்தனுாரில் வாடகை கார்களை கடத்தி, உரிமையாளர்களை பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் கடத்தல் கும்பலுக்கும், 'கிரைம்' எஸ்.ஐ.,க்கும் உள்ள ரகசிய கூட்டு குறித்த செய்தி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. இதைப்பார்த்த சித்ரா ''அக்கா... அடுத்தவாரம் விளக்கமா சொல்றேன்...'' என்றவாறு நடையைக்கட்டினாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X