'கொழுத்த' போலீசை வெளுத்த ஐ.ஜி.,!

Updated : டிச 24, 2019 | Added : டிச 24, 2019 | |
Advertisement
பெருமாநல்லுாரில் உள்ள ஒரு தோழியின் வீட்டுக்கு சித்ராவும், மித்ராவும் சென்று கொண்டிருந்தனர். அதே நேரம், உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் களை கட்டியிருந்தது. எங்கு பார்த்தாலும், 'உங்கள் பொன்னான ஓட்டுகளை....' என்ற வசனம் ஒலித்து கொண்டிருந்தது.அதைக்கேட்டதும், ''அப்பப்பா... வர்ற வழி நெடுகிலும், எலக்ஷன் பிரசாரம் தாங்க முடியலைடி. இன்னும் ஒரு வாரம் பொறுத்துதான் ஆகணும்போல''
 'கொழுத்த' போலீசை வெளுத்த ஐ.ஜி.,!

பெருமாநல்லுாரில் உள்ள ஒரு தோழியின் வீட்டுக்கு சித்ராவும், மித்ராவும் சென்று கொண்டிருந்தனர். அதே நேரம், உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் களை கட்டியிருந்தது. எங்கு பார்த்தாலும், 'உங்கள் பொன்னான ஓட்டுகளை....' என்ற வசனம் ஒலித்து கொண்டிருந்தது.

அதைக்கேட்டதும், ''அப்பப்பா... வர்ற வழி நெடுகிலும், எலக்ஷன் பிரசாரம் தாங்க முடியலைடி. இன்னும் ஒரு வாரம் பொறுத்துதான் ஆகணும்போல'' என்றாள் சித்ரா.''

ஆமாங்க்கா... இதுக்கே இப்படின்னா... கட்சிக்குள்ள நடக்குற 'உள்குத்து' வேலைகளை கேட்டீங்கன்னா, தலை 'கிறுகிறு'ன்னு, சுத்திடும்,''''அது எங்கே... என்ன பிரச்னை?''''மங்கலத்தில் என்ன பிரச்னையோ தெரியலை, இலை கட்சி கூட்டணி வேட்பாளர் நோட்டீசில், தாமரை கட்சி தலைவர்கள் மட்டும் 'மிஸ்ஸிங்' மத்த தலைவர் படமெல்லாம் இருக்கு. இது அந்த கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திடுச்சு,''''இதைப்பத்தி, கட்சி மேலிடத்தில் புகார் பண்ணலாமுன்னு, தாமரைக்கட்சிக்காரங்க முடிவு செஞ்சிருக்காங்க,''

''ஜெயிக்கறதுக்கு, என்ன வேணுமின்னாலும் செய்வாங்க மித்து,'' என்ற சித்ரா, ஓவர்டேக் எடுத்து சென்ற ஜீப்பை பார்த்து, ''பறக்கும் படை வண்டியா?'' கேள்வி கேட்டாள்.''ஆமாங்க்கா... அப்படித்தான் எழுதியிருந்துச்சு?''''சட்டமன்ற தேர்தலில், எக்கச்சக்கமான பணத்தை பிடிச்சாங்க. இந்த தேர்தலில், ஒத்த ரூபாயை கூட பிடிக்கலையே? பறக்கும் படையினர், எங்காவது குறட்டை விட்டு துாங்கிடறாங்களா?''

''அவங்க எங்கே போறாங்க, வர்றாங்கன்னு, மாவட்ட அதிகாரிக்கு கூட தெரியறதில்லையாம்...! அக்கா, இதுகூட பரவாயில்லை. எலக்ஷன் வேலைக்கு, கார் ஓட்ட யாருமே வரலையாம், தெரியுங்களா?''''ஏன்... பணம் தரலையா?''''கரெக்ட்டுங்க்கா... லோக்சபா தேர்தலுக்கு, மண்டல அதிகாரிகளுக்கு ஓட்டின கார் வாடகை இதுவரைக்கும் தரலையாம். அதனால, உள்ளாட்சிக்கு, பலரும் பின்வாங்கிட்டாங்களாம். அதுக்கப்பறம்,ஆர்.டி.ஓ., அதிகாரியை வைச்சு, தேர்தல் வேலைக்கு வர வச்சாங்களாம்,''

''இதுக்காவது, ஒழுங்கா வாடகை கொடுத்தா சரிதான்,'' என்ற சித்ரா, ''ஏன் மித்து, இந்த எலக்ஷனில், பம்பர கட்சியோட சவுண்டையே காணோமே,'' என்றாள்''ஆமாங்க்கா... நானும் அவங்களை மறந்தே போயிட்டேன். சூரியக்கட்சி கூட்டணியில, மத்த கட்சிகளை காட்டிலும், ரொம்ப ரொம்ப குறைவாத்தான் 'சீட்' கொடுத்திருக்காங்க, அதிலயும், மாவட்டத்தில் இருக்கற 170 யூனியன் வார்டில், வெறும் மூணே சீட்தானாம்,''

''இதை வெச்சிட்டு, சமூக வலைதளங்களில், இஷ்டத்துக்கு 'மீம்ஸ்' வருதாம்,''''எதனால, இவ்ளோ குறைவான 'சீட்'களுக்கு எப்படி சம்மதிச்சாங்கன்னு தெரியலை. எல்லாம் மேலிடத்து கட்டளையாக இருக்கும்,''என, சித்ரா சொன்ன போது, ஆம்புலன்ஸ் 'சைரன்' ஒலியுடன் கடந்து சென்றது.''அக்கா... இதை பார்த்ததும், மங்கலம் பக்கத்தில, வாபஸ் வாங்குன வேட்பாளர் தற்கொலை முயற்சி நினைவுக்கு வந்திடுச்சு?''

''அப்படியா... என்னாச்சு?''''மங்கலம் ஊராட்சியில் ஒரு வார்டில், போட்டியிட்ட இலை கட்சி விசுவாசிய, 'வாபஸ்' வாங்கிடுன்னு, எம்.எல்.ஏ., சைடில், பயங்கரமா பிரசர் கொடுத்தாங்களாம். அதனால, வாபஸ் வாங்கின கையோடு, வீட்டுல போய், துாக்கு மாட்டிட்டார்.''''நல்ல வேளையா, வீட்டில் இருந்தவங்க, 'டக்'னு கயித்தை அறுத்து, ஆஸ்பத்திரியில சேர்த்து, பிழைக்க வச்சிட்டாங்க. பல வருஷமா கட்சிக்கு உழைக்கிற என்னை வாபஸ் வாங்க சொல்லிட்டாங்கன்னு புலம்பறாராம்.

இந்த விவகாரம் வெளியே தெரியாம, ஆளுங்கட்சிக்காரங்க, போலீசை சரிக்கட்டிட்டாங்களாம்,'' விளக்கினாள் மித்ரா.வழியில், கொண்டத்துக்காளியம்மன் கோவில் வரவே, ''மித்து, சாமி கும்பிட்டு போயிடலாமா?'' என்றதும்,''ஓ.கே'' சொன்ன மித்ரா, கோவிலுக்குள் நுழைந்தாள்.இருவரும் சாமி தரிசனம் முடித்து, பிரகாரத்தில் அமர்ந்தனர்.''ஏங்க்கா.. அரசு ஊழியருக்கு, கடன் தருவதற்கு கமிஷன் கேட்கிறாங்களாம். உங்களுக்கு தெரியுங்களா?''

''ம்... தெரியும். கலெக்டர் ஆபிசில், அக்கவுண்ட்ஸில் உள்ள 'ஜெய'மான ஒருத்தர்தான், ஊழியர்களுக்கு வீட்டு வசதி கடன் ஒப்புதல் அளிக்க, மொத்த தொகையில் ஒரு சதவீதம் கேட்கிறாராம்,''''கொடுக்காதவர்களின் விண்ணப்பங்களை பீரோவில் பூட்டி வச்சுக்கிறாராம். எப்படியாவது கடன் வாங்கிடணும்னு பலரும், அந்த ஆபீசருக்கு, பேசுன பணத்தை கொடுத்திட்டு காரியத்தை சாதிச்சுக்கிறாங்களாம். இந்த பணப்'பால்' குடிக்கிற பூனைக்கு, யாராவது மணி கட்டினா பரவாயில்லைன்னு, பரவலாக பேச்சு அடிபடுது,''

''அது உண்மைதாங்க்கா,'' சொன்ன மித்ரா, ''கோர்ட்டில் காலி பணியிடத்துக்கு ஆட்களை நிரப்பவே இல்லையாம்,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''அதில என்ன பிரச்னையோ?''''மாவட்டத்தில் உள்ள கோர்ட்களில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய, 20 ஆயிரம் பேருக்கு அதிகமாக, விண்ணப்பம் பெறப்பட்டது. எழுத்து தேர்வும் நடத்தலை. ஐகோர்ட் நிர்வாகம் மூலம் மாநில அளவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது,''

''ஆனா, இன்னைக்கு வரைக்கும் எதுவுமில்லை. இதனால, கோர்ட் வேலைக்கு அப்ளிகேஷன் கொடுத்தவர்கள், 'சீச்சீ.. இந்த பழம் புளிக்கும்'னு, வேற வேலைக்கு போயிட்டாங்களாம்,'' விளக்கினாள் சித்ரா.''அக்கா, 'தாரா....'சப்-டிவிஷன் அதிகாரி, தனி ராஜாங்கமே நடத்துறார். போலீஸ்காரங்களை தன்னோட 'கைப்பாவையா' வச்சு, வசூல் பண்றாராம். இத்தனைக்கும் அந்த டிவிஷனில், மாசாமாசம் 'கிரைம் ரேட்' கன்னாபின்னான்னு எகிறுதாம்''''இருந்தாலும், மாவட்ட வி.ஐ.பி.,யோட ஆசி இருக்கறதால், 'ஜெய'மான இந்த அதிகாரியை யாரும் ஒண்ணும் சொல்வதில்லையாம்,''

''இதனாலதான், பல பிரச்னை வருதுன்னு, சம்பந்தப்பட்டவங்களுக்கு என்னைக்குத்தான் புரியுமோ?''என்ற சித்ரா, ''அதிகாரி ஒருத்தரை, ஐ.ஜி., வெளுத்து கட்டியதை கேள்விப்பட்டியா?''''இல்லீங்களே...''''கரைப்புதுாரில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., வீட்டுக்கு பக்கத்துல, ரெண்டு தரப்புக்கு இடையே, சொத்து பிரச்னை இருக்குது. இது சம்பந்தமாக, இரு தரப்பினரும் புகார் கொடுத்தாங்களாம்''

''இந்த புகாரை ஒரு அதிகாரி விசாரிச்சு, 'ஒன் சைடு'க்கு ஆதரவா இருந்துட்டாரு. கொதிச்சுப்போன மற்றொரு தரப்பு, ஐ.ஜி., கிட்ட புகார் செஞ்சிட்டாங்க,''''இதை நினைவில் வச்சிருந்த ஐ.ஜி., பல்லடத்துக்கு வந்தப்ப சம்பந்தப்பட்ட அதிகாரியை கூப்பிட்டு வறுத்தெடுத்துட்டாராம். இதனால, மறுபடியும் புகாரை விசாரிக்கிறாராம்,''''இந்த மாதிரி இருந்தா எப்படீங்க்கா?'' என்ற மித்ரா, ''அம்மாபாளையம் 'செக்போஸ்டில், அர்த்த ராத்திரியிலும் வசூல் கொடி கட்டி பறக்குதாம்,''என, அடுத்த தகவலை சொன்னாள்.''அது, யாரு 'சாமி', ராத்திரியிலும் 'கடமை'யை கரெக்டா செய்யறது?''

''ராத்திரியில, குறிப்பாக, அதுவும், 12:00 மணிக்கு மேல, யார் வந்தாலும், அடாவடி வசூல்தானாம். அதுமட்டுமின்றி, ஒருமையில பேசறது, சில நேரங்களில் தகாத வார்த்தைய பேசறதுன்னு, புகார் மேல புகாராம்,''''ஏற்கனவே, இதேபோன்ற விவகாரத்தில், ஏ.சி., ஆபீசில் ஒருவாரம் இருந்தாராம். திரும்பவும் வந்துட்டு, பழையபடி ஆரம்பிச்சிட்டாராம்,''என்றாள் மித்ரா.''சிட்டியில, கஞ்சா கேஸ் அதிகமாக பதிவாகுது தெரியுமா? பெருமாள் பேர் கொண்ட அந்த அதிகாரி, எல்லாரையும் 'சுளுக்கு' எடுத்து, வேலை வாங்கறாராம். அவருக்கு பயந்திட்டே, தினமும், கிலோ கிலோவா கஞ்சா புடிச்சு, கேஸ் போடறாங்க,''

''அக்கா.. இதே மாதிரி மத்த சட்ட விரோத செயல்களுக்கும் கடிவாளம் போட்டா பரவாயில்லையே,''''சரி, வா போலாம் மித்து, டைம் ஆகுது,'' என, சித்ரா எழுந்ததும், ''அக்கா... ஒரு நிமிஷம், 'கருப்பண்ண'சாமியை கும்பிட்டு வந்துடறேன்,'' என மித்ரா சென்றாள்.ஓரிரு நிமிடத்தில், அவள் வரவும், இருவரும் வண்டியில் புறப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X