அரசியல் காரணங்களால், அடுக்கடுக்கான சட்டப் போராட்டங்கள் நடந்ததால்,
தமிழகத்தில்உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. எனினும்,
தமிழக கிராமங்களின் தலையெழுத்தை, டில்லியில் உள்ள உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்தது; 'தேர்தல் நடத்தத் தடையில்லை' என, தீர்ப்பைத் தந்தது.
இதன் மூலம், மூன்றாண்டுகளாக முடங்கிக் கிடந்த மக்களின் உயிர் நாடி, மீண்டும்
செயல்படும் என்ற நம்பிக்கை, அனைவர் மனதிலும் துளிர் விட்டது. அதுபோல, கடந்த, 27ல், முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது; இரண்டாவது கட்டம், நாளை நடக்க உள்ளது.
லோக்சபா, சட்டசபை தேர்தல்களைப் போல இலவசங்களோ, தேர்தல் கவர்ச்சிகளோ,
வாக்குறுதிகளாக இதில் இல்லை என்றாலும், வாக்காளர்களை விலை பேசும், மலிவான அரசியல், இந்த தேர்தலிலும் காணப்படுகிறது.
நேர்மையான ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என்ற உறுதி,
அனைவருக்கும் இருந்தாலும், தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள், தங்கள்
கடமையை நியாயமாகசெய்வரா என்பது சந்தேகமே!ஏனெனில், இந்த தேர்தலில், பணம், ஜாதி, மதம், அதிகார பலம் பொருந்தியவர்களே, அநேகமாக போட்டியிட்டுள்ளனர்.
நியாயமான போட்டியாளர்களை தடுத்து, சிலருக்கு பணம் கொடுத்து, போட்டியிடாமல் தடுத்து, 'ஒருமனதாக' தேர்ந்தெடுக்கப்பட்டோரும், பல ஆயிரம் பேர் உள்ளனர்.
உள்ளாட்சி பதவிகள் ஏலத்தில் விடப்பட்டு, அதிக விலை கொடுத்தவர்கள், வேட்பாளர்களாக மாறி, ஓட்டுகளையும் அள்ளியுள்ளனர்; வரும் இரண்டாம் கட்டத்திலும் அள்ள உள்ளனர்.
பணம் கொடுத்து பதவிகளைப் பெற்றவர்கள், நியாயமாக உள்ளாட்சி பணிகளில் ஈடுபட மாட்டார்கள் என்பது அநேகமாக உறுதியாகியுள்ளது. பணம் கொடுத்து போட்டியிட முன்வருவோர் மீது நடவடிக்கை எடுக்க, மாநில தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது.
எனினும், நடந்து முடிந்த முதற்கட்ட தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கையும், நடக்கவுள்ள இரண்டாம் கட்ட தேர்தலும், நியாயமாக நடக்க வேண்டும் என்பதே நம் ஆசை.
ஓட்டுப்பதிவு நாளான, கடந்த, 27ல், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களும்,
ஆசிரியர்களும், மிகுந்த சிரமங்களுக்கு இடையே, தேர்தல் பணிகளை மேற்கொண்டனர். ஓட்டுப்பதிவு காலை, 7:00 மணிக்கு துவங்கிய நிலையில், முதல் நாள் இரவிலேயே,
ஓட்டுப்பதிவு மையங்களை அடைந்தனர்.
கிராமங்களில், கழிப்பறை வசதி கூட இல்லாத, ஓட்டுப்பதிவு மையங்களின் வெளியிலும், அதன் அருகில் உள்ள வெட்ட வெளிகளிலும், ஏராளமான அரசு ஊழியர்கள் தங்கி
இருந்தனர்.தேர்தல் பணியில் ஈடுபட்ட பெண் ஊழியர்களுக்கு துணையாக அவர்களின்
உறவினர்களும், மார்கழி பனியில் நனைந்து, மக்கள் பணியாற்றினர்.
பதிவு துவங்குவதற்கு, மூன்று மணி நேரங்களுக்கு முன்னதாகவே, அதற்கான பணிகளில், தேர்தல் அலுவலர்களான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்.இதற்காக, அதிகாலை, ௪:௦௦ மணிக்கே, பணிகளை மேற்கொண்டனர். இரவில் துாங்கினால் தானே, விழிக்க சிரமப்பட வேண்டும்...இதெல்லாம் அவர்கள் பணி தான்; அதற்குத் தான் அரசு
சம்பளம் வழங்குகிறது என்றாலும் கூட, உள்ளாட்சிகளிலும் ஜனநாயகத்தை நிலை பெறச் செய்ய வேண்டும் என்பது தான், முக்கிய நோக்கம்; அதற்காகவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலவித சிரமங்களை பொறுத்துக் கொண்டனர்.
ஓட்டுப்பதிவு நாளில், ஓட்டுச் சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று, ஓட்டு போட வைத்து, விரலில் மை தடவி, முழு ஓட்டும் பதிவாகியுள்ளதா என, ஆய்வு செய்தனர்.
மாலை, ௫:௦௦ மணி வரை, வாக்காளர்கள் ஓட்டளித்து சென்று விட்டனர். ஆனால், அதற்குப் பிறகும், பல மணி நேரம், அந்த மையங்களிலேயே காத்திருந்தனர், நம் அரசு ஊழியர்கள்.
ஓட்டுப் பெட்டிகளையும், பிற பொருட்களையும் பாதுகாப்பாக அனுப்பி விட்டு,
நள்ளிரவில் அல்லது அதிகாலையில் தான், தங்கள் வீடுகளை அடைந்தனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, ஏன், அதற்கு முன்னதாக கூட,
ஊரகங்களில் தேர்தலை நடத்த, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், இரவு,
பகலாக பாடுபட்டனர். அவர்களை நினைத்தாவது, உள்ளாட்சிகளுக்கு
தேர்ந்தெடுக்கப்படும் மக்கள்பிரதிநிதிகள், நியாயமாகவும்,நேர்மையாகவும்,
ஐந்தாண்டுகளுக்கு செயல்படவேண்டும்.ஆனால், தமிழகத்தின் பெரும்பாலான
ஊரகங்களில் காணப்படும் எதார்த்த நிலை, வருந்தத்தக்க அளவிலேயே உள்ளது.
21ம் நுாற்றாண்டுக்கு வந்த பிறகும், ஜாதிய ஆதிக்கம், பல இடங்களில் நிலவுகிறது.
பெண்கள் மட்டுமே போட்டியிடும் தொகுதிகளில், தகுதியான பெண்கள் கிடைக்காத நிலை மறுபுறம்.ஓட்டுப்பதிவு முடிந்ததும், 'அந்த ஜாதிக்காரன் எனக்கு அறவே
ஓட்டளிக்கவில்லை; நம்ம ஜாதிக்காரர்களும் கவுத்திட்டாங்க...' என்பன போன்ற ஆவேச குரல்களை, அநேகமாக அனைத்து கிராமங்களிலும் கேட்க முடிந்தது.
இதெல்லாம், ஜனநாயகத்தை கேலிக்குரியதாக ஆக்கும் நிகழ்வுகள்.உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முன்விரோதம், எத்தனையோ உயிர்களை, நம் மாநிலத்தில் காவு வாங்கி
யுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.இட ஒதுக்கீட்டில் வெற்றி பெற்ற, தாழ்த்தப்பட்ட பிரிவுகளாக கருதப்படும் சில ஜாதிகளின் தலைவர்கள், ஜாதிய ஆதிக்கத்தால் ஆட்டு
விக்கப்படும், தலையாட்டி பொம்மைகளாகத் தான் இருந்தனர்; இப்போதும் இருக்கின்றனர்.
பஞ்சாயத்து தலைவரானாலும், ஆதிக்க சக்திகள்உட்காரச் சொன்னால் உட்கார வேண்டும்; எழச் சொன்னால் எழ வேண்டும். நிர்வாகக் கூட்டங்களில் வாயைத் திறக்கவே கூடாது; நீட்டிய இடத்தில் கையொப்பமிட வேண்டும்...மேலும், சில கிராமங்களில், அங்குள்ள
முக்கியப் பிரமுகர்களே அனைத்து முடிவுகளையும் மேற்கொள்வர். இவை, இலைமறை காயாகக் கூட நடப்பதில்லை; பகிரங்கமாக நடக்கும்.
இது போன்ற ஏராளமான, ஜனநாயக விரோத காட்சிகளை, இதற்கு முன் பார்த்துள்ளோம்; இனிமேலும் பார்க்கக் கூடாது என்பதே விருப்பம். இந்த முறையாவது, இத்தகைய கேடுகள் நீங்க வேண்டும்.பெண்கள், இந்த நாட்டின் கண்கள் எனப் பெருமை பேசும் நாம்,
அவர்களையாவது ஜனநாயக வழியில் செயல்பட விட்டோமா? பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை, 33 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாக உயர்த்தி, நம்மை நாமே பாராட்டிக் கொண்டோம்; தவறில்லை.
ஆண்களின், அரசியல் கட்சிகளின் கைப்பாவையாகத் தான், பெண்கள் செயல்படும் சூழல் உள்ளது. இட ஒதுக்கீடு அதிகரிப்பால், 30 ஆயிரம் பதவிகளை கூடுதலாகக் கைப்பற்றப் போகும் பெண்கள், அரசியல் சார்பற்று செயல்படுவர் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை.காரணம், கட்சிகள் இன்று, பெண் வேட்பாளர்கள் கிடைக்காமல் திணறின.
கட்சியிலுள்ள ஆண் நிர்வாகிகளின் தாய், மனைவி, மகள், மருமகள், உறவினர் என, பொது வாழ்வில் அனுபவம் சிறிதும் இல்லாதவர்களை, வலுக்கட்டாயமாகக் களமிறக்கியுள்ளன. இதன் விளைவுகள்,நிர்வாகத்தில் வெளிப்படும்.
மன்றக் கூட்டங்களை, பெண் தலைவர்களுக்குப் பதிலாக, அவர்களின் கணவர்கள்
நடத்துவது; பஞ்சாயத்து நிதியைக் கையாளும் நடவடிக்கைகளில் தலையிடுவது;
ஒப்பந்தப் பணிகளில் தலையீடு போன்றவற்றால் முறைகேடுகள் நடக்கும் சூழல்
உருவானால், ஊழலுக்கு அது வழிவகுக்கும்.
சமூக நீதி, பெண்ணுரிமை, பெண்களுக்கு அதிகாரமளித்தல் பற்றிப் பேசும் தமிழகத்தில், இது தான் நிலை என்றால், இதற்குக் காரணம் என்ன; யார் பொறுப்பேற்பது;
ஜனநாயகத்தை எங்கே தேடுவது?பொது வாழ்வில் நேர்மையாளர்கள், பணம், பதவிக்கு ஆசைப்படாதோர் அன்று, உள்ளாட்சி நிர்வாகத்தில் பல பொறுப்புகளை வகித்தனர்.
இதனால், அவர்களின் தன்னலம் கருதாத செயல்களால், பதவிக்கும், நிர்வாகத்திற்கும் பெருமை கிடைத்தது. ஆனால், இன்று நிலைமையே வேறு.
இந்தச் சூழ்நிலையில், மக்களாட்சித் தனித்துவங்களைத் தன்னகத்தே கொண்ட, சுய
சார்புடைய அதிகார அமைப்புகளின் செயல்பாடுகள், கீழ்கண்டவாறு இருக்க வேண்டும் என்பது, அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
எதிர்பார்ப்புகள் சில:
* கட்சி சார்ந்து போட்டியிட்டு, வெற்றி பெற்றிருந்தாலும் நிர்வாகத்தில் சொந்த
நலனையோ அல்லது கட்சியின் நலனையோ முன்னிறுத்தாமல், மக்கள் நலனை
சிந்திக்கும் போது, உள்ளாட்சி நிர்வாகம் உயரிய நிர்வாகமாகும்; மக்களின் நிர்வாகமாக மலரும்
* மக்களை மதிக்கும், அவர்களின் தேவைகளை முடிந்த அளவில் பூர்த்தி செய்யும், ஆரோக்கியமான அணுகுமுறை, மக்கள் பிரதிநிதிகளுக்கு வேண்டும்
* உள்ளாட்சி நிர்வாகம், சுய சார்புடன், அரசியல் குறுக்கீடுகள் இல்லாத தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட உதவ வேண்டும்
* கட்சியின் கொள்கைகள், அரசியல் விருப்பு, வெறுப்புகள், ஜாதி, மத வேறுபாடுகளைத் தவிர்த்து, வளர்ச்சியின் குறியீடுகளை இலக்குகளாக வைத்து செயல்படும் உன்னத நிலை உறுதிபட வேண்டும்
* அவரவர் பகுதி வளர்ச்சிக்காக, தொலைநோக்குத் திட்டங்களைத் தயாரித்து, அறிவு சார்ந்த, உள் கட்டமைப்புகளை உருவாக்க, முனைந்து செயல்படுதல் வேண்டும்
* உள்ளாட்சி நிர்வாகம், அரசியல் உரிமைகளுக்காகவோ, தனி நபரின் ஆதிக்கத்திற்காகவோ உருவாக்கப்பட்டவை அல்ல. மாறாக, மக்களின் வாழ்க்கைத்தர உயர்வு, கிராம முன்னேற்றம் போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை என்பது உணரப்பட வேண்டும்.
எனவே, ஜனநாயகத்தின் அடித்தளத்தைப் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும், கடமையும், உள்ளாட்சிகளுக்கும், அதன் பிரதிநிதிகளுக்கும் உள்ளது; இதை, அவர்கள் உணர வேண்டும்.
ஜாதிய ஒடுக்கு முறைகளால் பாதிக்கப்படும் பஞ்சாயத்து தலைவர்கள்; செயல்பட முடியாமல் முடக்கப்படும் பெண் தலைவர்கள்; அரசியல் தலையீடுகளால் செய்வதறியாது தவிக்கும் தலைவர்கள் என, பல வகைத் தலைவர்களை, ஜனநாயகத்தின் ஆணி வேராகக் கருதப்படும் கிராமங்கள் சந்திக்கப் போகின்றன.
'கிராமங்களில் தான் இந்தியா வாழ்கிறது' என்ற, காந்தியின் கனவு நனவாகுமா; ஓட்டு எண்ணிக்கை நடக்கும், ஜன., 2 வரை, நம்பிக்கையுடன் காத்திருப்போம்!
முனைவர் ரா.வெங்டேஷ்,
உதவி பேராசிரியர்,
சென்னை பல்கலைக்கழகம்
தொடர்புக்கு:
இ -- மெயில்: rvsh76@gmail.com
மொபைல் எண்: 94447 92188