தவறை உணருமா பா.ஜ.,

Updated : டிச 29, 2019 | Added : டிச 28, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
 டில்லி உஷ்...

மத்தியிலும், மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, கூட்டணிக் கட்சிகளை மதிக்காமல், பெரிய அண்ணன் போல செயல்பட்டது என, சொல்லப்பட்டது. அதே தவறை இப்போது, பா.ஜ., செய்து வருகிறது என்கின்றனர், அக்கட்சியின் சீனியர் தலைவர்கள்.

நடந்து முடிந்த ஜார்க்கண்ட் சட்ட சபை தேர்தலில், பா.ஜ., பரிதாபமாக தோல்வியடைந்தது. முதல்வர் ரகுபர் தாஸ், அவருடைய தொகுதியைக் கூட தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தோற்றுப் போனார். ரகுபரை தோற்கடித்தது, அவர் அமைச்சரவையில் இருந்த சரயு ராய். பா.ஜ.,வில் சரயுவுக்கு, 'சீட்' கொடுக்காமல் தடுத்தார் ரகுபர். எனவே, சுயேச்சையாக போட்டியிட்டு முதல்வரைத் தோற்கடித்தார் சரயு.

கடந்த, 2014 சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் கூட்டணிக் கட்சியாக, ஜார்க்கண்ட் மாணவர்கள் கட்சி இருந்தது. ஆனால் இம்முறை, பா.ஜ., அக்கட்சியை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டது. 'மஹாராஷ்டிராவில், சிவசேனாவிற்கு அதிக சீட் ஒதுக்கியதால் தான் பிரச்னை ஏற்பட்டு, காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துவிட்டது; எனவே, கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக சீட் தரக்கூடாது' என்பது அமித் ஷாவின் முடிவாம். விளைவு, ஜார்க்கண்ட் மாணவர்கள் கட்சி ஓட்டுகளைப் பிரிக்க, பா.ஜ., தோல்வியடைந்தது.

ஆனால், காங்கிரசோ, தேசிய கட்சியாக இருந்தாலும், கவுரவம் பார்க்காமல், மாநிலக் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளோடு கூட்டணி அமைத்து, மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது.பா.ஜ.,வோ, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வரிசையாக ஆட்சியை இழந்துவிட்டது. இந்த மாநில முதல்வர்களின் பேச்சைக் கேட்டு, கட்சி தலைமை முடிவெடுத்தது தான், இதற்கு காரணம் என்கின்றனர் விபரம் தெரிந்த பா.ஜ.,வினர்.

'இந்தத் தவறுகளை உணர்ந்து, பிரதமர் மோடியும், கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவும் தங்களை திருத்திக் கொண்டால் தான் கட்சிக்கு நல்லது' என்கின்றனர் அவர்கள். ஆனால், இதையெல்லாம் அவர்களிடம் துணிச்சலாக சொல்லக் கூடிய ஒரே தலைவர் அருண் ஜெட்லி. அவர் தான் இப்போது உயிரோடு இல்லையே என வருத்தப்படுகின்றனர் சீனியர் தலைவர்கள்.


நம்பிக்கை

'கடவுள் நம்பிக்கை கிடையாது, ஜோதிடம் ஒரு ஏமாற்று வேலை' என, பொது வெளியில் பேசுகிற அனைத்து அரசியல்வாதிகளும், வீட்டுக்குள் நல்ல நேரம் பார்த்து தான் எல்லாவற்றையும் செய்வர் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக அரசியல்வாதிகள், இந்த விஷயங்களை மூடி மறைத்து செய்வர். ஆனால், கர்நாடக அரசியல்வாதிகள் வெளிப்படையாக செய்வர்.

முன்னாள் பிரதமர் தேவ கவுடா, ஜோதிடத்தை தீவிரமாக பார்ப்பதில் முன் வரிசையில் நிற்கிறார். 'நீங்கள் மீண்டும் பிரதமராக வர வாய்ப்புள்ளது' என, கவுடாவின் ஆஸ்தான ஜோதிடர் சொன்னதால், அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார்; ஆனால், தோற்றுப் போனார். இருப்பினும், ஜோதிடம் மீதுள்ள நம்பிக்கை அவருக்கு போகவில்லை.

இந்த வரிசையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் ஜாதகம், கைரேகை என அனைத்தையும் நம்புகிறார். இவருடைய ராசி எண் ஒன்பது. எண் கணித ஜோதிடர் ஆலோசனையின் படி, ஒரு புதிய காரை வாங்கி, அதன் கூட்டு எண் ஒன்பது வருமாறு பதிவு செய்தார். சூரிய கிரகணத்தன்று, அந்த காருக்கு பூஜை போடப்பட்டது.அடுத்து, ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, எடியூரப்பா, சூரிய கிரகணம் முடியும் வரை, தன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

கிரகணம் முடிந்த உடன், வீட்டில் பூஜைகள் செய்த பின் தான், வெளியே வந்தார்.கிரகணத்திற்கு முன்தினம், கேரளாவின் கன்னுார் அருகே உள்ள, பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார் எடியூரப்பா. முன்னதாக, தன்னுடைய பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது, எண் கணித ஜோதிடரின் ஆலோசனைப்படி, 'ஸ்பெல்லிங்'கை மாற்றிக் கொண்டார். என்ன தான் வெற்றி பெற்று முதல்வர் ஆனாலும், தன்னால் முழுமையாக ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியவில்லையே என்பதால், ஜோதிடர்களின் ஆலோசனைப்படி எடியூரப்பா நடந்து வருகிறாராம்.


வெங்கையாவின் ருசி

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சராக இருந்த போது, எந்த ஊருக்கு சென்றாலும், அங்கு எந்த ஓட்டல் பிரபலம், என்ன ஐட்டம், 'ஸ்பெஷல்' என விசாரித்து, அங்கு சென்று ருசிப்பார். இவரைப் போலவே, மறைந்த மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லியும், அனந்த குமாரும் உணவுப் பிரியர்களாக இருந்தனர்.

வெங்கையா, துணை ஜனாதிபதியான பின், தன் பழக்கத்தை விட்டுவிட்டார். காரணம், மருத்துவர்களின் ஆலோசனை.தன்னால் சாப்பிட முடியாவிட்டாலும், மற்றவர்களை சாப்பிட வைப்பதில் வெங்கையாவிற்கு தனி மகிழ்ச்சி. மத்திய அமைச்சர்களுக்கு அடிக்கடி விருந்து கொடுப்பார்; அனைத்தும், ஆந்திரா ஸ்பெஷல் ஐட்டங்கள் தான்.

வெங்கையா சமீபத்தில், டில்லியில் உள்ள தென் மாநில பத்திரிகையாளர்களை தேநீர் விருந்திற்கு அழைத்திருந்தார். ஆந்திரா ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்களோடு, மைசூர் போண்டா, வெங்காய பக்கோடா, பாதாம் பால் என, கர்நாடகா ஐட்டங்களையும் வழங்கினார்.'என்னால், அதிகம் சாப்பிட முடியாது; நீங்கள், அனைத்து ஐட்டங்களையும் ஒன்று விடாமல் ருசிக்கணும்' என, ஒவ்வொரு பத்திரிகையாளரிடமும் அன்பு கட்டளையிட்டார் வெங்கையா.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Sivasubframanian - karur,இந்தியா
04-ஜன-202013:54:28 IST Report Abuse
G.Sivasubframanian ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் பரிந்துரைப்படி கேட்காமல் போனாலும் குற்றம் சொல்வார்கள். எனவே தோல்விக்குப் பின் காரணம் தேடுவது சரியாக இருக்காது.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
03-ஜன-202011:52:45 IST Report Abuse
Sridhar தவறு கூட்டணி கட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததுதான். மேலும் அவர்களின் ஊழல்களை கண்டும் காணாமல் விட்டதும் ஒரு காரணம். சிவசேனா மும்பாய் மாநகராட்சியில் ஏகப்பட்ட தில்லுமுல்லுகளை செய்வதற்கு பிஜேபியும் உடந்தையாகவே இருந்திருக்கிறது. இந்தியாவிலேயே மிகவும் அதிக பட்ஜெட் உடைய மும்பை மாநகராட்சியிலிருந்து சிவசேனாவை துண்டித்தால், அடுத்த நாளே அக்கட்சி செத்துப்போகும். அதை செய்ய தவறியது பிஜேபியின் மடமை. 30 வருட கூட்டணி ஹிந்துத்வ அரசியல் செய்யும் மற்றொரு கட்சி என்ற காரணங்களிலால் 'ஊழல் செய்ய மாட்டோம், பிறரை செய்யவும் விடமாட்டோம்' என்ற தங்கள் கொள்கையிலிருந்து பிழன்றார்கள். தேசிய அளவில் ஒரு பெரிய கட்சி கொசுறு கட்சிகளிடம் ஒரு பய உணர்வை ஏற்படுத்தாமல் அரசியல் செய்தால் விளைவுகள் இப்படித்தான் இருக்கும். மேலும் மோடிக்கு கீழ் மாநில அளவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் மக்களோடு இன்னும் நெருங்கி பணியாற்றவேண்டும். லோக்சபாவுக்கு ஏகோபித்தமாக மோடிக்கு வோட்டு போடும் அதே மக்கள், சட்ட சபை தேர்தல்களில் வோட்டளிக்காமல் இருப்பது அந்த உள்ளூர் தலைவர்களின் மக்கள் தொடர்பின்மையியே காண்பிக்கிறது. அவர்களின் பங்களிப்பை சீர்செய்வது அமித் ஷாவுடைய வேலை. சரியாக வடிவமைத்து கொடுக்காமல் மோடி முகத்தை காண்பித்தே ஜெயிக்கலாம் என்ற அவரின் நினைப்பு தவறென்று நிரூபிக்க பட்டுருக்கிறது. அக்கட்சி 2024 கு பிறகு மோடியின் இடத்தை யார் நிரப்புவார் என்று இப்போதே தயார் செய்துகொள்ளவும் வேண்டும். அது அக்கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக அமையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X