மின்னல் விளையாடும் உன் விழியை கண்டு விண்மீன்களும் ஏங்கும் ரோஜா காட்டில் பறித்த இதழ்களில் உருவாக்கியதோ உன் செவ்விதழ் காதோர லோலாக்கும் இவள் அழகை வர்ணிக்கும், காற்றில் அசையும் கார்குழல் கூட காதல் மொழி பேசும், தேவதையின் நிழலாக இப்பூமியில் அவதரித்தாளோ என இளசுகள் கிறங்க, புதிய புயலாய் சினிமாத்துறைக்குள் நுழைந்துள்ள நடிகை ரியா மனம் திறந்த நிமிடங்கள்...
* உங்களை பற்றி?
பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை. படித்தது பி.எஸ்சி., தொலைதுார கல்வியில் எம்.பி.ஏ., முடித்துள்ளேன். நான் பக்கா தமிழ் பொண்ணுங்க.
* குடும்ப பின்னணி?
அப்பா தொழில் அதிபர். அம்மா தான் எனக்கு எல்லாம். உடன் பிறந்தவர் அக்கா மட்டும் தான். வீட்டில் கடைக்குட்டி என்பதால் செல்லம் அதிகம்.
*சினிமாவில் எப்படி?
படித்து முடித்தவுடன் நடிப்பின் மீது ஆர்வம் அதிகரித்தது. குறும்படம், ஆல்பம், விளம்பர படங்களில் நடிக்க துவங்கினேன். அதன் பிரதிபலனாக 'மேகி' படத்தில் பேய் கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது. பார்ப்பவர்களை படம் முழுக்க நடிப்பில் மிரட்டியுள்ளேன்.
* உங்களுக்கு பேய் பயம் உண்டா?
சுத்தமா இல்லீங்க. நண்பர்கள் பலர் பேயை பார்த்துள்ளோம் எனக் கூறியுள்ளனர். ஆனால் சென்னையில் இரவு 12:00 மணி கூட பகல் போல் உள்ளதால் அதனை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் பயமும் இல்லை.
*தற்போதைய வாய்ப்புகள் ?
மலையாளம், தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் வந்தன. நல்ல கதை, கதையில் என்னுடைய கதாபாத்திரம் பேசும் படியாக இருக்க வேண்டும் என்பதால் நானும் காத்துகொண்டு இருக்கிறேன். எனது நடிப்பு ஜெயித்தால் தான் நானும் ஜெயிக்க முடியும் என்பதால் தான் இந்த காத்திருப்பு. தற்போது பெயரிடப்படாத இரு படங்களில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
* பிளஸ், மைனஸ் என்ன?
எதையுமே பாஸிட்வ்வாக எடுத்துகொள்வேன். அதுவே என்னுடைய பிளஸ் மற்றும் மைனஸ்.
* நடிப்பில் கவர்ந்தவர்கள்?
கமல். அவர்கிட்ட எல்லாமே இருக்கு. நடிப்பு, காமெடி, பாடகர், டான்சர் பலதுறை வித்தகர்.
* கிளாமர் எல்லை ?
எனக்கு கிளாமர் செட் ஆகாது. கதைக்கு தேவை என்றால் கிளாமர் பண்ணுவது தப்பில்லை. ஆனால் ேஹாம்லி கேரக்டர் பண்ணினால் தான் சினிமாத்துறையில் நீடிக்க முடியும்.
*படப்பிடிப்பு இல்லாத நாட்களில்?
கோயிலுக்கு செல்வது வழக்கம். அதுவும் ராகவேந்திரா, பெருமாள் கோயில் செல்வது ரொம்ப இஷ்டம். அதுதவிர இசை தான் என் உலகம்.
* எதிர்கால லட்சியம்?
சிறந்த நடிகைன்னு மக்கள் மனதில் இடம் பிடித்தால் போதும். என்னோட சந்தோஷம், லட்சியம் எல்லாம் அதுவே.
* தமிழ் ரசிகர்கள்?
ரசிகர்கள் அன்புதொல்லை அதிகம் தான். ஆனாலும் டீசண்டாக நடந்து கொள்வர். நிறைய பேர் 'மேகி' பார்த்துவிட்டு பாராட்டியது என்னை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தது.
இவரை வாழ்த்த: reyaahari@gmail.com.
-தீப்சி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE