போலீஸ்ல லொள்ளு... ரொம்பவே ஆடுதாம் பெல்லு!| Dinamalar

போலீஸ்ல லொள்ளு... ரொம்பவே ஆடுதாம் 'பெல்'லு!

Added : டிச 31, 2019
Share
தொண்டாமுத்துார் யூனியனில் நடந்த உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு தொடர்பான செய்தி சேகரிக்க சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். மற்ற யூனியனை காட்டிலும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. மதியம், 3:00 மணிக்கே, 62.7 சதவீதத்தை தொட்டிருந்தது.''என்னக்கா, தொண்டாமுத்துார்காரங்க ஓட்டுப்போட ரொம்பவுமே ஆர்வமா இருக்காங்க. 80 சதவீதத்தை தாண்டிரும் போலிருக்கே,'' என,
போலீஸ்ல லொள்ளு... ரொம்பவே ஆடுதாம் 'பெல்'லு!

தொண்டாமுத்துார் யூனியனில் நடந்த உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு தொடர்பான செய்தி சேகரிக்க சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். மற்ற யூனியனை காட்டிலும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. மதியம், 3:00 மணிக்கே, 62.7 சதவீதத்தை தொட்டிருந்தது.

''என்னக்கா, தொண்டாமுத்துார்காரங்க ஓட்டுப்போட ரொம்பவுமே ஆர்வமா இருக்காங்க. 80 சதவீதத்தை தாண்டிரும் போலிருக்கே,'' என, பேச்சை துவக்கினாள்.

''வீடு வீடா சப்ளை செஞ்சுருக்காங்களே, அப்புறம் ஓட்டு விழாம இருக்குமா?,''

''என்னக்கா, என்ன சப்ளை செஞ்சாங்க...'' என்றபடி, ஆவலாய் கேட்டாள் மித்ரா.

''கட்சி பாகுபாடு பார்க்காம, எல்லா வீட்டுக்காரங்களுக்கும் ஒரு வேட்டி, சேலை, இருநுாறு ரூபாய் ஆளுங்கட்சி தரப்புல கொடுத்திருக்காங்க. தி.மு.க., தரப்புல, ஐநுாறு, ஆயிரம்னு ரெண்டு பிரிவா கொடுத்திருக்காங்க. கிராமத்து ஜனங்க எப்பவும் மறக்காம ஜனநாயக கடமை ஆற்றுவாங்க. இப்ப, அவுங்களையும் காசு கொடுத்து அரசியல்வாதிக ஏமாத்த ஆரம்பிச்சிட்டாங்க,''

''வாக்காளர் பட்டியல்ல ஏகப்பட்ட குளறுபடி நடந்திருக்காமே,''
''அதுவா, வழக்கமா ஒவ்வொரு வருஷமும் வாக்காளர் பட்டியல் வெளியிடுவாங்க. புதுசா பெயர் சேர்க்க விரும்புறவங்க படிவம் கொடுத்தா, இணைப்பு பட்டியல் வெளியிடுவாங்க. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலயும், 10 முதல், 15 வாக்காளர் பெயர் சேர்த்திருப்பாங்க; சில பேரை நீக்கியும் இருப்பாங்க. சூலுார் யூனியன்ல முத்துக்கவுண்டம்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு ஓட்டுச்சாவடியில மட்டும், நுாற்றுக்கணக்கான வாக்காளர்களை சேர்த்துருக்காங்க. நெறயப்பேருக்கு ஒரே 'அட்ரஸ்' இருக்காம்.

''இதை கேள்விப்பட்டதும், கலெக்டரும், அதிகாரிகளும் அதிர்ச்சி அடைஞ்சுட்டாங்க. எதிர்க்கட்சிக்காரங்க கோர்ட்டுல கேஸ் மேல கேஸா போடுறாங்க. நம்ம மாவட்டத்துல இப்படி ஒரு தலைவலியான்னு, அதிகாரிங்க புலம்புறாங்க,''
ஒவ்வொரு ஓட்டுச்சாவடியாக சுற்றிப்பார்த்து வந்த சித்ரா, வடவள்ளியை கடந்தபோது, ''என்னப்பா, மர்ம பங்களா, கட்டுக்கட்டா பணம் பதுக்கல்னு சொல்றாங்க, என்ன சமாச்சாரம்,'' என, நோண்டினாள்.

''பழைய கரன்சியை மாத்தித்தர்றதா சொல்லி, கோடிக்கணக்குல மோசடி செஞ்சிருக்காங்க. பெரிய 'நெட்ஒர்க்கே' இருக்காம். மத்திய புலனாய்வு போலீஸ்காரங்க மோப்பம் பிடிச்சு உள்ளே நுழைஞ்சாங்க; கட்டுக்கட்டா பணத்தை பார்த்ததும், வருமான வரித்துறைக்காரங்க ஆய்வு செஞ்சிருக்காங்க.

''வீட்டுக்குள்ள ரகசிய அறை இருக்கா? பணம் பதுக்கி வச்சிருக்காங்களான்னு தோண்ட ஆரம்பிச்சிருக்காங்க. 'எஸ்கேப்' ஆன தி.மு. க., புள்ளி மேல ஏகப்பட்ட வழக்கு நிலுவையில இருக்கு. அவரது தோட்டத்தை கண்காணிக்கிறாங்க. நெருக்கமான அரசியல்வாதி 'கெஸ்ட் ஹவுஸ்'ல பதுங்கி இருக்கலாம்னு தேட ஆரம்பிச்சிருக்காங்களாம். தேர்தல் நடந்துக்கிட்டு இருக்கறதுனால, இப்போதைக்கு போலீஸ் பாதுகாப்பு மட்டும் போட்டிருக்காங்க,''

''போலீஸ்ன்னு சொன்னதும், எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. 'லேடி' இன்ஸ்பெக்டருக்கு செம 'டோஸ்' விழுந்துச்சாமே''

''சிறுமி பலாத்கார, மர்டர் கேஸ்ல, குற்றவாளிக்கு துாக்கு அளித்த 'போக்சோ' கோர்ட், டி.என்.ஏ., ரிப்போர்ட்ல, இன்னொரு நபருக்கு தொடர்பு இருக்கறத கண்டுபிடிச்சு, 'பர்தர் இன்வெஸ்டிகேசனுக்கு 'ஆர்டர்' போட்டிருக்கு. அதை கேள்விப்பட்டதும், இன்வெஸ்டிகேசன் செஞ்ச லேடி இன்ஸ்பெக்டரை, ஏ.டி.ஜி.பி., சென்னைக்கு வரச் சொன்னாராம்.
''டி.என்.ஏ., ரிப்போர்ட் சம்பந்தமா, டி.ஜி.பி., ஆபீசுக்கு ஏன் முன்கூட்டியே சொல்லலைன்னு 'டோஸ்' விட்டாங்களாம். இந்த கேஸ்ல, 'எபிசியன்ட் ஆபீசரை' நியமிச்சு விசாரிக்க, கோர்ட் உத்தரவு போட்டிருப்பதால, டிஸ்ட்ரிக்ல இருக்குற லேடி இன்ஸ்பெக்டர்ஸ் 'லிஸ்ட்' எடுத்து யார் 'பெஸ்ட்'னு எஸ்.பி,, 'டிஸ்கஸ்' பண்றாராம்,''

''புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏகப்பட்ட 'கெடுபிடி' விதிச்சிருக்காங்களாமே...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.

''ஆமாக்கா, போன வருஷம் ஏகப்பட்ட ரகளை பண்ணிட்டாங்க; சாலை விபத்துல ஏழு பேர் இறந்தாங்க. அதனால, இந்த வருஷம் போலீஸ்காரங்க உஷாராகிட்டாங்க. மது அருந்தி இருந்தால், வாகனத்தை பறிமுதல் செஞ்சு, லைசென்ஸ் ரத்து செய்வாங்களாம். இரு வழிப்பாதையை 'ஒன்வே'வா மாத்தப்போறாங்களாம். பெண்களை கேலி செய்தால் நடவடிக்கை பாயும்னு சொல்லியிருக்காங்க. ஏடாகூடமா ஏதும்
நடந்துற கூடாதுங்கிறதுல, 'சிட்டி போலீஸ்'காரங்க ரொம்பவே கவனமா இருக்காங்க,''

''ஒரு கையெழுத்து போடுறதுக்கு ஒரு
சதவீதம் கமிஷன் கேக்குறாராமே, ஒரு அதிகாரி,'' என, பொடி வைத்தாள் சித்ரா.

''அடடே... ஒங்களுக்கும் தெரிஞ்சு போச்சா. சர்க்கார் சாமக்குளத்துல இருக்குற கல்வித்துறை அதிகாரிதான், அவரு. பி.எப்.,ல இருந்து பணம் எடுக்குறதுக்கு ஆசிரியர்கள், அலுவலர்கள் விண்ணப்பித்தால், மூணு லட்சத்துக்கு கீழேன்னா, கமிஷன் கொடுக்க வேண்டியதில்லையாம். மூணு லட்சத்துக்கு மேல லோன் வாங்கணும்னா, ஒரு 'பர்சன்டேஜ்' கமிஷன் கொடுக்கணுமாம். கொடுக்கலைன்னா, கையெழுத்து போட மாட்டாங்களாம்.

''இதேமாதிரி, மாவட்ட கருவூலத்துறையிலும் லஞ்சம் கொடுக்காம எந்த வேலையும் செய்ய முடியதாம். கரன்சி கொடுத்தாதான் பைல் 'மூவ்' ஆகுமாம்,''

''அதெல்லாம் வழக்கமா நடக்குறதுதானே'' என்ற சித்ரா, ''காலி மது பாட்டில் வாங்குறத காலேஜ் ஸ்டூடன்ஸ் 'ஜாப் ஒர்க்' மாதிரியா செய்றாங்களாமே,'' என, இழுத்தாள்.

''அதுவா, நம்மூர்ல ஏகப்பட்ட காலேஜ் இருக்கு; அதுக்குள்ளே ஹாஸ்டலும் இருக்கு. சில மாணவர்கள், தனியா வீடு எடுத்தும் தங்கியிருக்காங்க; வெளி ஹாஸ்டலிலும் தங்கியிருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, தனியார் காலேஜ் ஹாஸ்டலில், நிர்வாகிகள் ஆய்வு செஞ்சுருக்காங்க. ஏகப்பட்ட மது பாட்டில் சிக்கியிருக்கு,''

''இப்ப, காலேஜ் ஹாஸ்டல்ல போதை கலாச்சாரம் படுமோசமா போயிட்டு இருக்காம். அறை எண்: 101ல் காலி பாட்டிலை வச்சிடணுமாம். காலி பாட்டில் எடுத்துட்டு போறதை 'ஜாப் ஒர்க்' மாதிரியா, ஸ்டூடன்ஸ் சில பேரு செய்றாங்களாம்,''
''அடக்கொடுமையே... பிள்ளைகளை படிக்க வைக்க, பெற்றோர் எவ்ளோ கஷ்டப்படுறாங்க. இவுங்க என்னடான்னா, போதையில கவுந்து கெடக்குறாங்களே,'' என, நொந்து கொண்டாள் சித்ரா.
ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தை தாண்டி வந்த போது, ''அக்கா, கார்ப்பரேஷனுக்கு சேலத்துல இருந்து ஒரு அதிகாரி வந்திருக்காராமே...'' என, கிளறினாள் மித்ரா.
''அவரு, ஏற்கனவே இங்க, உதவி கமிஷனரா வேலைபார்த்தவருதான். முறைகேடா வேலைக்கு சேர்ந்தவருன்னு சொல்லி, மூணு ஐ.ஏ.எஸ்., ஆபீசர்ஸ் 'ரிப்போர்ட்' கொடுத்தாங்க. அதனால, அரசாணை வெளியிட்டு, சேலத்துக்கு மாத்துனாங்க. அந்த உத்தரவுல விசாரிச்சு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கணும்னு சொல்லியிருக்காங்க. இப்ப, 'குற்றம் உண்மையில்லை'ன்னு சொல்லிட்டதால, திரும்பி, 'ஆர்டர்' வாங்கிட்டு, நம்மூருக்கே வந்துட்டாராம்...''
''ஆனா, வேற மாதிரி கேள்விப்பட்டேனே...''

''பொறுமையா கேளுங்க, அதையும் சொல்றேன். சேலத்துல, ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செஞ்சுட்டதா சொல்றாங்க. தணிக்கை துறை ஆய்வுல, ரூ.81 லட்சம் மோசடி செஞ்சதுக்கான ஆதாரங்களை கண்டுபிடிச்சாங்களாம். போலீஸ்ல வழக்கு பதிவு செஞ்சிருக்காங்களாம்.

''இந்த வழக்குல துப்புரவு தொழிலாளியை சிக்க வச்சிட்டு, தப்பிச்சு வந்துட்டதா சொல்றாங்க. இங்க இருக்கற ஆபீசர்ஸ், இவருக்கு 'துணை'யா இருந்து, சப்பைக்கட்டு காரணம் சொல்லி, சமாளிக்கிறாங்களாம். மத்தவங்களுக்கு புரமோசன் பாதிக்கப்படுதுன்னு, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் புலம்பிட்டு இருக்காங்க,''

பூ மார்க்கெட்டை கடந்து, ப்ரூக் பாண்ட் ரோட்டில் இருந்த சிக்னலில் காத்திருந்தனர். அங்கிருந்த போலீஸ்காரரை பார்த்த சித்ரா, ''ஒரு போலீஸ்காரர், லஞ்சம் கேக்குற ஆடியோ, 'வாட்ஸ்அப்'ல வைரலா பரவிக்கிட்டு இருக்கு, தெரியுமா,'' என கேட்டாள்.

''அது, போத்தனுார் ஏரியா போலீஸ்காரரு. மூணு நம்பர் லாட்டரி விக்கிறவர்ட்ட, பணம் கேக்குற ஆடியோதான் வைரலாகிட்டு இருக்கு. அந்த போலீஸ்காரரு குனியமுத்துார்ல வேலை பார்த்த சமயம், விபசார கேசுல சிக்குனாராம்; உயரதிகாரிங்க காப்பாத்தி, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு துாக்கியடிச்சாங்களாம். அங்க இருந்து திரும்பி வந்தவரு கொஞ்ச நாள் அமைதியா இருந்தாரு; இப்ப, மறுபடியும் சேட்டைய ஆரம்பிச்சிட்டாராம். ஆடியோ விவகாரம் இன்ஸ்.,க்கு தெரியுமாம். இருந்தாலும் கண்டுக்காம இருக்காராம்.

''அதே மாதிரி, ஸ்டேஷன்ல இருக்கற ஒரு போலீஸ்காரரு, நைட், 10:00 மணியா தாண்டுனா, போதையின் உச்சிக்கே போயிடுறாராம். யாரு ஸ்டேஷனுக்கு வந்தாலும் திட்டுதான் விழுதாம்,''

அவிநாசி ரோடு மேம்பாலத்தை கடந்து, உக்கடம் வந்தனர். லட்சுமி நரசிம்மர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, ''இந்த கோவில் சம்பந்தமா ஒரு விஷயம் இருக்கு; அடுத்த வாரம் சொல்றேன்,'' என்றபடி, ஸ்கூட்டரை ஆன் செய்தாள் சித்ரா.

பதிலுக்கு மித்ரா, ''நான் சொல்றதைத்தான் மினிஸ்டரே கேட்பாரு... பார்க்குறியா.. பார்க்குறியா...ன்னு ஒரு 'துாய பெல்' போலீஸ் ஆபீஸரு, எல்லா போலீஸ் அதிகாரிகளையும் மிரட்டிட்டு திரியுறாராம்.

''இது, மினிஸ்டருக்கு தெரியுமான்னு தெரியல. இந்த 'துாய பெல்' பற்றி அடுத்தவாரம் நானும் ஒரு மேட்டர் சொல்றேன்...'' எனக்கூற, இருவரும் ஸ்கூட்டரில் பறந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X