அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் நாற்காலியில் மூன்றாண்டு: கணிப்புகளை பொய்யாக்கும் இ.பி.எஸ்.,

Updated : ஜன 01, 2020 | Added : டிச 31, 2019 | கருத்துகள் (65)
Advertisement
கணிப்புகள், பொய்யாக்கும்,சாதனை மலர், இ.பி.எஸ்.,மாவட்டம், அடிப்படை வசதி

சில மாதங்கள் கூட தாக்கு பிடிக்க மாட்டார் என கூறப்பட்ட, இ.பி.எஸ்., பலரின் ஆசைகளை பொய்யாக்கி, முதல்வர் பொறுப்பில், மூன்று ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளார். அதற்கு பேருதவி புரியும் அதிகாரிகள் இருக்கும் தைரியத்தில், அடுத்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று, முதல்வராக, நம்பிக்கையுடன் காய்களை நகர்த்தி வருகிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், பன்னீர்செல்வம் முதல்வரானார். அவரை பதவியிலிருந்து துாக்கிவிட்டு, தான் முதல்வராக, சசிகலா விரும்பினார். அதனால் ஏற்பட்ட நெருக்கடிகாரணமாக, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக, போர்க்கொடி துாக்கினார்.

அதைப் பற்றி கவலைப்படாமல், சசிகலா, பதவியேற்பதற்கான ஏற்பாடுகளை கவனிக்க துவங்கினார். அந்த நேரத்தில், சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை உறுதியான தீர்ப்பு வெளியானதும், அவரது முதல்வர் கனவு தகர்ந்தது.அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், இ.பி.எஸ்.,சை, சசிகலா முதல்வராக்கினார். திடீர் அதிர்ஷ்டமாக, நினைத்து கூட பார்க்காத, முதல்வர் பதவி, இ.பி.எஸ்.,சுக்கு கிடைத்தது. பன்னீர் அணி எதிர்ப்பு போன்றவற்றால், இ.பி.எஸ்., சில மாதங்கள் கூட தாக்கு பிடிக்க மாட்டார் என, அனைத்து தரப்பினரும் கருதினர்.அதற்கேற்ப, சசிகலா அக்கா மகன் தினகரனும், முதல்வர் நாற்காலியை நோக்கி, காய் நகர்த்த துவங்கினார்.

சுதாரித்த இ.பி.எஸ்., அவரை ஓரம் கட்டினார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களால், பதவி பறிபோவதைத் தடுக்க, பன்னீர்செல்வத்துடன் கை கோர்த்தார்.சசிகலா குடும்பத்தை முழுமையாக, கட்சியில் இருந்து ஒதுக்கி விட்டு, ஆட்சியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை, பதவி நீக்கம் செய்தார். இதனால், பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது.அடுத்து, 2019ல் லோக்சபா தேர்தலுடன், 22 சட்டசபை தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடந்தது. சட்டசபை தொகுதிகளில், வெற்றி பெறாவிட்டால், ஆட்சி கவிழும் என்பதை அறிந்த முதல்வர், வலுவான கூட்டணியை கட்டமைத்தார். லோக்சபா தேர்தலை விட, சட்டசபை இடைத்தேர்தலில், அதிக கவனம் செலுத்தினார்.லோக்சபா தேர்தலில் படுதோல்வியை தழுவியபோதும், சட்டசபை இடைத்தேர்தலில், ஒன்பது இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். அதன்பின், அனைவருடைய பார்வையும், இ.பி.எஸ்., பக்கம் திரும்பியது.லோக்சபா தேர்தலுக்கு பின், வேலுார் லோக்சபா தொகுதிக்கு, தேர்தல் நடந்தது. இதில், தோல்வியை தவற விட்டாலும், அந்த தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளில், மூன்று தொகுதிகளில், அ.தி.மு.க., அதிக ஓட்டுகளைப் பெற்றது. இது, இ.பி.எஸ்.,சுக்கு உற்சாகத்தை கொடுத்தது.
அதைத் தொடர்ந்து நடந்த, நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், அனைத்து யுக்திகளையும் பயன்படுத்தி, மிகப்பெரிய வெற்றியை ஈட்டினார். தற்போது, கட்சியில் பலம் வாய்ந்தவராகவும், ஸ்திரமான முதல்வராகவும் உருவெடுத்து விட்டார்.இவரது அடுத்தடுத்த வெற்றிக்கு, பலரும் உறுதுணையாக உள்ளனர். முக்கியமாக, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர், முதல்வரின் இரு கரங்களாக உள்ளனர். அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும், மாவட்ட செயலர்களையும், கட்சி நிர்வாகிகளையும், முதல்வரின் ஆதரவாளர்களாக மாற்றி வருகின்றனர்.மத்திய அமைச்சர்கள் சிலருடைய ஆதரவை பெற்று, பா.ஜ., மேலிடத்திற்கு நெருக்கமாகி உள்ளனர்.
முதல்வரின் சமூகத்தை சேர்ந்த, தொழில் அதிபர்கள், அதிகாரிகள் போன்றோர், தங்கள் சமுதாயத்திற்கு கிடைத்த, முதல்வர் வாய்ப்பை தவற விட்டுவிடக் கூடாது என்பதற்காக, அனைத்து உதவிகளையும், முதல்வருக்கு செய்து வருகின்றனர்.இவை அனைத்திற்கும் மேலாக, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், பக்கபலமாக உள்ளனர். தற்போதைய ஆட்சியில், அதிகாரிகளுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. அவர்கள் சுதந்திரமாக செயல்படுகின்றனர். எனவே, பசையான பதவிகளில் உள்ள அதிகாரிகள், இ.பி.எஸ்., அரசு தொடர்வதுடன், அடுத்து வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று, முதல்வராக வேண்டும் என நினைக்கின்றனர். குறிப்பாக, தி.மு.க., ஆட்சிக்கு வருவதை, அவர்கள் விரும்பவில்லை.

எனவே, அதற்கேற்ப மக்களை கவரும் வகையில், திட்டங்களை செயல்படுத்த, முதல்வருக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். முதல்வரும் அவர்கள் கூறுவதை கேட்டு, செயல்பட்டு வருகிறார். இதனால் ஆட்சி தொடர்கிறது.நீர் நிலைகளை பாதுகாப்பதற்கான குடிமராமத்து திட்டம், பொங்கலுக்கு, 1,000 ரூபாய் இலவசம் போன்றவை, மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. இதுபோல், மக்களை கவரும் பல திட்டங்களை, அடுத்தடுத்து செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது.ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், மத்திய அரசிடம் நிதியை பெற்று, கிராம அளவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. அடுத்து, 2021ல் நடக்க உள்ள, சட்டசபை தேர்தலுக்கு, தற்போதே ஆயத்தமாக, இ.பி.எஸ். தரப்பு முடிவு செய்து, அதற்கான பணிகளை துவக்கி உள்ளது.


தயாராகிறது சாதனை மலர்!


முதல்வராக இ.பி.எஸ்., பொறுப்பேற்று, பிப்ரவரி மாதம், மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. அதையொட்டி, மூன்று ஆண்டுகளில், தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை, மக்களிடம் எடுத்துரைக்க, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், மூன்றாண்டு சாதனை மலர் தயாரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்டம்தோறும் சாதனை மலர் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X