புன்னகை பூக்கும் புத்தாண்டே வருக

Added : ஜன 01, 2020
Advertisement
அப்துல் கலாம் கனவு கண்ட 2020ம் ஆண்டு பிறந்துவிட்டது. பூக்கும் பூ மரத்தை போல இந்த இனிய ஆண்டு மத்தாப்பு மலர்ச்சியுடனும் எதிர்பார்ப்பு மகிழ்ச்சியுடனும் பிறந்திருக்கிறது. நம் வீட்டிலிருந்த பழைய காலண்டர்களைத் துாக்கி எறிந்துவிட்டு புதிய காலண்டர்களை அதே இடத்தில் மாட்டிவிட்டோம். நம்மைப் பொறுத்தவரையில் புத்தாண்டு என்பது பழைய காலண்டரை எடுத்துவிட்டுப் புதிய காலண்டரை
 புன்னகை பூக்கும் புத்தாண்டே வருக

அப்துல் கலாம் கனவு கண்ட 2020ம் ஆண்டு பிறந்துவிட்டது. பூக்கும் பூ மரத்தை போல இந்த இனிய ஆண்டு மத்தாப்பு மலர்ச்சியுடனும் எதிர்பார்ப்பு மகிழ்ச்சியுடனும் பிறந்திருக்கிறது. நம் வீட்டிலிருந்த பழைய காலண்டர்களைத் துாக்கி எறிந்துவிட்டு புதிய காலண்டர்களை அதே இடத்தில் மாட்டிவிட்டோம்.

நம்மைப் பொறுத்தவரையில் புத்தாண்டு என்பது பழைய காலண்டரை எடுத்துவிட்டுப் புதிய காலண்டரை மாட்டுவது அல்லது மாற்றுவது! புத்தாண்டு குறித்த நம் புரிதல் அவ்வளவுதானா? ஓராண்டு முடியும்போது அந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வெளியிடுவது வழக்கம். அப்படி நம் வாழ்வில் தொகுப்பதானால் எதையெதைத் தொகுக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்! திரும்பிப் பார்க்கும்போது திருப்திகரமாக இருந்தால் கடந்த ஆண்டின் நாட்களைக் கண்டபடி செலவழிக்கவில்லை என்று பொருள். மற்றவர்களிடம் சொல்கிறமாதிரி எதுவுமே இல்லை என்றால் மிகச்சாதாரணமாக ஓர்ஆண்டினை நகர்த்தியிருக்கிறோம் என்று பொருள்.அந்த வயதிலும் சுறுசுறுப்புஎனக்கு ஆறுமுகம் என்று நண்பர் இருந்தார், ஆங்கிலத்திலும் தமிழிலும் பேரறிஞர். உலக அகராதிகளே அவரிடம் முப்பது உண்டு.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், நான் அவரைச் சந்தித்த போது அவருக்கு 90 வயதிருக்கும்! வயதின் தளர்ச்சி அவரிடம் எப்போதும் இருந்துநான் கண்டதில்லை. வெண்கலக்குரலில் ஒலிவாங்கி இல்லாமல் அவர் ஆன்மிக உரைகளை கணீரென்று வழங்கினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நான் அவரைச் சந்தித்தபோது 600 பக்க அளவில் ஒலிபெயர்ப்போடும் விளக்கவுரையோடும் திருவாசகத்தை மொழிபெயர்த்திருந்தார். ஜி.யு.போப் கல்லறையில் கொண்டுபோய் அம்மொழிபெயர்ப்பை வைத்து வணங்கிவிட்டுவந்த படத்தைக் காட்டினார். அமெரிக்காவில் பல இடங்களில் திருவாசக மொழிபெயர்ப்பு தொடர்பான சொற்பொழிவுகளை அவர் வழங்கிவிட்டு வந்தபோது 85 வயது கடந்திருந்தது! 90 வயதிலும் திருஞானசம்பந்தர் தேவாரத்தை மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாய் கூறியதும் எனக்கு ஆச்சர்யம்! காலையில் நான்கு மணிக்கு எழுந்துவிடுவார்; எழுந்ததும் கடுக்காய் தண்ணீர் அருந்திவிட்டு 108 தோப்புக்கரணம் போடுவார். நடைபயிற்சியை முடித்து ஏழுமணிக்கு தேவாரப் பாடல்களை மொழிபெயர்த்து மையூற்றுப் பேனாவால் எழுதத் தொடங்கினால் 12 மணிநேரம் எழுதிப் பார்த்திருக்கிறேன். மதிய உறக்கம் கிடையாது.

அவர் மேசைக்கு அருகில் நான்கு பரிட்சை அட்டை எப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும். ஒரு அட்டை மேல் இன்றைய பணித் திட்டம் என்று எழுதி, அன்று மொழிபெயர்த்து முடிக்கவேண்டிய பாடல்கள் பணிகள் குறித்த நாள்திட்டத்தைக் குறித்து வைத்திருப்பார். அன்று அந்தப் பணிகளை நிறைவு செய்யாமல் துாங்கமாட்டார். தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளாய் ஒவ்வொரு வியாழனும் நுாறு ஏழைகளுக்கு உணவு வழங்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். 94 வயதில் அவர் காலமானபோது அந்தஆண்டு திட்டமிட்ட தேவாரப் பாடல்களை மொழிபெயர்த்துச் சென்றிருந்தார்.

எப்போதெல்லாம் மனம் சோர்வுறுகிறதோ அப்போதெல்லாம் அந்த வயதிலும் அவர் சுறுசுறுப்பாகச் செயல்பட்டதை நினைத்துக்கொள்வேன்.எப்போதும் பரபரப்பு சிலரைப் பார்த்தால் நமக்கு வியப்பாகவும் பாவமாகவும் இருக்கும். எப்போது பார்த்தாலும் பரபரத்துக் கொண்டே இருப்பார்கள். சின்ன விஷயத்திற்குக் கூட டென்ஷனாகிக் கத்திக் கூப்பாடு போடுவார்கள். அவர்கள் இந்தப் புத்தாண்டிலிருந்து எல்லாவற்றையும் நிதானமாக அமைதியாகச் செய்வது என்று முடிவெடுத்துக் கொள்வது உடல்நலனுக்கும் மனநலனுக்கும் நல்லது. ஒரு செயலின் முடிவுக்குக் காட்டும் அவசரத்தை அந்தச் செயலை ஒவ்வொரு வினாடியும் உணர்ந்து செய்தால் கிடைக்கும் மனமகிழ்ச்சியைக் கருத்தில் கொண்டால் ஆண்டு முழுவதும் மனநிறைவோடு கழிக்கமுடியும்.கற்றுக்கொள்ளுங்கள்ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டே இருப்போம். தான் எப்போதும் உற்சாகமாக இருக்கவேண்டும் என்பதற்காக எண்பது வயதில் எம்.ஏ. தமிழ் பயிலவந்த ஒரு மூதாட்டியை நான் கண்டிருக்கிறேன். வெண்பா எழுவதுவதோ, பயணநூல் எழுதுவதோ, ராமானுஜம் எழுதிய தேற்றங்களைக் கற்பதோ, கதை எழுதுவதோ, ஏதோ ஒன்றை இந்த ஆண்டு புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடங்குங்கள், தொடருங்கள், கற்றுக்கொள்ள வயதோ வசதிகளோ தடையல்ல.நாள் முழுக்கத் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே நேரத்தைப் போக்குவதைவிட உங்கள் வீட்டிற்கருகேயுள்ள நுாலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்து வாரம் இரு புத்தகங்கள் படித்தே தீருவேன் என்று முடிவெடுத்துக் கொண்டால் இந்த ஆண்டு முடியும்போது நுாறு புத்தகங்களை படித்திருப்பீர்கள்.பக்குவம்தோற்காமல் இருப்பதும் வேர்க்காமல் உழைப்பதும் சாத்தியமில்லைதான். எனவே வெற்றி தோல்வி இரண்டையும் சரிசமமாய் ஏற்கும் பக்குவத்தைப் பெறுவோம்.யாருமில்லாதவர்கள் என்று யாருமில்லை.

ஆறுதலுக்கும் தேறுதலுக்கும் உகந்ததுதான் வாழ்க்கை. உறவுகளின் உன்னதத்தை உணருங்கள், உணர்த்துங்கள், உறவு என்னும் ஆலயத்திற்குள் செல்ல நான் என்னும் தன்முனைப்பை செருப்பைப் போல் வெளியே கழற்றிப்போட்டாக வேண்டும். நாம் நியாயப்படுத்தும் தவறுகள் நம்மைக் காயப்படுத்தத்தான் செய்யும். தவறான புரிதல், சரிதலுக்கு ஆரம்பம். எனவே மனிதர்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முயலுங்கள்.அறிவின் உயரமே நம் உயரம் என்பதையும் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும் வாழ்க்கை நிகழ்கால சொர்க்கம் என்பதையும் இந்தப் புத்தாண்டில் புரிந்துகொண்டு மனநிறைவோடும் மன மகிழ்ச்சியோடும் சிறப்பாக வாழ்வோம்.-சவுந்தர மகாதேவன்தமிழ்த்துறைத்தலைவர்சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிதிருநெல்வேலி. 99521 40275

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X