பொது செய்தி

தமிழ்நாடு

காவல் துறைக்கு உள்ள சவால்களும், தீர்வுகளும்!

Updated : ஜன 01, 2020 | Added : ஜன 01, 2020 | கருத்துகள் (4)
Advertisement
police,TN,TamilNadu,போலீஸ்,காவல்துறை

காவல் துறையையும், காவல் துறையினரையும் பிரித்து பார்க்க இயலாது. காரணம், அவர்களின் ஒவ்வொரு செயல்பாட்டையும், சமூகத்தில் உள்ள அனைவரும் கூர்ந்து கவனிக்கின்றனர்; கணித்து, மதிப்பிடுகின்றனர். ஆட்சியைக் கூட அசைக்கும் என்பதால், போலீசாரின் செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தினமும், 24 மணி நேரமும், மக்களோடு, காவலர்கள் முதல், உதவி ஆய்வாளர்கள் வரை தான் தொடர்பில் உள்ளனர். அவர்களின் நடவடிக்கை வைத்து தான், போலீசாரை மக்கள் மதிப்பிடுகின்றனர்.

காவலர்கள் நன்றாக செயல்பட வேண்டுமெனில், நல்ல உடல் நலமும், மன நலமும் பெற்றிருக்க வேண்டும். அது தான், போலீசாருக்கும், சமூகத்துக்கும் நன்மை அளிக்கும். போலீசாருக்கான பயிற்சி தான், மக்கள் நலனுக்கான அடித்தளம். அவர்களுக்கு, காவல் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் என்ற பெயரில், பயிற்சி அளிக்கின்றனர். ஆனால், பயிற்சி பள்ளிகள், கல்லுாரிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள், விருப்பமில்லாத, பயிற்சி அளிக்க இயலாதோராக உள்ளனர். இவர்களால், போலீசாரின் மனதில், நல்ல விதைகளை விதைக்க முடிவதில்லை. அதனால், சமூக சிந்தனையுள்ள போலீசார் வருவது சிக்கலாகிறது. பயிற்சி வெறுப்பால், எதிர்மறையான போலீசாரை தான் உருவாக்க முடிகிறது. அஸ்திவாரம் சரியில்லாதபோது, குறை எப்படி சரியாகும்!

நல்ல பயிற்சிக்கான கட்டடங்கள், தளவாடங்கள், நல்ல திறமையும், ஆர்வமும் உள்ள பயிற்சியாளர்கள், சிறப்பு ஊதியம் உள்ளிட்டவற்றை அரசு வழங்கினால், இந்த சவால்களை எளிதில் சமாளிக்கலாம்.


சமூக பிணைப்பு?


பிறப்பு முதல் இறப்பு வரை, சமூகத்தோடு போலீசார் இணைந்து வருவதால், அவர்கள் ஓரளவாவது, சமூகத்தோடு ஒன்றி போவது நலம். அதனால், போலீசார் சேர்க்கைக்கு அடிப்படை கல்வியாக, பிளஸ் 2வுடன், கம்ப்யூட்டர், வாகனம் ஓட்டுதல் உள்ளிட்டவற்றை கட்டாயப்படுத்த வேண்டும். போலீசாருக்கு, எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கை உள்ள நிலையில், பற்றாக்குறை காரணமாக, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், 12 மணி நேரம் பணியாற்ற வேண்டியுள்ளது.

இரவு ரோந்துக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் செல்வதால், உடல்நிலை பாதிக்கப்படுகிறது. தங்களையும், குடும்பத்தாரையும், கவனிக்க முடியாத மன அழுத்தத்தில், விரக்தியையும், வெறுப்பையும் மக்களிடம் காட்டுகின்றனர். வெறுப்பைக் காட்டாத சிலர், பணியில் மாரடைப்பில் மரணமடைகின்றனர். வார விடுப்பை, தவறாமல் வழங்கினாலே, அவர்கள் மகிழ்ச்சியாக பணியாற்றுவர். தேர்தல் நேரத்தை விட, மற்ற நேரங்களில், இட மாறுதல் செய்யாமல் இருந்தால், பயணத் துாரம், நேரம், அசதி குறைந்து, அதிக நேரம் பணியாற்றுவர்.

போலீசாரின் எதிர்பாராத மரணத்தின் தன்மையை பொறுத்து, 'ரிஸ்க் அலவன்ஸ்' தொகையை, 10 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தினால், குடும்பத்தை காப்பாற்ற முடியும். வாகன சோதனை வழக்குகளுக்கான இலக்கை நிர்ணயம் செய்யாமல் இருந்தால், பொதுமக்கள் மத்தியில், போலீசாருக்கு மனகசப்பு ஏற்படாது.


அதிகாரிகளுக்கு சவால்:


போலீசார் சங்கம் அமைத்தால், வேலை வாங்க முடியாது. எனவே, போலீசாரின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றினாலே, சங்க கோரிக்கை மங்கி போகும். மனித உரிமை புகார்; நீதிமன்றத்தை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்; அரசு வழக்கறிஞர் கைவிடுவது போன்ற காரணங்களுக்காக, போலீசார் செயல்பாடுகளை குறைத்து கொள்கின்றனர். திடீர் போராட்டம், சாலை மறியல் உள்ளிட்டவற்றில், நுாற்றுக்கணக்கானோரை கைது செய்யும்போது, போதிய உணவு வழங்க முடியாமல் தவிக்கின்றனர். இதற்கு, 10 ஆயிரம் ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக நிரந்தர வைப்பு தொகையை உயர்த்த வேண்டும்.

குற்ற வழக்குகளை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில், அனைத்து குற்றப்பிரிவு ஆய்வாளர்களுக்கும், வாகனம் வழங்க வேண்டும். குற்றங்களை கண்டுபிடித்த ஆய்வாளர்களை, மாதாந்திர கூட்டத்தில், எஸ்.பி.,க்கள், கமிஷனர்கள் பாராட்டி வெகுமதி வழங்கினால், அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வந்து விடும். குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க உதவும், 'சிசிடிவி' கேமராக்கள் வாங்கவும், பராமரிக்கும் செலவிற்கும் நன்கொடையாளர்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இதைத் தவிர்க்க, காவல் துறை பட்ஜெட்டில், நிதி ஒதுக்கி, தொழில்நுட்ப பிரிவினரையும் பணியமர்த்த வேண்டும். காவல் துறையினர், வழக்கறிஞர்களுடன், நட்புறவை வளர்த்து கொண்டால், பாதி பிரச்னைகள் தீரும்.

வழக்கறிஞர்களும், பழைய பிரச்னையை மறப்போம், மன்னிப்போம் என்ற மனநிலையில் கடக்க வேண்டும். அதைவிடுத்து, பிரச்னையை ஞாபகம் வைத்து, நினைவு தினம் கொண்டாடினால், பிரச்னைகள் மேலும் அதிகரிக்கும். வாகனத் தணிக்கை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, வழக்கறிஞர்கள், காவல் நிலையத்தை விடுத்து, நீதிமன்றத்தை நாடினால், பாதிப் பிரச்னைகள் தீரும். மாவட்ட காவல்துறை அதிகாரிகள், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, தங்கள் பகுதியில் உள்ள, வழக்கறிஞர்களை சந்தித்து, நட்புடன் பழகினால், பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம்.


காலத்திற்கேற்ற மாற்றம்:


முன் போல், மாவட்டங்களுக்கு இடையிலான குற்றங்கள் நடப்பதில்லை. தற்போதைய குற்றங்கள், நாடு கடந்தும் நடப்பதால், பழைய நடைமுறைகளை மாற்ற வேண்டியுள்ளது. மேலும், வளரும் தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப, மின்கருவிகள் உள்ளிட்டவற்றை கையாளும், திறமையான காவலர்களை நியமிக்க வேண்டியது கட்டாயம். 'சைபர் கிரைம்' பிரிவுகளை மாவட்டந்தோறும் உருவாக்குவதை விரைவாக்கினால், தொழில்நுட்ப குற்றங்களை எளிதில் தீர்க்கலாம். சாதாரண திருட்டு முதல், கொலை, கொள்ளை, கூட்டுக்கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ, போதைப்பொருள் தான் காரணமாகிறது.

அதற்கான, 'நெட்வொர்க்'கை கண்டுபிடித்து, அடக்க வேண்டியது காவல் துறைக்கு சவாலான காரியம் தான். ஆனாலும், இளைஞர்களின் நலனில், காவல் துறைக்கு பொறுப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. இன்று, தமிழகத்தின் உணவகம் தொடங்கி அனைத்து இடங்களிலும், மாற்று மொழி பேசுவோர் பணி செய்வதால், அவர்களின் ஆவணங்களை பெறவும், குற்றவாளிகளை விசாரிக்கவும், போலீசாருக்கு வேற்று மொழிக் கல்வி அளிக்க வேண்டியது அவசியமாகிறது.


ஊடுருவும் சமூக விரோதிகள்:


கூடங்குளம், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்களில் இருந்து போலீசார் பாடங்களை கற்றால் மட்டுமே, அடுத்து வரும் சவால்களை எதிர்கொள்ள முடியும். ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்களின் நிறைவுப் பகுதியை, கலவரமாக மாற்றிய இயக்கங்கள் இன்னும் துாங்கவில்லை என்பதை, காவல் துறையினர் உணர வேண்டும். போராளிகள், கல்லுாரி மாணவர்கள் நடத்தும் போராட்டங்களில், சமூக விரோதிகள் ஊடுருவி அப்பாவி மக்களை பழிவாங்கி, போராட்டத்தை திசை திருப்புகின்றனர். அதேபோல், போலீசாரும், அவர்களுடன் நட்புறவை வளர்த்து கொண்டால், சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, கலவரங்கள் வராமல் தடுக்கலாம்.

பெரிய போராட்டங்கள், ஊர்வலங்கள் குற்றங்கள் நடைபெறும் இடங்களில், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா விமானங்களில் கேமரா பொருத்தி கண்காணித்தால், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண முடியும்.


நாட்டிற்கு ஆபத்து?


மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை எதிர்த்து போராடுபவர்களை, கண்காணித்தாலும் அவர்கள், 'இ - மெயில், வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்களின் வழியாக, தொடர்பு கொள்வதை கண்காணிக்க, மின்னாளுமை உள்ள காவலர்களையும், கண்டுபிடிக்கும் கருவிகளையும் வைத்திருப்பது அவசியம். இதை அரசு தாமதிக்காமல், உடனே செய்ய வேண்டும். குழு அமைப்புகளையும், அதன் உள் அமைப்புகளையும் கண்காணிக்க தனிப்பிரிவுகள் இருந்தாலும், மாவட்ட அளவிலும், போலீஸ் அதிகாரிகள், தங்களின் எல்லைக்கு உட்பட்ட மலை கிராமங்கள் வரை, என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க வேண்டும்.

ரகசிய கூட்டம், புதிய ஆட்களின் நடமாட்டம், ஊராரின் ஒத்துழைப்பு உள்ளிட்ட அனைத்தையும் ஆராயும் கண்காணிப்ப வட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும். தங்களுக்கு கிடைக்கும், தகவல்களை தனிப்பிரிவு உயரதிகாரிகளுக்கு பரிமாறி, சவால்களை துவக்கத்திலேயே களையலாம். தரைவழி மட்டுமல்லாமல், கடல் வழியாகவும் வரும் ஆபத்தானவர்களை கண்டுப்பிடிக்கும் வகையில், மீனவர்களுடன் நட்புறவை வளர்த்து கொள்ள வேண்டும். கடலோர பகுதிகளை கண்காணிப்பதால், தமிழகம் மட்டுமின்றி, நாட்டிற்கே வரும் ஆபத்துகளை எதிர்கொண்டு, வெற்றி பெற முடியும்.

தற்போது, காவல் துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 'காவலன்' செயலி என்ற, மொபைல் ஆப் வாயிலாக, தமிழக காவல் துறை, தன் மிகப்பெரிய சவாலை, சாதனையாக்கி வருகிறது என்பதை மறுக்க முடியாது. காவலன் செயலி அனைத்து தரப்பு மக்களின் பயன்பாட்டிற்கு வரட்டும்; குற்றங்கள் குறையட்டும். இதுவே, பொது மக்களுக்கான புத்தாண்டு, பொங்கல் மற்றும் குடியரசு தினப் பரிசு. வாழ்த்துகள்!

தொடர்புக்கு:
இ - மெயில்: madasamy5655@gmail.com
மொபைல் போன்: 98407 33644

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
01-ஜன-202012:18:39 IST Report Abuse
 Sri,India முதலில் காவல்துறையும் சட்டதை மதிக்க வேண்டும். எந்த ஒரு தவறு செய்தாலும் இட மாற்றம் என்ற நவீன தண்டனையை கொடுக்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாத மாமூல்,கட்ட பஞ்சாயத்து செய்யும் போலீசாரை வீட்டுக்கு அனுப்பினால் மட்டுமே போலீஸ் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். மேலும் குற்றவாளிகளுடன் நணபர்களாக பழகும் போலீசாரால் போலீசாரின் என்ணிக்கையை உயர்த்தி போலீஸாரின் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். இனி வரும் காலங்களில் திருடர்களை விட போலீசார் செய்யும் குற்ற வழக்குகளே அதிகமாகும் என்று சொல்வதை போல போலீசாரின் ஒழுக்கமின்மை அதிகரித்து வருவது நல்ல திறமையான போலீசாருக்கும் சவாலான ஒன்று தான் .
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
01-ஜன-202012:01:25 IST Report Abuse
Krishna People Know that Atleast 50% Criminal Cases are False But Never Police-Courts Never Detects-Punish False complainants (Esp. Vested Groups-Women Fanaticists) Etc Etc-Just for Cheap Vested Interests-for showing Powers, Increasing Strength, Livelihood etc) which is Again Exploited by Said Grave Anti-Socials. Unless Police-Court Detect & Punish False Complainants in Fast-NeutralUnbiased-Cheaper-Qualitative Manner, People Will Not Trust Them And There Will be No Justice In India
Rate this:
Share this comment
Cancel
R chandar - chennai,இந்தியா
01-ஜன-202012:00:15 IST Report Abuse
R chandar This department is a most department as they are only directly interacting with public people very often , they know the pulse of the people they should be given with following 1) Good Salary 2) Family and Employee protection for them by way of medical to family and employee 3) All police men should be given with good living space of house 4) Good and daily risk allowance based on their coming to duty to be given 5) More reputed public people or retirees should be used for control of traffic and maintenance of office ,and records at station level. 6) All street to be provided with police booth with 2 people in charge of that place 7) Night shift and day shift to be given as an option to them 8) More training from school level itself to be done with conducting seperate course for them 9) Instruction should be given to them not to be arrogant with public on regularizing and following up for traffic rule 10) More computerize of records to be done ,that is validity of insurance ,licence ,RC book details are to be check with fixing bar code or sensor in number itself instead of asking for documents. 11) Sensor to be fixed in driver seat or in bike to be enabled with indicator in vehicle itself to identify the drunken drive by people.12) Enabling surveilance camera in police shirt connected to server with office to be enabled with all police officials.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X