பொது செய்தி

தமிழ்நாடு

இளம் தலைமுறை விரும்பும் இனிய கல்வி திட்டம்: கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு

Updated : ஜன 01, 2020 | Added : ஜன 01, 2020 | கருத்துகள் (10)
Advertisement
இளம் தலைமுறை, கல்வி திட்டம், கல்வியாளர்கள்,

வல்லரசாக மாறும் வேகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும், இந்திய இளம் தலைமுறையினரை, அவர்கள் விரும்பும் வகையில், சர்வதேச அளவிலான கல்வியை கற்க வைக்கும் வகையில், கல்வியின் தரமும், திட்டமும் மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்த குருகுல கல்வி காலம் முதல், ஆங்கிலேயர் அளித்த, 'மெக்காலே' கல்வி திட்டம் வரையிலும், தமிழகம் தான் கல்வியில் முன்னோடியாக திகழ்கிறது. சமச்சீர் கல்வி திட்டம் மற்றும், 2019ல் அமலுக்கு வந்துள்ள புதிய பாட திட்டம் ஆகியவற்றில், தமிழகத்தின் கல்வி திட்டங்கள் சிறப்பாக உள்ளன.ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்தும் விதம், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் பங்களிப்பு, பொதுமக்களின் ஒத்துழைப்பு, அரசின் வெளிப்படைத்தன்மை போன்றவை மாறினால், இந்த கல்வி திட்டத்தின் பலன் கைமேல் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. பாலர்வாடி என்று சொல்லப்பட்ட, அரசின் சத்துணவு மையங்களில், 'அ' னா, 'ஆ' வன்னா கற்று, கல்வியை துவங்கியவர்கள் தான், இன்று பெரும் தலைவர்களாகவும், பெரும் வணிகர்களாகவும், கல்வியாளர்களாகவும் வலம் வருகின்றனர். நவீன இந்தியாவுக்கு ஏற்ப, அந்த பாலர்வாடிகள் எல்லாம், 'பிளே ஸ்கூல்'களாகவும், எல்.கே.ஜி., -யு.கே.ஜி., - நர்சரி பள்ளிகளாகவும் மாறி விட்டன. அத்துடன், தமிழக அரசும் நிதியுதவி செய்து, நவீன டிஜிட்டல் முறை கல்வியை அறிமுகம் செய்துள்ளது.


ஸ்மார்ட் வகுப்பு


கண்ணை கவரும் விளையாட்டு பொருட்கள், அலங்காரமான வகுப்பறை, மாண்டிசோரி முறை பயிற்சிகள் என்று, அரசின் நர்சரி பள்ளிகள், தரம் உயர்வு பெற்று வருகின்றன. பிரைமரி என்ற தொடக்க பள்ளிகள் முதல், மேல்நிலை பள்ளிகள் வரை, ஸ்மார்ட் வகுப்புகள், ஸ்மார்ட் ஆய்வகங்கள் என, உள் கட்டமைப்பு வசதிகளும் மாறி விட்டன. தனியார் பள்ளிகளுக்கு நிகரான பல வண்ண சீருடைகள், இலவச லேப்டாப், இலவச சைக்கிள் என, எண்ணற்ற திட்டங்களும், மாற்றங்களும், அரசு பள்ளிகள் மற்றும் அரசின் கல்வி திட்டத்தை, 20ம் நுாற்றாண்டில் இருந்து, 21ம் நுாற்றாண்டுக்குள் எடுத்து வந்துள்ளன.வரும் ஆண்டில், மாணவ -- மாணவியருக்கு இலவச காலணிகளுக்கு பதில் ஷூ, சாக்ஸ் வழங்கப்பட உள்ளது.இந்நிலையில், புதிய பாட திட்டம் என்பது, இந்தியாவில், மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில், மிகவும் விரிவான பாட திட்டமாக அமைந்துள்ளது. முந்தைய காலங்களில், தமிழகத்தின் மெட்ரிக்குலேஷன் பாட திட்டங்களை படிக்க, மற்ற மாநில மாணவர்களும் போட்டி போடும் நிலை உண்டு.


கசப்பு மருந்து


அதன்பின், சமச்சீர் கல்வி வந்ததும், மெட்ரிக் பாட திட்டம் கலைக்கப்பட்டது. அதனால், தமிழக மாணவர்களில் பெரும்பாலானவர்கள், சி.பி.எஸ்.இ.,யின் பக்கம் படையெடுக்க துவங்கினர். இந்நிலையில் தான், ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயசந்திரனின் கடும் உழைப்பில், கல்வியாளர்கள், அறிஞர்கள் அடங்கிய நிபுணர்கள் குழு, நாட்டிலேயே முதன்மையான பாட திட்டத்தை, தமிழகத்துக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பாட திட்டம், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தை விட கடினமாகவும், விரிவாகவும் இருப்பதாக, பெற்றோர் மற்றும் ஆசிரியர் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், நோய் தீர்க்கும் மருந்து கசக்கும் என்பது போல, 15 ஆண்டுகளாக பின்தங்கி இருந்த பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்த, இந்த கசப்பு மருந்து தேவையாக உள்ளது. கசப்பு மருந்து என்பதால், அதை உட்கொள்ள பயந்து, நோயாளிகளின் உடல்நிலையும் மோசமாகி விடக்கூடாது.ஆம், கடினமான, தரமான பாட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக பொது தேர்வுகள், தேர்ச்சி மதிப்பெண்ணில் மாற்றம் என, புதிதாக அடுக்கடுக்கான அறிவிப்புகளை அளிப்பது, மாணவர்களிடையே எதிர்வினையான விளைவையும் ஏற்படுத்தும்.


அவசர மாற்றம் தேவையா?


தமிழக மாணவர்கள் தரமான கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கில், புதிய பாட திட்டம் அமலாகியுள்ளது. 15 ஆண்டு காலம் படித்த பாடங்களை மாற்றி, புதிய விரிவான பாட திட்டத்தை புரிந்து, அவற்றுக்கு மாணவர்களும், ஆசிரியர்களும் தயாராக வேண்டும். அதற்கு உரிய நேரம் இல்லாத நிலையில், அதனுடன் பிளஸ் 1 பொதுத் தேர்வு, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கான பொது தேர்வு, தேர்வு மதிப்பெண்ணில் மாற்றம் என, அடுக்கடுக்கான திட்டங்களை அமல்படுத்துவதால், மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிட்டு, ஓடும் அபாயம் உள்ளது. ஒரே நேரத்தில், அனைத்து வகையான மாற்றங்களையும் ஏற்படுத்துவது, விவேகமான செயல் அல்ல. மாற்றங்கள் படிப்படியாக இருக்க வேண்டும். முதலில் மாற்றங்களை ஏற்று கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும். அதற்கான எண்ண ஓட்டங்களை உருவாக்கி, மாணவர்களையும், பெற்றோரையும் தயார்படுத்த வேண்டும்.


பெற்றோர் அச்சம்


அதை விடுத்து, கல்வி திட்டத்தை மாற்றுவதாக கூறி, ஒட்டு மொத்தமாக பாட திட்டத்தில் மாற்றம், வினாத்தாளில் புதுமை, ப்ளூ பிரின்ட் நீக்கம், நுழைவு தேர்வுகள் கட்டாயம், புதிதாக பொது தேர்வுகள் என, புதியவற்றைப் புகுத்தியிருப்பது, தமிழக மாணவர்களையும், பெற்றோரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.முன்கூட்டியே திட்டமிடப்படாத மாற்றங்கள், திடீர் அறிவிப்புகள் மற்றும் பின் விளைவுகளை பற்றி ஆய்வு செய்யாத அறிவிப்புகள் ஆகியன, தமிழக பள்ளி கல்வியில், அலுவலர்கள் முதல் பெற்றோர் வரை, பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளன.இளம் தலைமுறை மாணவர்கள், இயந்திரம் போன்று மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இயந்திரங்களை பொறுத்தவரை, அவை மனிதன் இயக்குவதற்கு ஏற்ப மட்டுமே இயங்கும். மாணவர்கள் என்பவர்கள் வருங்கால சந்ததிகள்; அவர்கள் இந்தியாவின் எதிர்காலத்தை தங்களின் கற்பனையாலும், கடின உழைப்பாலும், எண்ண ஓட்டங்களாலும் கட்டமைக்க வேண்டும். வெறும் இயந்திரமாக மாறினால், இயல்பான கல்வியும், ஒழுக்கமும் பறிபோகும். கல்வியில் இடைநிற்றல் அதிகமாகும். படிப்பறிவு மற்றும் உயர்கல்விக்கான ஆண்டு சராசரி மாணவர் சேர்க்கை குறையும். மற்ற மாநில மாணவர்களை விட, உயர்கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கும் அபாயம் ஏற்படும். எனவே, மாணவர்களின் மனநிலை, வயது, கல்விச்சுமை, குடும்ப சூழல், பொருளாதார வேற்றுமைகள், கிராமப்புற, நகர்ப்புற வசதிகள் இடையிலான ஏற்றத்தாழ்வு, நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் சுமை அதிகரிப்பு போன்றவற்றின் அடிப்படையில், கல்வி திட்டத்தில் மக்களுக்கு நலன் தரும் முடிவுகளை, அரசு எடுக்க வேண்டும்.


பாராட்டா; பலனா?


கவர்ச்சி அறிவிப்புகளும், பரபரப்பு திட்டங்களும் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரு நாள் பாராட்டை பெற்றுத் பெறலாம். ஆனால், நீண்ட காலம் அதை பின்பற்ற வேண்டிய மாணவர்கள் பயன் பெறுவரா? அதனால், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும், தமிழக மாணவர்களுக்கு பலன் கிடைக்குமா என்பதை, பள்ளி கல்வி துறையும், தமிழக அரசும் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.மேலை நாடுகள் மட்டுமின்றி, இந்தியாவிலும் நுாற்றாண்டுகளாக பின்பற்றப்படும் கருத்து கேட்பு முறையை, தமிழக அரசு பின்பற்ற வேண்டும். சமூக அமைப்பின் எண்ணங்களை அறிந்தும், நடுநிலையாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளை அறிந்தும், புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும். நினைத்தவுடன் திட்டத்தை அறிவிப்பது, பின் பாதியில் அதை மாற்றுவது அல்லது வாபஸ் பெறுவது போன்ற நடவடிக்கை, திட்டமிடப்படாத நிர்வாகத்துக்கு உதாரணம்.


தரமான மாற்றம்


இந்திய பார்லிமென்ட் முறை, மற்றவர்களின் பார்வைகளை, கருத்துகளை கேட்டு நடவடிக்கை எடுக்கும் வகையிலான, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஜனநாயக முறை. இந்த முறையை விட்டு, எந்த முடிவுகளை மேற்கொண்டாலும், அவை நாட்டின் வளர்ச்சிக்கோ, இளம் தலைமுறைக்கோ நீடித்த வளர்ச்சியை தராது என்பதை, இந்த புத்தாண்டில் நினைவு கூர்ந்து, இளம் தலைமுறைக்கு உதவும் கல்வி திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும்என்பதே, கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஜன-202017:53:39 IST Report Abuse
சரவணன் அருமையான கட்டுரை நன்றி
Rate this:
Share this comment
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
01-ஜன-202016:41:20 IST Report Abuse
ANANDAKANNAN K நம் நாட்டில் எப்போ அரசியல் தலையீடு கல்வி துறையில் வந்ததோ அன்றே கல்வி என்பது ஊனம் ஆகிவிட்டது, பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் அரசு பள்ளிகளை கஷ்டப்பட்டு திறந்து வைத்தார் அதற்காக ஏழை குழந்தைகளை பள்ளிக்கு வர மத்திய சத்துணவு திட்டம் கொண்டு வந்து செயல் படுத்தினார், ஆனால் இன்றோ ஏன்னா நடக்குது கல்வி தனியார் கையில் உள்ளது இது தான் திராவிட கட்சிகளின் பங்கு, எங்கே மத்திய அரசு பள்ளியான நவோதய இங்கு வந்தால் அனைவரும் ஹிந்தி கற்று நம்மை கேள்வி கேட்பார்களோ என்று அதை இன்றுவரை இங்கு அனுமதி அளிக்கவில்லை, இதை இங்கு இருக்கும் மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள், புரிந்த நபர்கள் CBSE ஸ்கூலில் சேர்த்துவிடுவார்கள் இதனால் பாதிக்க படும் முதல் நபர் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமே, இப்படி இருந்தால் நாம் எப்படி குழந்தைகளின் கல்வியை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வது, இப்போ இருக்கும் கல்லுரி மாணவர்கள் ஆங்கிலத்தில் முறையாக லீவு லெட்டர் கூட எழுத மாட்டார்கள், இதனால் என்னாகும் ஸ்கில் PERSON எவரும் வர மாட்டார்கள், மேலும் இந்த இந்த UNSKILL PERSON என்ன சொல்லுவார்கள் நாங்கள் எங்கு போனாலும் வேலை கிடைக்கவில்லை என்று, சென்னை,கோவை,திருப்பூர், போன்ற நகரங்களில் திறமை உள்ள நபர்கள் பல லட்சம் பேர் தேவை தான் ஆனால் கிடைக்கவில்லை, இதனால் நம் தொழிற் சார்ந்த படைப்புகளை உருவாக்க முடியவில்லை, இன்று நாம் கட்கும் கல்வி என்பது மனப்பாடம் போன்ற நிலையே சுயமாக சிந்திக்க விடும் கல்வி முறை இல்லை, உனக்கு ஆங்கிலம் தெரியவில்லையே அப்போ எப்படி டிகிரி வாங்குவ இது போன்ற மாணவர்களை கவலை கொள்ளும் நடைமுறைதான் இன்று உள்ளது, அதற்க்கு பதிலாக அந்த மாணவனுக்கு என்ன திறமை உள்ளதோ அதை அவன் கட்கும் கல்வி வெளி கொண்டு வர வேண்டுமே தவிர அவனை அந்த கல்வி பாதியில் நிற்க வழிவகை செய்ய கூடாது, கல்வி என்பது உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும் அதை விட்டு மனப்பாடம் செய்யும் நடைமுறையாக இருக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
01-ஜன-202016:10:19 IST Report Abuse
Endrum Indian மெக்காலே கொண்டு வந்தது தான் இந்த Jack and Jill Went up the Hill, Twinkle Twinkle Little star என்று மேற்கு வங்கத்தில் முதன் முதலாக அதன் மூலமாக இந்து குரு -சிஷ்ய கல்வி முறையை நாசம் செய்தவர். குரு சிஷ்ய கல்வி முறை இன்றும் முஸ்லீம் சமூகத்தில் மதரசா மூலம் பரப்பப்படுகின்றது. திராவிடம் இருக்கும் வரை அந்த மாநிலத்தில் நல்ல கல்வி என்பது வெறும் கனவாகத்தானிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X