இந்த செய்தியை கேட்க
திருநெல்வேலி: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, திருநெல்வேலியில் நடந்த முஸ்லிம் அமைப்பு மாநாட்டில், பிரதமர் மோடி, அமித்ஷாவின் 'ஜோலி'யை முடிக்க சொல்லி, கொலை மிரட்டல் விடுத்தார் நெ.கண்ணன். போலீஸ் வழக்குப் பதிவு செய்ததால் தலைமறைவானார் . தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைதான, நெ.கண்ணனை ஜன., 13 வரை நீதிமன்ற காவலில் வைக்க நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில், டிச.,29ம் தேதி, ஒரு முஸ்லிம்கள் அமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த கூட்டம் நடந்தது. இதில் பேசிய, தமிழ் கடல் எனவும், தமிழ் அறிஞர் எனவும் தன்னை கூறிக்கொள்ளும் நெ.கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஏக வசனத்தில் திட்டியதுடன், 'முஸ்லிம்கள் யாராவது பிரதமர் மோடி, அமித் ஷாவின் ஜோலியை முடிப்பார்கள் என எண்ணினேன்' என சர்ச்சையான கருத்தை பேசினார்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் பா.ஜ.,மாவட்ட தலைவர் தயாசங்கர் மனு அளித்தார். இதன்படி நெ. கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதனால், உடல்நலக்குறைவு ஏற்பபட்டதாக கூறி, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், நெல்லை தனியார் மருத்துவமனைக்கு சென்றார். பின், மதுரைக்கு அழைத்துச்செல்வதாக கூறி, அங்கிருந்து சென்றனர். ஆனால் அவர், மதுரைக்கு செல்லவில்லை. அவரை கைது செய்ய வலியுறுத்தி, மாநிலத்தில் பல்வேறு இடங்களில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த நெ.கண்ணன், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் ஓட்டலில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற திருநெல்வேலி போலீசார், நெ.கண்ணனை கைது செய்து, நெல்லைக்கு அழைத்து வந்தனர். பின்னர், மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கண்ணனை அழைத்து வந்த போலீசார் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதன் பின், நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நெ.கண்ணன் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு பின், அவரை ஜன.,13 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, நெ.கண்ணன் மீது ஏற்கனவே 3 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டநிலையில், தற்போது ஜாமின் கிடைக்காமல் இருப்பதற்கான 153 ஏ, 506 1 ஆகிய பிரிவுகள் சேர்க்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE