இந்த செய்தியை கேட்க
மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் 79 வயது மூதாட்டி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் 515 மாவட்ட கவுன்சிலர்கள், 5090 ஒன்றிய கவுன்சிலர், 9624 கிராம ஊராட்சி தலைவர்கள், 76,746 ஊராட்சி கவுன்சிலர்கள் ஆகிய பதவிகளுக்கு டிச.,27, 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது.

இதற்காக இன்று (ஜன.,02) எண்ணப்பட்ட ஓட்டு எண்ணிக்கையில், முடிவுகள் வெளியிடப்பட்டது. திருப்பூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், 82 வயது விசாலாட்சி என்னும் மூதாட்டி ஊராட்சி தலைவராக வெற்றிப்பெற்றார். அதேபோல், மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தில் அரிட்டாப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தலில் 79 வயதான வீரம்மாள் என்ற மூதாட்டி, 195 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுவரையில் 2 முறை போட்டியிட்டு தோல்வியை தழுவிய வீரம்மாள், 3வது முயற்சியில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளார். வயதானாலும் விடாமுயற்சியுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற வீரம்மாளுக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், சூலகிரியில், காட்டிநாயக்கன்தொட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21 வயதான கல்லூரி மாணவி ஸ்ரீசந்தியா ராணி வெற்றி பெற்றார். இவர், பி.பி.ஏ., 2ம் ஆண்டு படித்து வருகிறார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச வயதாக 21 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே வயதில் பஞ்சாயத்து தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீசந்தியா, இளம் வயது பஞ்சாயத்து தலைவி என்னும் பெருமையை பெற்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE