பாக்.,கின் கொடுமையை கண்டித்து போராட தயாரா? மோடி ஆவேசம்!

Updated : ஜன 03, 2020 | Added : ஜன 03, 2020 | கருத்துகள் (45)
Share
Advertisement
Modi,CAA,CAB,NRC,PM,Pakistan,பாகிஸ்தான்,மோடி,பிரதமர்

துமகூரு: ''குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும், காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், பாகிஸ்தானில், மற்ற மதத்தின் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் ரீதியிலான தாக்குதல்கள் குறித்து பேசாதது ஏன்... சர்வதேச அளவில் பாகிஸ்தான் முகத்திரையை கிழித்தெறிய வேண்டாமா,'' என, பிரதமர் நரேந்திர மோடி, ஆவேசமாக பேசினார்.

இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று கர்நாடகா வந்தார். டில்லியிலிருந்து பெங்களூரு வந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் துமகூரு சென்றார். துமகூரு சித்தகங்கா மடத்தில், மறைந்த சிவகுமார சுவாமிகளின் நினைவு இடத்துக்கு சென்று வணங்கினார்; பின், அவரது அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இதையடுத்து, மடத்திலுள்ள மாணவர்களுடன், கலந்துரையாடினார்.

அப்போது, மோடி பேசியதாவது: நாட்டின் நிலை, 21ம் நுாற்றாண்டின் முதல், 10 ஆண்டுகளில் எப்படி இருந்தது என அனைவருக்கும் தெரியும். தற்போது அந்த நிலை மாறியுள்ளது. மகளிர், இளைஞர்கள், தலித்கள், ஒடுக்கப்பட்டோர் என அனைவரிடையே, புதிய எதிர்பார்ப்புகள் எழுந்து உள்ளன.


வங்கி கணக்கு:


பல ஆண்டுகளாக சந்தித்து வந்த பிரச்னைகளை தீர்க்க, பகல், இரவாக அரசு உழைக்கிறது. திறந்த வெளி கழிப்பறை முறையை மாற்றி, பெண்களுக்காக கழிப்பறைகள் அமைத்து வருகிறோம். விவசாயிகள், சிறிய வியாபாரிகளுக்கு வங்கி கணக்கு துவக்கியுள்ளோம். பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில், ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அப்பகுதி மக்களின் பயத்தை போக்கியுள்ளோம். இதன் மூலம் சிறுபான்மையினர் தைரியத்துடன் வாழும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம்.

மதத்தின் அடிப்படையில் தான், பாகிஸ்தான் என்ற நாடு உருவானது. கடந்த, 70 ஆண்டுகளாக, அங்குள்ள, ஹிந்து, சீக்கியர், ஜெயின் சமூக பெண்கள் மீது பாலியல் ரீதியிலான தாக்குதல்கள் நடக்கின்றன. சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த பெண்கள், பாலியல் பலாத்காரங்களுக்கு ஆளாகின்றனர். அத்தகைய பெண்களுக்கு நீதி கிடைக்க செய்யவே, குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் லாபத்துக்காக, காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும், இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்துகின்றன.


உறுதிமொழி:


எதிர்க்கட்சியினர் ஒரு முறையாவது பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளனரா. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை விட்டு, சர்வதேச அளவில் பாகிஸ்தான் முகத்திரையை கிழிக்க வேண்டாமா. அனைத்தையும் மக்கள் கவனிக்கின்றனர். எதிர்கால இந்தியாவின் நலனுக்காக, சாது, சன்னியாசிகள் மூன்று உறுதிமொழியை ஏற்க வேண்டும். முதலாவதாக, நம் பாரம்பரிய கலாசாரம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக, இயற்கையை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். மூன்றாவதாக, தண்ணீரை பாதுகாக்க வேண்டும். சாதுக்கள் சொன்னால் மக்கள் கேட்பர். இவ்வாறு, அவர் பேசினார்.


விவசாயிகள் எதிர்ப்பு:


விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக கூறி, பிரதமர் மோடி வருவதை கண்டித்து, கர்நாடகாவின் பல பகுதிகளில் நேற்று போராட்டம் நடந்தது. பிரதமர் நிகழ்ச்சியில் கறுப்பு உடை அணிந்து செல்ல முயன்ற விவசாயிகள், பெங்களூரு புறநகர் நெலமங்களாவில் கைது செய்யப்பட்டனர்.


எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் தமிழகத்துக்கு மத்திய அரசு விருது:


அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், உணவு தானியங்கள் உற்பத்தியில், 2016 முதல், 2019 வரை சிறந்து விளங்கிய மாநில அரசுகள் மற்றும் 32 முற்போக்கு விவசாயிகளுக்கு, கிருஷி கர்மான் விருதுகள், பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.


latest tamil news


தமிழகத்துக்கு, 2017 - 18 ஆண்டுக்கு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்திக்கும்; கர்நாடகாவுக்கு, 2018 - 19ம் ஆண்டில், பருப்பு வகை உற்பத்திக்கும் விருது கிடைத்தன. முற்போக்கு விவசாயிகள் பிரிவில், தமிழகத்தின் பாப்பாத்தி, செந்தில் குமார் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டன.


உணவு பொருள் ஏற்றுமதிக்கு தனி மையங்கள்:


கர்நாடக மாநிலம், துமகூரு நகரிலுள்ள ஜூனியர் கல்லுாரி வளாகத்தில், 'பிரதமர் கிஷான் சம்மான்' திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கல் மற்றும், 'கிருஷி கர்மான் விருது' வழங்கும் விழா நடந்தது. இதில், மோடி பேசியதாவது: நமக்கெல்லாம் உணவு அளிக்கும் விவசாயிகளுக்கு, நாட்டின், 130 கோடி மக்களின் சார்பாக நன்றி. முன்பெல்லாம் அரசு சார்பில், 1 ரூபாய் வழங்கினால், பயனாளிக்கு, 15 காசு மட்டுமே சேரும். மீதி, 85 காசுகளை, இடையில் உள்ளவர்கள் கொள்ளையடிப்பர். தற்போது அந்த நிலைமை மாறி, பயனாளியின் வங்கி கணக்கிற்கே நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயிகள் அதிக அளவில் உதவுகின்றனர். ஏற்றுமதியை அதிகரிக்க, தென் மாநிலங்களில், தனி மையங்கள் அமைக்கப்படும்.

கர்நாடகாவில், மாதுளை விளையும் பெலகாவி, மைசூரு; ரோஜா விளையும் சிக்கபல்லாபூர், பெங்களூரு; காபி விளையும் சிக்கமகளூரு, குடகு; காய்ந்த மிளகாய் உற்பத்தியாகும் ஹாசன் ஆகிய பகுதிகளில் சிறப்பு தொழிற்பேட்டை அமைக்கப்படும். கர்நாடகாவுக்கு, காபி மகுடம் போன்றது. அதை ஊக்கப்படுத்த, காபி போர்டு மூலம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறோம். நம் நாட்டில், ஆண்டுக்கு, 25 லட்சம் டன் கிலோ, மசாலா பொருட்கள் தயாராகிறது. இதில், 15 லட்சம் டன் கிலோ ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம், 19 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது. ரப்பர் இறக்குமதியை தவிர்க்கும் வகையில், உள்நாட்டிலேயே உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை போக்கவே, 'ஜல ஜீவன்' திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏழு மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது. இதை உயர்த்த, 'அடல் பூ ஜல்' திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய தென் மாநிலங்களில், உணவு தானியங்கள் அதிகமாக விளைகின்றன. கிராமங்களை மேம்படுத்த, நீல புரட்சி மூலம் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க, 7,500 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.


23 வயதில் தேர்தல் வெற்றி:


பெங்களூரில் உள்ள, டி.ஆர்.டி.ஓ., எனும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில், அமைக்கப்பட்ட ஐந்து இளம் விஞ்ஞானிகளின் பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகங்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின், இளம் விஞ்ஞானிகளுடையே அவர் பேசியதாவது: நான் அரசியலுக்கு வந்த போது, குஜராத் தேர்தல் எனக்கு புதிது. அப்போது, எனக்கு 23 வயது. ஆனாலும் வெற்றி பெற்றேன். இளைஞர்களுக்கு சாதிக்கும் துடிப்பு அதிகம். நாட்டின் ராணுவ வீரர்களின் பாதுகாப்புக்கும் உழைக்கும் உங்களிடையே பேசுவது பெருமை அளிக்கிறது. இளம் விஞ்ஞானிகளுக்கு ஆய்வகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு விஞ்ஞானி தன் முழு வாழ்க்கையையே நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

நவீன புதிய தொழில்நுட்பங்களை ஆய்வகத்தில் உருவாக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், டி.ஆர்.டி.ஓ.,வில் பணிபுரிந்தவர். அவரது குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும். நாட்டின், 130 கோடி மக்களின் பாதுகாப்பு, விஞ்ஞானிகள் கைகளில் தான் உள்ளது. அடுத்த, 10 ஆண்டு களில், டி.ஆர்.டி.ஓ.,வில் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் முக்கியமானது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
04-ஜன-202010:20:31 IST Report Abuse
Anandan காங்கிரஸ், பாகிஸ்தான் இது இரண்டும் இல்லைனா அப்பா நினைக்கவே முடியவில்லை
Rate this:
Cancel
Rahim Gani - Karaikudi,இந்தியா
03-ஜன-202023:22:38 IST Report Abuse
Rahim Gani பாகிஸ்தான் தான் உனக்கு அரசியல் வாழ்வு கொடுத்து கொண்டு இருக்கு இல்லை என்றால் நீ அரசியல் அனாதை தான்.
Rate this:
Cancel
Rahim Gani - Karaikudi,இந்தியா
03-ஜன-202022:41:51 IST Report Abuse
Rahim Gani பாபாகிஸ்தானை பிடித்து தொங்கி கொண்டு இருக்கும் உனக்கு நீ எந்த நாட்டின் பிரதமர் என்பதே மறந்து விட்டாய்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X