புதுடில்லி,: டில்லியில், நட்சத்திர ஓட்டலில், மாதம், 50 லட்சம் ரூபாய் வாடகையில் இயங்கி வரும், லோக்பால் அமைப்பின் அலுவலகம், விரைவில் சொந்த இடத்திற்கு மாற்றப்படுகிறது.
புகார்
முன்னாள் பிரதமர் உட்பட, அனைத்து அரசு அதிகாரிகளின் லஞ்ச ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரமிக்க அமைப்பான, லோக்பால், அசோகா ஓட்டலில், மாதம், 50 லட்சம் ரூபாய் வாடகையில் செயல்பட்டு வருகிறது. இது குறித்த தகவல், கடந்த மாதம் வெளியானதை அடுத்து, நட்சத்திர ஓட்டலில் இருந்து விரைவில் அலுவலகம் மாற்றப்படும் என, லோக்பால் அமைப்பு தெரிவித்திருந்தது. இது குறித்து, இந்த அமைப்பின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:அசோகா ஓட்டலில், லோக்பால் அலுவலகம் இயங்க, மாதம் 50 லட்சம் ரூபாய் வீதம், 2019 மார்ச் முதல் அக்டோபர், 31 வரை,
3.85 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. விரைவில், டில்லியில், மத்திய அரசுக்கு சொந்தமான கட்டடத்திற்கு, லோக்பால் அலுவலகம் மாற உள்ளது. லோக்பால் அலுவகத்திற்கு, கடந்த ஆண்டு, செப்டம்பர் வரை, 1,065 புகார்கள் வந்து உள்ளன.

அவற்றில், ஆயிரம் புகார்கள் விசாரிக்கப்பட்டு, முடிக்கப்பட்டுள்ளன. புகார் அளிக்க சுலபமான நடைமுறையை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. மத்திய சட்ட அமைச்சகத்தின் வழிகாட்டுதலுடன், விரைவில், எளிமையான முறையில் புகார் செய்யும் நடைமுறை அமலுக்கு வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.
பதவிப் பிரமாணம்
கடந்த, 2019, மார்ச், 23ல் லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, பி.சி.கோஸ் நியமிக்கப்பட்டார். அவருக்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, லோக்பால் அமைப்புக்கு, எட்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். லோக்பால் அமைப்பில், பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான, திலிப் பி.போஸ்லே, பிரதிப் குமார் மொகந்தி, அபிலாஷா குமாரி, அஜய்குமார் திரிபாதி ஆகியோர் உறுப்பினர்களாக
உள்ளனர். அத்துடன், 'எஸ்.எஸ்.பி.,' அமைப்பின் முதல் பெண் தலைவரான, அர்ச்சனா ராமசுந்தரம், மஹாராஷ்டிர முன்னாள் தலைமை செயலர், தினேஷ் குமார் ஜெயின், மத்திய வருவாய் துறை முன்னாள் அதிகாரி, மகிந்தர் சிங், குஜராத் முன்னாள் ஆட்சிப் பணி அதிகாரி, இந்திரஜித் பிரசாத் கவுதம் ஆகியோரும், உறுப்பினர்களாக, லோக்பால் அமைப்பில் இடம் பெற்றுள்ளனர்.