எழுத்திற்கு என்று தமிழகத்தில் முதன் முறையாக, சாகித்ய அகாடமி விருதை பெற்றவர், எழுத்தாளர் அகிலன். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை என, எழுத்தின் சகல பாதைகளிலும் பயணித்தவர். இவரது படைப்புகள் பல, திரைப்படங்களாக வந்துள்ளன.இவரது மகனும், எழுத்தாளரும், பதிப்பாளருமான அகிலன் கண்ணனுடன், ஒரு மாலை நேர இலக்கிய சந்திப்பிற்கு, 'குவிகம் இலக்கிய வாசல்' அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
சென்னை, ஆழ்வார்பேட்டை, அம்புஜம் தெருவில் உள்ள சீனிவாச காந்தி நிலையத்தில் அவர் பேசியதாவது:வாழ்க்கையில், ஒரு படைப்பாளி பார்க்கும், சந்திக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான், பெரும்பாலும் எழுத்தாக மிளிர்கிறது. என் தந்தை அகிலனைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருப்பதால், அவரிடம் இருந்தே என் பேச்சை தொடர்கிறேன்.பேனாவில், நேர்மையை நிரப்பி எழுதிய எழுத்தாளரான அவர், ஒரு காலத்திலும் தன்னை முன் நிறுத்தியது இல்லை. இதன் காரணமாக, மோசடி பேர்வழி ஒருவன், தான் ஒரு தீவிர வாசகன் என்று சொல்லி, ஒருமுறை வீட்டிற்கு வந்து, தந்தையை சந்தித்தார்.
வந்த இடத்தில், பணத்தை தொலைத்துவிட்டதாக, 'கதை' சொல்லி, தந்தையிடம் இருந்து, பணத்தையும் பெற்று சென்றான். பின், தந்தையை பார்த்து பேசிய அனுபவத்தை வைத்து, தன்னை, 'அகிலன்' என்று கூறிக்கொண்டு, பலரிடம், பல விதங்களில் பண மோசடியில் ஈடுபட்டான்.இதை அறிந்த பின் தான், தன் அடையாளத்தை தெரிவிப்பதற்காக, தன் புகைப்படங்கள் பத்திரிகையில் வருவதற்கே, தந்தை சம்மதித்தார்.பெரிய வருமானம் இல்லாத நேரத்தில், துணிந்து திரை உலக பிரபலம் ஒருவரை எதிர்த்து, வழக்கு போட்டார். வழக்கு நடத்தவே பணம் இல்லாத நிலை.
அப்போது, வழக்கை வாபஸ் வாங்குமாறு கேட்டு, அந்த திரையுலக பிரபலம், கட்டுக்கட்டாக பணத்துடன் வீட்டிற்கு வந்தார். அவரை திட்டி வெளியே அனுப்பினார். வழக்கில் வென்றாலும், அதற்கான இழப்பீடு எதையும் பெற மறுத்துவிட்டார்.'இந்த வழக்கு, எனக்காக போடப்பட்டது இல்லை; எந்த எழுத்தாளர் என்றாலும், அவருக்கு என்று உணர்வும் உரிமையும் இருக்கும். அதற்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்த, இந்த வழக்கை போட்டேனே தவிர, பணம் பெறுவதற்காக அல்ல' என, பதிலும் தந்தார்.
அப்படிப்பட்டவரின் நேர் வழியில் வளர்ந்த நான், நிறைய சிறுகதைகள் எழுதி இருந்தாலும், என் மனதை தொட்ட கதையை சொல்கிறேன். பத்திரிகையில் பார்த்த ஒரு சம்பவம் தொடர்பான படம் தான், இந்த கதையை எழுத துாண்டியது.நட்ட நடு ரோட்டில், 'பஸ் டே' என்ற பெயரில், மாணவர்கள் அடிக்கும் கூத்தால், பஸ்சிற்குள் இருந்து தன் குழந்தையை காப்பதற்காக ஒரு தாய், ஜன்னல் வழியே குழந்தையை வெளியே நீட்டுகிறாள். பயணி ஒருவர், குழந்தையை பெற்றுக் கொள்கிறார்; இது தான் படம்.
இந்த பஸ் டே கொடுமையை மையமாக வைத்து, ஒரு கதை எழுதினேன். கிராமத்து பெற்றோர், தங்கள் பிள்ளை, நகரத்தில் எப்படி படிக்கிறான் என்பதை அறிய, நகரத்து பஸ்சில் வருகின்றனர். அந்த பஸ்சை தான், பஸ் டே கொண்டாடும் மாணவர்கள் பிடித்து, படாதபாடு படுத்துகின்றனர்.ஒரு கட்டத்தில், பஸ் மீது கல் வீசவும் செய்கின்றனர். வீசப்பட்ட கல் ஒன்று, அந்த பெற்றோரின் தலையை பதம் பார்க்கிறது. வடியும் ரத்தத்துடன், கல்லை எறிந்தது யார் என, அந்த பெற்றோர் பார்க்கின்றனர். அது வேறு யாருமில்லை; அவர்களின் மகன் தான்.கல்லால் ஏற்பட்ட காயம் தந்த வலியை விட, அதிக வலியால் மனம் துடிக்கிறது. எப்படி ஒழுக்கமாய் வளர்ந்த மகன், இப்படி ஆகிவிட்டான் என்பதை நினைத்து வருந்தி, மகனை பார்க்காமலேயே ஊருக்கு திரும்புகின்றனர்.பஸ் டே, சிலருக்கு சந்தோஷத்தையும், பலருக்கு சங்கடத்தையும் தருகிறது என்ற இதன் கரு, மாணவர்களுக்கு போய் சேர வேண்டும். இதேபோல் தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு பொது ஜனத்தின் கதை ஒன்றையும் எழுதியிருந்தேன்.
இப்படி, பார்த்த, படித்த, கேள்விப்பட்ட சம்பவங்களை, அவரவர் பாணியில் சொல்கிறோமே தவிர, முற்றிலும் கற்பனையே என்பது அவ்வளவு உண்மையில்லை.தற்போது, படிப்பாளிகளை விட, படைப்பாளிகள் மிகுந்துவிட்ட சூழ்நிலையில், எழுதுவதற்கு இணையத்தில், நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, அதை புறக்கணிப்பதற்கு இல்லை. எதில் எழுதினாலும், எதை எழுதினாலும், அதில் உண்மையும், அறனும் இருந்தால், அந்த எழுத்து நிற்கும், நிலைக்கும், வெற்றி பெறும்... என, சொல்லி முடித்தார், அகிலன் கண்ணன்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE