குடியுரிமை திருத்த சட்டம், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டவுடன், நாட்டில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது.
சில மாநிலங்களில், அரசுக்கு எதிரான போராட்டங்கள், வன்முறையில் முடிந்திருக்கின்றன. சில மாநிலங்களில், இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு என்ற பெயரில், மத்தியில் ஆளும், பா.ஜ., எதிர்ப்பு போராட்டங்கள், அந்தந்த மாநில கட்சிகளால் நடத்தப்படுகின்றன.
தமிழகத்திலும், தி.மு.க.,வும் அதன் தோழமை கட்சிகளும், இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன.தி.மு.க.,வின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல், மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக அணி சேர்த்து, தமிழகத்தை போராட்ட பூமியாக மாற்றி உள்ளார். சும்மா இருந்த மக்களையும் போராட துாண்டி, அதன் மூலம், அரசியல் குளிர் காய நினைக்கிறார்.அதற்கு சரியான உதாரணம் தான், சமீபத்திய கோல போராட்டம். சென்னை பெசன்ட் நகரில், அடுத்தவர் வீடு முன், 'குடியுரிமை சட்டம் வேண்டாம்' என, கோலம் வரைந்த பெண்கள் மீது, வீட்டின் உரிமையாளர்கள் புகார் கொடுத்தார்.
அங்கு வந்த போலீசார், கோலம் வரைவதை தடுத்தனர். அவர்களை எதிர்த்து பேசி, ரகளையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்டனர்.அவர்களை அழைத்து பேசிய ஸ்டாலின், அந்த நபர்களுக்கு, ஊடகங்களில் வெளிச்சம் போட்டு காட்டி, பிறரையும், கோலம் வரைய வைத்து, அலங்கோலமாக தமிழகத்தை மாற்றி வருகிறார். கோலம் விவகாரத்தை அரசியல் ஆக்கிய அவர், தன் வீட்டிலும், கட்சியினர் வீட்டிலும், 'குடியுரிமை சட்டம் வேண்டாம்' என, கோலம் வரையச் சொல்லி, தமிழகத்தில் போராட்ட தீ அணையாமல் பார்த்துக் கொள்கிறார்.அவரின் கூட்டணி கட்சியான காங்கிரசைச் சேர்ந்த, இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன், பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கொலை செய்ய துாண்டுகிறார்.
இன்றைய அரசியல் தலைவர்களில் பெரும்பாலானோருக்கு, அரசியல் தெரியுமே தவிர, நிர்வாகம் முழுமையாக தெரியாது. மக்களை கவர்ந்து, ஓட்டு வாங்க தெரியுமே தவிர, சமூக பிரச்னைகளுக்கான மூல காரணம் தெரியாது.குடியுரிமை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், 'பாகிஸ்தான், ஆப்கன் மற்றும் வங்கதேசம் நாடுகளில் இருந்து அகதிகளாக வந்து, இங்கே நம் நாட்டில் வசிக்கும் ஹிந்து, கிறிஸ்துவர், சீக்கியர், பார்சி, ஜைனர்கள் மற்றும் பவுத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்கப்படும்' என்பது தான்.இதற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் கூறும் காரணம், 'குடியுரிமை வழங்குவதில் ஏன் மத பாகுபாடு காட்டுகிறீர்கள்; அந்த நாடுகளில் இருந்து வந்துள்ள முஸ்லிம்களுக்கு, ஏன் குடியுரிமை மறுக்கப்படுகிறது.
'அது மட்டுமல்ல, மியான்மர், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்துள்ள அகதிகளுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்' என்கின்றனர்.ஆனால், மத்திய அரசோ, நிதானமாக, விபரமாக தன் பதிலை தெரிவிக்கிறது.'இந்த பிரச்னையில் மத அளவுகோலை பயன்படுத்தாதீர்கள். முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாகவும், அவர்களுக்காக உருவாக்கப்பட்ட அந்த மூன்று நாடுகளிலும், குடியுரிமை சட்டத்தால் பயன் பெற போகும், அந்த ஆறு மதங்களை சேர்ந்த மக்கள், மிகவும் துன்பப்படுகின்றனர்; அச்சுறுத்தப்படுகின்றனர்.
அங்கே, அவர்களின் உடைமைக்கும், உயிருக்கும் உத்தரவாதமில்லை.'அந்த நாட்டு மக்கள், தங்கள் சொந்த சகோதரர்களை பாதுகாக்க முயலவில்லை; அரசுகளும் பாதுகாக்க விரும்பவில்லை. 'இந்நிலையில் அங்கேயே உயிரை விடுவது அல்லது வேறு நாடுகளுக்கு அடைக்கலம் தேடி, உயிர் பிழைப்பது என்ற, இரு வாய்ப்புகள் தான் அவர்களுக்கு இருக்கிறது.'மற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், ஒத்த கலாசாரமும், ஒத்த இறை நம்பிக்கையும் கொண்ட இந்தியா மட்டுமே, அவர்களுக்கு நெருக்கமான நாடாக இருக்கிறது. ஆகவே தான், அவர்களுக்கு குடியுரிமை வழங்கி, அவர்கள் வாழ வழி செய்து கொடுப்பது, நம் கடமையாக இருக்கிறது...'இவ்வாறு-, மத்திய அரசு கூறுகிறது.
இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கும் விவகாரமும், வேறு பரிமாணம் கொண்டது. இலங்கை, நம் நட்பு நாடு; நாம் கோரிக்கையை சொன்னால், அதை ஏற்று செயல்படுத்தும் நிலையில் உள்ள நாடு. மேலும், இங்கே உள்ள தமிழ் அகதிகள், நம் நாட்டில் அகதிகளாக வாழ்வதை விட, இலங்கைக்கு மீண்டும் சென்று, அங்கே தங்கள் சொந்த இடங்களில் வாழவே விரும்புகின்றனர்.அவர்களின் அந்த விருப்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக நாம் நிறைவேற்ற வேண்டும். அவர்களின் வசிப்பிடம், அவர்களின் வியாபாரம், அவர்களின் பாதுகாப்பு போன்றவற்றை, அந்த அரசோடு பேசி, அதை உறுதி செய்ய வேண்டும். இதை, மத்திய அரசு செய்து கொண்டு தான் இருக்கிறது.ஆனால், தமிழகத்தின் எதிர்க்கட்சிகள், 'முஸ்லிம்களைப் போலவே, இலங்கைத் தமிழர்கள் மீதும், மத்திய அரசு வெறுப்பு கொண்டுள்ளது. அதனால் தான், குடியுரிமை சட்டத்தில் அவர்கள் பற்றி குறிப்பிடவில்லை' என, அப்பாவி மக்களை துாண்டி விடுகின்றன. அப்பாவி மக்களும், அரசியல் தலைவர்களின் சதித்திட்டம் தெரியாமல், அவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஆட்சியில் இருந்த போது, சிறு துரும்பையும் கிள்ளி போடாத இவர்கள், இன்று, தங்களின் அரசியல் லாபத்திற்காக வேஷம் போடுகின்றனர்; ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.இதில், மக்கள் தான் விழிப்புடன் இருந்து, அரசியல்வாதிகளின் நரித்தனத்தை புரிந்து கொள்ள வேண்டும். நேரத்திற்கு தகுந்த மாதிரி பேசி, தங்களை காத்துக் கொள்ளும் தமிழக அரசியல் தலைவர்களை நம்பக் கூடாது.இந்த அரசியல் நடிகர்களின் வசன பேச்சில் மயங்கி, இரக்கம், கருணை, மனிதநேயம், சமூக நீதி போன்ற வார்த்தை பிரயோகங்களில் உருகி, அவர்களுக்கு துணையாக நின்றால், கஷ்டம் நமக்கும், நஷ்டம் நாட்டிற்கும் தான்.இந்த குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்ணீர் விடும் 'கருணையே' உருவான தலைவர்களிடம், 'இரக்கமே' உருவான ஜீவன்களையும் மக்கள் நம்ப வேண்டாம்.ஏனெனில், ஒரே நாட்டில் பிறந்து, ஒரே கலாசாரத்தில் வளர்ந்து, ஒரே வரலாறு கொண்டவர்களாக வாழும், ஒரு மக்கள் பிரிவினரைப் பார்த்து, 'ஆரியன்' என்று வெறுப்பதும், இன்னொரு கூட்டத்தை பார்த்து, 'வட நாட்டான்' என்று ஒதுக்குவதும், மற்றொரு கூட்டத்தை பார்த்து, 'வந்தேறிகள்' என்று விஷம் கக்குவதும் இந்த தலைவர்கள் தான்.
நம் நாட்டில் பிறக்காத, நமக்கு உறவோ, தொடர்போ இல்லாத, சொல்லப் போனால், நம்மை எதிரிகளாக பார்க்கும் நாடுகளிலிருந்து வரும், சட்ட விரோத குடியேறிகள் மீது அன்பு காட்டுவதும், அவர்களை இங்கே அனுமதிக்க வேண்டும் என்று கூறுவதும் எதற்காக; ஏன் இந்த நாடகம்; ஏன் இந்த நடிப்பு? மக்களிடம் நான் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...
ஒரு மணி நேர பஸ் பயணத்தில் கூட, இருக்கை வசதி கிடைத்தவர்கள், தங்களை போன்ற கட்டணம் செலுத்தி, நின்று கொண்டு பயணிக்கும் சக பயணியரிடம் கருணை காட்டுவது இல்லை; வசதியை பகிர்ந்து கொள்வது இல்லை.சொந்த நாட்டு மக்களிடம் இல்லாத நம்பிக்கை, நமக்கு சம்பந்தமே இல்லாத அன்னிய நாட்டு மக்கள் மீது நமக்கு வருவது ஏன்; பின்னணியில் அரசியல் இருக்கிறது; புரிந்து கொள்ளுங்கள்!இந்த நேரத்தில், தமிழக அமைச்சர் ஒருவர் சொன்ன கருத்து சத்தியமானது...
'இந்தியாவில் வாழ்வோர் எல்லாம் இந்தியர்கள் அல்ல; யார் இதயத்தில் இந்தியா வாழ்கிறதோ அவர்களே உண்மையான இந்தியர்' என்றார்.இந்திய முஸ்லிம்களை பொறுத்தவரை, அவர்களும் பாரத தாயின் பிள்ளைகள் தான். அந்த தாயின் அத்தனை வளங்களிலும், வாய்ப்புகளிலும் அவர்களுக்கு பூரண உரிமை உண்டு; அதில் மாற்று கருத்து இல்லை!
அதே நேரத்தில், அந்த தாயை மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் வைத்து கொள்ளும் கடமையும் அவர்களுக்கு உண்டு.நம் தமிழகத்தை பொறுத்த வரை, சில அரசியல் கட்சி தலைவர்களும், சில அமைப்புகளும். நம் நாட்டு மக்களின் உரிமைக்காக போராடியதை விட, இலங்கை தமிழர்களுக்காக போராடியதே அதிகம். இப்போது கூடுதலாக, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கன் மக்களுக்காகவும் போராடுகின்றனர்.மேலும், மாலத்தீவு மற்றும் மியான்மர் நாட்டு மக்களுக்காகவும் போராட்டத்தை விரிவு படுத்தி இருக்கின்றனர்.
இவர்களை போன்ற, 'கருணை' உள்ளம் கொண்ட தலைவர்களை, உலகில் எந்த நாட்டிலும் காண முடியாது!பெற்ற தாய், தந்தையரை குடும்பத்தில் வைத்து பராமரிக்க முடியாத இவர்களில் பலர் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளோடு நல்லுறவை பேண முடியாத இவர்கள், கட்டிய கணவன் அல்லது மனைவியோடு அன்பு பாராட்ட முடியாத இவர்கள், சொந்த பந்தங்களுடன், சுமுக உறவை பேண முடியாத இவர்கள், அண்டை மாநில மக்களோடு நட்பு பாராட்ட முடியாத இவர்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் சட்ட விரோத குடியேறிகளுக்கு குடியுரிமை கேட்டு போராடுகின்றனர்.ஓட்டு அரசியலுக்காக, நாட்டின் அமைதியையும், பாதுகாப்பையும் அடகு வைக்க துணிந்து விட்ட இவர்களை நம்பி, இத்தனை ஆண்டு காலம், நாட்டை ஒப்படைத்திருந்ததே, நாம் செய்த மாபெரும் தவறு.
இன்னும் நம் நாடு, புத்தரின் தேசமாகவே இருக்கிறது; காந்தியின் நாடாகவே இருக்கிறது; வள்ளுவர் சொன்ன வழிகளிலேயே நடக்கிறது. இது இப்படியே தொடர வேண்டும் என்றால், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை, மக்கள் புறக்கணிக்க வேண்டும்.எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வாழ்வதற்கு பல நாடுகள் இருக்கின்றன.
இந்திய மக்களாகிய நமக்கு, இந்தியாவை விட்டால், பாதுகாப்பாக வாழ, வேறு நாடுகள் கிடையாது. 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பது, நண்பர்களாக வாழ நினைப்பவர்களுக்காக சொன்னது; நாடு பிடிக்க நினைப்பவர்களுக்காக அல்ல!
எஸ்.ஆர்.ரத்தினம்,
சமூக ஆர்வலர்,
தொடர்புக்கு: இ-மெயில்: bjpratnam@gmail.com
மொபைல் போன்: 98408 82244