சென்னை : ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இன்று துவங்கிய தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குடியுரிமை சட்டம் மற்றும் ராஜிவ் கொலையாளிகள் விடுவிப்பு தொடர்பாக பேச முயன்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அனுமதி வழங்கப்படாதை கண்டித்து திமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் 2019 ஜூன் 28 முதல் ஜூலை 20 வரை நடந்தது. அப்போது பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த திட்டங்களை நிறைவேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சட்டசபை இன்று காலை 10.00 மணிக்கு கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார்.
அதன்பின் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் வரும் 9ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
புதிய மாவட்டங்கள்?
இந்த கூட்டத்தொடரில் தமிழ்நாடு சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை முறைப்படுத்துதல் திருத்த அவசர சட்டம் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள், ஊராட்சிகள் திருத்த அவசர சட்டம். மேலும் வேளாண் விளை பொருள் சந்தைப்படுத்துதல், ஜி.எஸ்.டி. திருத்த அவசர சட்டம் போன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் மாவட்டம் இடைப்பாடி,கோவை மாவட்டம் பொள்ளாச்சி; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆகியவற்றை தலைமையிடமாக்கி மூன்று புதிய மாவட்டங்கள் துவக்குவதற்கான அறிவிப்புகளையும் முதல்வர் பழனிசாமி வெளியிட வாய்ப்பு உள்ளது. தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் அறிவிப்பும் வெளியாகலாம்.
குடியுரிமை சட்டம்
மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து சென்னையில் பேரணி நடத்தி உள்ளன. 'போராட்டம் தொடரும்' என தி.மு.க. தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் காரணமாக போராட்டங்களை தி.மு.க. தள்ளி போட்டு வந்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றக்கோரி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தரப்பில் சட்டசபை செயலகத்தில் கடிதம் கொடுக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE