அடிச்சாங்க சரிபாதி... ஆளுங்கட்சி பேதி!| Dinamalar

'அடிச்சாங்க' சரிபாதி... ஆளுங்கட்சி பேதி!

Added : ஜன 07, 2020
Share
கலெக்டர் ஆபீசில் நடந்த மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியேற்பு விழாவுக்கு, சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். அ.தி.மு.க.,வினரும், தி.மு.க.,வினரும் கைகோர்த்து, சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். பதவியேற்றவர்களுடன் ஆதரவாளர்கள் 'செல்பி' எடுத்துக் கொண்டனர்.''என்னக்கா, 'செல்பி' மோகம் விடாது போலிருக்கு,'' என்றபடி, ''ஆளுங்கட்சி தரப்பு அதிர்ச்சியில இருக்காமே,'' என,
 'அடிச்சாங்க' சரிபாதி... ஆளுங்கட்சி பேதி!

கலெக்டர் ஆபீசில் நடந்த மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியேற்பு விழாவுக்கு, சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். அ.தி.மு.க.,வினரும், தி.மு.க.,வினரும் கைகோர்த்து, சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். பதவியேற்றவர்களுடன் ஆதரவாளர்கள் 'செல்பி' எடுத்துக் கொண்டனர்.''என்னக்கா, 'செல்பி' மோகம் விடாது போலிருக்கு,'' என்றபடி, ''ஆளுங்கட்சி தரப்பு அதிர்ச்சியில இருக்காமே,'' என, நோண்டினாள்.''ஆமாப்பா, எதிர்க்கட்சிக்காரங்க இந்தளவுக்கு ஜெயிப்பாங்கன்னு ஆளுங்கட்சிக்காரங்க நெனைச்சு கூட பார்த்திருக்க மாட்டாங்க.
சூலுார், சுல்தான்பேட்டை, மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி தெற்கு பகுதியில தி.மு.க.,வுக்கு ஆதரவு அதிகரிச்சிருக்கு.''சுல்தான்பேட்டை ஒன்றியத்துல அ.தி.மு.க., கூட்டணி-6, தி.மு.க., கூட்டணி-6 இடத்திலும், ஒரு இடத்தில் சுயேட்சை வேட்பாளரும் ஜெயிச்சிருக்காங்க. ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவியை கைப்பத்தணும்னா, ஏழு பேர் ஆதரவு வேணும். சுயேட்சை கவுன்சிலர், எந்த பக்கம் போறாரோ, அவுங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கு. துணை தலைவர் பதவி தர்றதா சொல்லி, ஆளுங்கட்சி தரப்புல பேசியிருக்காங்களாம். இறந்துபோன முன்னாள் எம்.எல்.ஏ., கனகராஜ் மனைவியை, யூனியன் சேர்மனா தேர்ந்தெடுக்க போறாங்களாம்,''''மதுக்கரை ஒன்றியத்துல என்ன செய்யப் போறாங்களாம்,''''மதுக்கரையில மொத்தம்-6 இடம். ரெண்டு தரப்பும் தலா-3 இடத்துல ஜெயிச்சிருக்கு. ரூல்ஸ்படி குலுக்கல் நடத்தியாகணும். உறவுக்காரங்களா இருக்கறதுனால, பேசித்தீர்த்துக்குவாங்கன்னு, ஒன்றிய அதிகாரிகள் நெனைக்கிறாங்க.''அ.தி.மு.க.,வுக்கு ஆதரவா தி.மு.க.,காரங்க ஓட்டு போட்டாங்கன்னா கட்சி ரீதியா பெரிய பிரச்னையாகிடும். அதனால, ரெண்டு தரப்புல இருந்தும் போட்டி இருக்கும்னு சொல்றாங்க,''''தொண்டாமுத்துார் ஒன்றியத்திலும் தி.மு.க., கால் பதிச்சிருக்கே...'' என, இழுத்தாள்.''லோக்சபா தேர்தல்லேயே, 10 ஆயிரம் ஓட்டு தி.மு.க.,வுக்கு கூடுதலா விழுந்துச்சு. இப்ப, 3 வார்டுல ஜெயிச்சிருக்காங்க. அந்த மூன்று ஏரியாவும் கிணத்துக்கடவு தொகுதிக்குள்ள வருதுன்னு சப்பைக்கட்டு கட்டுறாங்களாம்,''''இதெல்லாம் பரவாயில்லை. சோமையம்பாளையம் ஊராட்சியில அ.தி.மு.க.,வும் வேண்டாம்; தி.மு.க.,வும் வேண்டாம்னு சுயேட்சைக்கு ஓட்டு போட்டு மக்கள் தேர்ந்தெடுத்தாங்க. அவரோ, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யை நேரில் சந்திச்சு, சால்வை போர்த்தி, கட்சியில இணைஞ்சிட்டாராம்.
எந்த கட்சியில சேர்ந்தா என்ன, ஊருக்கு நல்லது செஞ்சா போதும்னு ஊராட்சியை சேர்ந்தவங்க மனசை தேத்திட்டு இருக்காங்களாம்,'' என்றபடி, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சித்ரா வெளியேறினாள்.அருகாமையில் உள்ள பேக்கரிக்குள் இருவரும் நுழைந்தனர். அப்போது, உக்கடம் செல்லக்கூடிய பஸ் கடந்து சென்றது.அதைப்பார்த்த மித்ரா, ''உக்கடம் நரசிம்மர் கோவிலை பத்தி சொல்றதா சொல்லியிருந்தீங்களே,'' என, கிளறினாள்.''அடடே, கரெக்டா ஞாபகம் வச்சு கேக்குறீயே.அந்த கோவில்ல ராஜகோபுர திருப்பணி நடந்திட்டு இருக்கு. வளாகத்துக்குள்ள நிரந்தரமா ஒரு 'ெஷட்' இருக்கு. டென்டர் கோராமல், தன்னிச்சையா பிரிச்சு விற்பனை செய்யறதுக்கு ஒரு அதிகாரி, 'மூவ்' பண்ணியிருக்காரு. விஷயம் கேள்விப்பட்ட பக்தர்கள் முற்றுகையிட்டு பிரச்னை பண்ணிட்டாங்க.
விஷயம் கேள்விப்பட்டு போலீஸ்காரங்களும் வந்துட்டாங்க; உயரதிகாரிக்கும் தகவல் போயிருக்கு. இப்ப, துறை ரீதியா விசாரணை நடத்திட்டு இருக்காங்களாம்,'' என்ற சித்ரா, ''துாய பெல் போலீஸ் ஆபீசரை பத்தி சொல்றதா, நீ சொல்லியிருந்த,'' என, கொக்கி போட்டாள்.''எனக்கும் ஞாபகம் இருக்கு. அந்த அதிகாரிக்கும், எஸ்.பி.,க்கு நெருக்கமாக இருக்கற இன்ஸ்.,க்கும் பிணைப்பு ரொம்பவே ஜாஸ்தியாம். 'துாய பெல்' போலீஸ் ஆபீசருக்கு ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யின் உறவுக்காரர் பக்கபலமா இருக்காராம்.
ஏரியாவுக்குள்ள 'மசாஜ் சென்டர்' நடக்குது; 'சரக்கு' ஓடுது; கட்டப்பஞ்சாயத்து நடக்குது; எதை பத்தியும் கண்டுக்கறதில்லை. கரெக்ட்டா மாமூல் வந்தா போதும்னு இருக்காங்க. சிட்டிக்குள்ள இருக்கற பெரிய போலீஸ் ஆபீசரையே மாத்துற அளவுக்கு 'சக்தி' படைச்சவரா வலம் வர்றாரு, 'துாய பெல்' ஆபீசுரு. அவரது ஏரியாவுலதான், இப்ப, தி.மு.க., மூணு இடத்துல ஜெயிச்சிருக்கு. எட்டிமடை காரரும், 'துாய பெல்' ஆபீசரும் இணைந்த கைகள் மாதிரி செயல்படுறதை இனியாவது வி.ஐ.பி., புரிஞ்சிக்கிடணும். இல்லேன்னா, பேரூராட்சி, நகராட்சி தேர்தல் நடக்கும்போது, பாதிப்பு இன்னும் அதிகமா இருக்கும்னு கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க,'' என்றபடி, இஞ்சி டீ, காளான் பப்ஸ் ஆர்டர் கொடுத்தாள் மித்ரா.அப்போது, பேக்கரியில் இருந்த ஒருவர், சித்ராவை பார்த்து குசலம் விசாரித்துச் சென்றார்.''என்னக்கா, தெரிஞ்சவரா,'' என, நோண்டினாள்.''ஒரு வேலையா, வடக்கு தாலுகா ஆபீசுக்கு போயிருந்தேன். இவருதான் உதவி செஞ்சாரு,''''அங்க, கரன்சி இல்லாம வேலையே நடக்காதுன்னு பேசிக்கிட்டாங்களே,''''உண்மைதாம்பா, சின்ன கை, பெரிய கைன்னு ரெண்டு பேரு இருக்காங்க. தாசில்தாரிடம் கையெழுத்து வாங்குறது, ஜாதி சான்று வாங்குறதுன்னு சின்ன சின்ன வேலைக்கு சின்ன கையை பார்த்தா போதுமாம்.
வணிக வளாகம், தியேட்டர் லைசென்ஸ்சுன்னு பெரிய விவகாரங்களுக்கு பெரிய கையை பார்க்கணுமாம்.''கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒருத்தரு, வணிக வளாகத்துக்கானலைசென்ஸ் புதுப்பிக்க விண்ணப்பம் கொடுத்திருக்காரு. லஞ்சமா ரூ.15 ஆயிரம் கேட்டுருக்காங்க. தொகை அதிகமா இருந்ததால, சம்பந்தப்பட்ட டேபிள் கிளார்க்கிடமே விண்ணப்பதாரர் பேசியிருக்காரு.''தன்னை 'ஓவர் லுக்' செஞ்சு நேரடியா, 'டீல்' பேசுறீயான்னு, பெரிய கைக்கும், டேபிள் அலுவலருக்கும் 'லடாய்' ஏற்பட்டுடுச்சு.
விண்ணப்பதாரருக்கு வேலை நடக்கலை; லஞ்ச ஒழிப்புத்துறைக்கு போகப்போறேன்னு சொன்னதும், ரெண்டு பேரும் 'லீவு' போட்டுட்டு, 'எஸ்கேப்' ஆயிட்டாங்களாம்.''கடைசியா, தாசில்தார் கவனத்துக்கு விசயம் போயிருக்கு. இதையெல்லாம் பெரிசுபடுத்தாதீங்க. வேலையை முடிச்சுக் கொடுக்கச் சொல்றேன்னு சமாதானம் செஞ்சு வச்சிருக்காராம்'' இருவரும் டீ குடித்து விட்டு, ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.ரயில்வே ஸ்டேஷனை பார்த்ததும், ''ரயில்வே அதிகாரிங்க, ஏதாச்சும் ஒரு காரணம் சொல்லி, தென்மாவட்டத்துக்கு டிரெயின் விடுறதை தடுத்துடுறாங்களாம்,''''ஏன்... இப்ப, என்னாச்சு...''''இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்ல புதுசா எல்.எச்.பி., பெட்டி பொருத்தியிருக்காங்க. கழட்டுன பழைய பெட்டியை சும்மா வச்சிருந்தாங்க.அதை வச்சு, போத்தனுார் - பொள்ளாச்சி வழியா, தென்மாவட்டத்துக்கு ஸ்பெஷல் டிரெயின் ஓட்டலாமேன்னு பயணிகள் சங்கத்தினர் கேட்டிருக்காங்க. அதுக்கு, கிழக்கு ரயில்வேக்கு பழசை அனுப்பிட்டோம்னு சேலம் கோட்ட அதிகாரிங்க சொல்றாங்களாம்.''இதேபோலதான் ஒவ்வொரு முறையும் காரணம் சொல்றாங்களாம். சிறப்பு ரயில் விடச்சொன்னா பெட்டி இல்லைனு காரணம் சொல்ல அதிகாரிங்க, பெட்டி இருக்கும்போது தாரை வார்க்கறத பார்த்தா, தனியார் பஸ் கம்பெனிக்காரங்ககிட்ட பெட்டி வாங்குறாங்களோனு சந்தேகமா இருக்கு,''லங்கா கார்னரை கடந்து, டவுன்ஹால் நோக்கி ஸ்கூட்டரில் விரைந்தனர்.கார்ப்பரேஷன் ஆபீசை பார்த்ததும், 'சென்ட்ரல் கவர்மென்ட் நியமிச்சிருக்கிற 'ஸ்வட்ச் சர்வேக்சன்' குழு ஆய்வுக்கு வரப்போகுதாம். அதனால், கார்ப்பரேஷன் தரப்புல ஜோடனை வேலை செய்றாங்க. எப்படியாவது, 10 ரேங்க்குக்குள்ள வரணும்னு ஆசைப்படுறாங்க. ஆனா, வீதி முழுக்க குப்பை பரவிக்கெடக்குறதுனால ஆபீசர்ஸ் ரொம்பவே 'அப்செட்'டுல இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.''அதெல்லாம் சரி, கார்ப்பரேஷன் ஏரியாவுக்கு எலக்சன் நடத்துவாங்களா,''''சீக்கிரமா நடத்தப்போறதா, மாநில தேர்தல் ஆணையம் சொல்லிருக்கு. இப்ப இருக்கற நிலைமைய பார்த்தா, ஆளுங்கட்சி 'வாஷ் அவுட்' ஆயிடும் போலிருக்கு. கவுன்சிலர் கனவுல மிதந்த ஆளுங்கட்சிக்காரங்க அரண்டு போயிருக்காங்க.
எதிர்க்கட்சிக்காரங்க, 'சீட்' வாங்குறதுக்கு முட்டி மோத ஆரம்பிச்சிட்டாங்க. நேத்து நடந்த சட்டசபை கூட்டத்துல, தனி அதிகாரிங்க பதவியை ஜூன் வரைக்கும் நீட்டிச்சிருக்காங்க,''ஒப்பணக்கார வீதியை கடந்து, பூ மார்க்கெட் நோக்கி, ஸ்கூட்டரை ஓட்டினாள் சித்ரா.பள்ளி முடிந்து மாணவ, மாணவியர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.அவர்களை பார்த்த மித்ரா, ''நம்மூர்ல, 267 பிளே ஸ்கூல் இருக்குதாம். இது, எட்டே எட்டு ஸ்கூலுக்குதான் லைசென்ஸ் கொடுத்திருக்காங்க.
உரிமம் இல்லாத ஸ்கூல்களுக்கு ஆய்வு செய்ய போகும் கல்வித்துறை அலுவர்கள்ல சில பேரு, ஏஜன்ட் மூலமா, பள்ளிக்கு அஞ்சாயிரம் வசூலிக்கிறாங்களாம்; இல்லேன்னா, ஏதாவது ஒரு பொருளை சொல்லி வாங்கித் தரச்சொல்லி கட்டாயப்படுத்துறாங்களாம்.''கப்பம் கட்டலைன்னா, ஆவணம் சரியில்லைன்னு சொல்லி, ஆட்சேபனை தெரிவிக்கிறாங்களாம்.
இப்ப கூட, ஏழு பள்ளிகளுக்கு தலா ஒரு 'ல'கரம் வாங்கிட்டு, நிபந்தனையின் பேரில் அனுமதி கொடுத்திருக்காங்களாம்,''பெட்டிக்கடை ஒன்றில், பள்ளி மாணவர்கள் மொய்த்துக் கொண்டிருந்தனர். அவர்களை பார்த்த சித்ரா, ''என்னப்பா, புதுசா ஏதாச்சும் ஸ்நாக்ஸ் அயிட்டம் வந்துருக்கா. பெட்டிக்கடையை சுத்தி எக்கச்சக்கமா ஸ்டூடன்ட்ஸ் நிக்கிறாங்க,'' என கேட்டாள்.''என்னக்கா, விவரம் தெரியாம இருக்கீங்க. ஸ்டூடன்ட்ஸ் சில பேரு போதைக்கு அடிமையாகி சுத்திட்டு இருக்காங்க. துடியலுார்ல ரெண்டெழுத்து ஆஸ்பத்திரிக்கு பக்கத்துல மளிகை கடை மாதிரி பெட்டிக்கடை இருக்கு. அங்க, கவர்மென்ட் தடை செய்த போதை பொருள் வித்துட்டு இருக்காங்க. பக்கத்துல பிரைவேட் ஸ்கூல் இருக்கறதுனால, விக்காதீங்கன்னு சொன்னாலும், கடைக்காரர் கேக்குறதில்லையாம்.
''அவரு, காங்கிரஸ் கட்சியில முக்கிய பொறுப்புல இருக்காராம்; அந்த பவரை பயன்படுத்தி, போலீஸ்காரங்களை சரிக்கட்டிடுறாராம். பான்மசாலா அயிட்டம் சேல்ஸ் பட்டைய கெளப்புதாம்; எந்த பொருள் வாங்குனாலும் இரட்டிப்பு விலைதானாம். சாயங்காலம் நேரத்துல ஸ்டூடன்ட்ஸ் கூட்டம் எக்குத்தப்பா நிக்குது,'' என்று சொல்வதற்கும், பூ மார்க்கெட் வருவதற்கும் வருவதற்கும் சரியாக இருந்தது.வண்டியை நிறுத்தி விட்டு, பூ வாங்க, மார்க்கெட்டுக்குள் இருவரும் நுழைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X