பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜன 07, 2020 | கருத்துகள் (1)
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'உங்கள் கட்சியின் கஜானாவை தான், பல கோடி கொடுத்து, தி.மு.க., நிரப்பி விட்டதே; தமிழக கடன் பற்றி நீங்கள் கவலைப்படுவது, சும்மா...' என, சொல்ல வைக்கும் வகையில், மாநில இந்திய கம்யூனிஸ்ட் செயலர் முத்தரசன் அறிக்கை: தமிழகத்தின் கடன் அளவு, அதிகரித்து வருவது பற்றியோ, வேலையில்லா திண்டாட்டம் உயர்ந்து வருவது பற்றியோ, குடியுரிமைச் சட்டத்திற்கு ஏன் ஆதரவு தெரிவிக்கிறோம் என்பது பற்றியோ, தமிழக அரசு எதுவும் கூறவில்லை. இது குறித்து, கவர்னர் உரையில், எந்த தகவலும் இல்லை.

***

'உங்கள் கருத்தை வலியுறுத்தி, பா.ஜ., கூட்டங்களில் பேசுவதற்குப் பதில், உங்கள் மத கூட்டங்களில், மத அமைப்புகளின் கூட்டங்களில் பேசினால், அவர்கள் மனம் மாற வாய்ப்பு உள்ளதே...' என, அறிவுரை கூற வைக்கும் வகையில், ஏகத்துவ பிரசார ஜமாஅத் என்ற அமைப்பின் தலைவர் வேலுார் இப்ராஹிம் பேட்டி: கடந்த, 65 ஆண்டுகளாக, காங்கிரசை நம்பி, ஓட்டளித்து வந்த முஸ்லிம் மக்களுக்கு, ஏமாற்றத்தை மட்டுமே அக்கட்சி தந்துள்ளது. அதனால் தான், காங்கிரசை எதிர்க்கிறேன்; பா.ஜ.,வை ஆதரிக்கிறேன்.

***

'இடதுசாரி பாதைக்கு திரும்பிய, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போலவா...' என, எடக்கு மடக்காக கேட்க வைக்கும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பேராசிரியர் அருணன், 'தமாஷ்' பேட்டி: இன்றைக்கு எங்கள் சக்தி குறைவாக இருக்கிறது. அதனால் தான், நட்பு கட்சிகளை அடையாளம் கண்டு, அவர்களுடன் இணைந்து பயணிக்கிறோம்; போராடுகிறோம். இது, நிச்சயமாக நம் நாட்டை, இடதுசாரி பாதைக்கு திருப்பும் என நம்புகிறேன்.

***

'இலங்கையில் உள்ள தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட வேண்டும் என்பது தான் உங்கள் விருப்பமா...' என, எதிர்கேள்வி கேட்க தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி: இலங்கை தமிழர்களுக்கு, இரட்டை குடியுரிமை வழங்கப்படும் என, தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை, இலங்கை ஒப்புக் கொள்ளாது. எனவே, தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். அது தான் பிரச்னைக்கு தீர்வு.

***

'போராட்டங்கள் நடத்தி, நாட்டை குட்டிச்சுவராக்க, நீங்கள் எல்லாரும் கங்கணம் கட்டி செயல்படுவது நன்றாக தெரிகிறது...' என கண்டிக்கும் வகையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டறிக்கை: மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து, நாடு தழுவிய அளவில், இன்று பொது வேலைநிறுத்தம் நடத்தப்பட உள்ளது. இதற்கு, தமிழகத்தில் உள்ள இடதுசாரி கட்சிகள் அனைத்தும், ஆதரவு தெரிவிக்கின்றன. எங்கள் கட்சிகள் சார்பில், மறியல் போராட்டம் நடத்தப்படும்.

***

'ஒரு விவசாயிக்கு கூட, பத்து ரூபாய், உங்கள் கட்சி சார்பில் கொடுத்திருக்க மாட்டீர்கள்; பிறகு ஏன், இந்த வௌி வேஷம்...' என, கிடுக்கிப்பிடி போட வைக்கும் வகையில், ம.தி.மு.க, பொதுச் செயலர் வைகோ அறிக்கை:நாடு முழுவதும், ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த ஆதரவு தெரிவிக்கப்படும் என, தமிழக சட்டசபையில், கவர்னர் தன் உரையில் குறிப்பிட்டுள்ளார். இது, தமிழகத்தின் பொது வினியோகத் துறையை சீர்குலைத்து விடும். விவசாயிகளின் அடிப்படை பிரச்னையில், தமிழக அரசு விளையாடுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X