சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இதுவெல்லாம் அ.தி.மு.க.,வுக்கு கூடுதல் பலமே!

Added : ஜன 07, 2020 | கருத்துகள் (4)
Advertisement
இதுவெல்லாம் அ.தி.மு.க.,வுக்கு கூடுதல் பலமே!

அ.சரவணன், பெங்களூருவிலிருந்து எழுதுகிறார்: காஷ்மீர் பிரச்னையை மையமாக வைத்து, தி.மு.க., போராட்டம் நடத்தியது; இதில், காங்கிரசும் பங்கேற்றது. 'காஷ்மீர் விவகாரத்தில், மத்திய அரசு எடுத்த நடவடிக்கை சரியே' என, சில காங்கிரஸ் தலைவர்களே ஆமோதிக்க, போராட்டம் புஸ்வானம் ஆனது. 'இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது' என, உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் உறுதி அளித்துள்ளனர்; பிரதமர் மோடி நல்லது தான் செய்வார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

ஆனால், எதற்கெடுத்தாலும் போராட்டம் என, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்து விடுகிறார். அதை, மக்கள் முழு மனதுடன் ஏற்க மறுக்கின்றனர். தற்போது, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, தி.மு.க., போராட்டம் நடத்துகிறது. இதற்கு, எல்லா எதிர்க்கட்சிகளையும் அழைத்தது. கூட்டணியில், சில கட்சிகள் உள்ளதால், அவர்களால் மறுக்க முடியவில்லை. 'கூட்டத்திற்கு வருகிறேன்' எனக் கூறிய, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், 'இது, தேவையற்ற வேலை' என்பதை புரிந்து, பங்கேற்பதை தவிர்த்து விட்டார். 'மாஸ்' காட்ட, ஒவ்வொரு தொண்டனும், தம் பணியை விட்டு, போராட்டத்தில் பங்கேற்றால், அவருக்கே தேவையற்ற வேலை என, தோன்றும். அந்த காரணம் புரிந்து விட்டதால், மக்கள் நீதி மய்யம் கூட்டத்தை புறக்கணித்தது.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, தவறாக வழி நடத்தப்பட்டதால், போராட்டம் சில இடங்களில் நடந்தது. உண்மை நிலையை, பா.ஜ., தெளிவுபடுத்திய பின், போராட்டங்கள் குறைய துவங்கியுள்ளன. மக்களிடம் நல்ல பெயர் வாங்கி, அடுத்த முறை ஆட்சிக்கு வர வேண்டுமானால், போராட்டம் என்பதை கையில் எடுக்காமல், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அமைதி காக்க வேண்டும். தமிழக மக்களுக்கு என்ன தேவை என அறிந்து, அதை அரசிடம் வற்புறுத்தி கேட்டு, பெற வேண்டும்.

ஆனால், ஸ்டாலின், கேட்காமலேயே, தமிழகத்திற்கு ஒன்பது மருத்துவ கல்லுாரிகளை கொண்டு வந்து, சாதனை படைத்தது, மட்டுமல்ல; நிர்வாகம் சரியாக செயல்பட வேண்டும் என, ஆறு புதிய மாவட்டங்களையும் அமைத்து சாதனை படைத்துள்ளார், தமிழக முதல்வர் இ.பி.எஸ்., இவை எல்லாம், ஆளும் அ.தி.மு.க., அரசுக்கு கூடுதல் பலமே!

***


போலி அரசியல் நாடகம் ஆட வேண்டாம்!

க.சோணையா, திருமங்கலம். மதுரை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தார்மீக உரிமைக்காக போராடுவது, அனைவரின் ஜனநாயக கடமை. அதே வேளை, ஒரு கும்பலை சேர்த்து, பிரச்னை செய்வதற்காகவே போராடுவது, வேண்டாத வேலை. இன்று, இதைத் தான், காங்கிரஸ் உள்ளிட்ட மாநில எதிர்க்கட்சிகள் செய்து கொண்டிருக்கின்றன. 'சட்ட விரோதமாக, இந்தியாவில் குடியேறி இருப்போருக்கு தான், குடியுரிமை திருத்த சட்டம் எதிரானது' என்பதை, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

மாதம் ஒருமுறை, 'மான் கீ பாத்' வாயிலாக, எத்தனையோ பல விஷயங்களை, நாட்டு மக்களிடம் எடுத்துச் செல்கிறார், பிரதமர் மோடி. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும், அதன் நோக்கம், விளைவு குறித்தும், நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். அதை முறைப்படி செய்யாததால், இந்த சட்டம், குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரானது என்ற தவறான புரிதலை, மக்களிடம், எதிர்க்கட்சிகள் விதைத்து விட்டிருக்கின்றன.

எதற்கெடுத்தாலும் போராட்டம் என்ற பெயரில், கலவரத்தை துாண்ட வேண்டும் என்ற மனநிலையை முதலில், எதிர்க்கட்சிகள் மாற்றி கொள்ள வேண்டும். எந்த பிரச்னைக்கும், போராட்டம் தீர்வாகாது. அது தொடர்பான, ஆக்கப்பூர்வமான விவாதம் வாயிலாக, தீர்வு காண முயற்சிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் சுயநலம் கருதி, சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியை மனதில் நிறுத்தி, குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை, ஊதிப் பெரிதாக்க வேண்டாம். இனி, எதிர்க்கட்சிகள் மதச்சார்பற்ற, சமூக நீதி என்ற வார்த்தைகளை பயன்படுத்தி, போலி அரசியல் நாடகம் ஆட வேண்டாம்; தேசிய ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்க வேண்டாம்!

***


ஒழுக்கமான சமுதாயம் உருவாக வழிகள்!

அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவில், பாலியல் தாக்குதலுக்கு ஆளாகும் பெண்கள், மேலை நாடுகளில் உள்ளோரை போல, துணிச்சலாக புகார் கொடுக்க முன் வருவதில்லை. ஏனெனில், அவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என்பதால், மூடி மறைக்கப்பட்டு விடுகிறது. இதை சாதகமாக்கி தான், இந்த குற்றங்களில் ஈடுபடுபடுவோர், தொடர்ந்து ஈடுபட வழி வகுக்குகிறது. இந்த கொடிய குற்றங்கள், பெரும்பாலும், தங்கள் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களால் செய்யப்படுவதும், காதல் மற்றும் கள்ளக்காதல் உறவுகளாலும் நடக்கின்றன.

கல்வி முறையில், பெண் குழந்தைகள் மீது ஏற்படுத்தப்படும், நல்ல தொடுதல் மற்றும் தீய தொடுதல் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இன்று, பெற்றோர் தான், இது போன்ற தவறுகள் அதிகளவில் நடக்க, முதல் காரணமாகி விடுகின்றனர். உலகில், பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலை வெளிநாட்டு நிறுவனமான, 'ராய்ட்டர்ஸ்' நிறுவனம் மேற்கொண்டது. அதில், இந்தியா தான் முதலிடத்தில் இருப்பதாக கூறியுள்ளது. இதே நிறுவனம், ஏழு ஆண்டுகளுக்கு முன், ஆய்வு செய்தபோது, இந்தியா நான்காம் இடத்தில் இருந்தது. ஒவ்வொரு நாளும், நாட்டில், 92 பாலியல் வல்லுறவுகள் நடப்பதாக கூறப்படுகிறது.

அதில், விரல் விட்டு எண்ணக்கூடிய சம்பவங்கள் மட்டுமே, புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவும் செய்யப்படுகிறது. இதை கேள்விப்பட்டதும், தங்கள் ஆண், பெண் குழந்தைகளை, ஒவ்வொரு நாளும், பெற்றோர் கவனமாக கவனித்து வளர்க்க வேண்டும். குழந்தைகள் கைகளில், மொபைல் போன் கொடுக்கப்பட்டால், அதில் எதை பார்க்கின்றனர் என்பதை, அவர்கள் நண்பர்களிடம் பழகுவதை வைத்து, கவனித்து வர வேண்டும்.

தற்போது, தமிழக காவல் துறை, 'காவலன் ஆப்' உருவாக்கி உள்ளதை, ஒவ்வொரு பெண்களும் கட்டாயம், தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ஆபத்து காலங்களில், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை, எல்ேலாரும் அறிந்திருக்க வேண்டும்.இரவு, 7:00 மணிக்கு மேல், வீட்டில் இருந்து, பல்வேறு காரணங்களால் வெளியில் இருக்கும் பெண்கள், அவ்வப்போது, தன் பாதுகாப்பை, குடும்ப உறவுகளிடம் உறுதிப்படுத்த வேண்டும். இதுவே, ஒழுக்கமான சமுதாயம் உருவாக வழி வகுக்கும்!

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
10-ஜன-202008:29:41 IST Report Abuse
venkat Iyer அ.சேகர் அவர்கள் பெண்கள் பாலியில் வன்முறை நடப்பது குறித்து குறிப்பிட்டு இருந்தார்.நடப்பு காலங்களில் கைபேசி மூலம் வயதானவர்கள் முதல் இளம் சிறார்கள் வரை பார்க்க கூடாது இணைய தளங்களில் பாலிடால் காட்சிகளை பார்த்து வருவதுதான் இன்றைய காலங்களில் வன் சீண்டல்கள் நடந்து வருகின்றனர்.எனது வீதியில் பள்ளி மாணவன் ஒருவன் என்னிடம் புதிய கைபேசி அப்பா பிறந்த நாளுக்கு வாங்கி கொடுத்துள்ளதாக வரும்,இது தனக்கு ஆன்லைன் மூலம் படிப்பிற்கு பேருதவியாக இருக்கும் என்று கூறினான்.நானும் ரொம்ப சந்தோஷமப்பா என்று கூறினான்.பின்னர் அங்கில் எனக்கு 18 வயது ஆகாததால்,நான் கூகிள் அக்கவுண்ட் ஆரம்பிக்கவில்லை என்று நீங்கள் உங்கள் அக்கவுண்ட் எனது கைபேசியில் ஆரம்பித்து கொடுங்கள் என்று கூறினான்.நானும் எனது ஈ மெயிலை வைத்து ஆரம்பித்து கொடுத்தேன்.பின்னர்தான் தெரிந்தது.அந்த பையன் செக்ஸ் வெப் சைட் களை பார்த்ததை என்னால் உணர முடிந்தது.என்னால் அவனது புதிய அக்கவுண்டை நீக்க முடியவில்லை.அவனது கைபேசி எண்ணை வைத்து ஆரம்பித்ததால் பிரச்சனை இருந்தது.அந்த பையனிடமே இது குறித்து சொல்லாமல் அவனிடத்தில் அவனது கைபேசியை வாங்கி நான் ஆரம்பித்த அக்கவுண்டை நீக்கினேன்.இளம் சமுகம் எதை வேண்டுமானாலும் பார்ப்பார்கள்.நாம்தான் படிக்கும் வயதில் குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து அவர்கள் சமுகத்தோடு பழகி செய்யும் தவறை நாம் கவனித்து தடுக்க வேண்டும்.அமைதியாக இருந்தால் அது ஆபத்தில் தான் முடியும்.ஒரு படத்தில் அம்மாவை பேர் சொல்லி பிள்ளை கூப்பிடுவான்.அது அந்த குடும்பத்திற்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம்.நம் சமுகம் அதனை ஏற்று கொள்ளாது..
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
08-ஜன-202010:31:51 IST Report Abuse
vasumathi அழுத பிள்ளை பால் குடிக்கும் என்பது போல, சில போராட்டங்கள் (தமிழில் தேர்வு ) தேவை. ஆனால் இவர்கள் தேவை இல்லாமல் நிறையவே பன்றாங்க. . பெரிய பயம், அந்த கட்சி என்றாலே முரட்டு ஆட்கள், நிறைய ஊழல் என்ற பெயர் இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
08-ஜன-202008:53:51 IST Report Abuse
venkat Iyer திரு.சரவணன் அவர்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மையானது.அன்று கம்னியூஸ்ட் கட்சி என்றால் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் போராட்டக்கட்சி,வைகோ கட்சி இலங்கை தமிழர்களுக்காக போராட்டம் செய்யும் கட்சி.இதனாலேயே இந்த கட்சி மக்கள் மனதில் நிலைத்து நிற்கவில்லை.தமிழர் வாழும் பூமி தமிழ்நாடு என்று ஸ்டாலின் சொல்லி வருகிறார்.இந்தியாவில் மற்ற மாநிலங்களில் மற்றும் நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இது சிக்கலை உருவாக வாய்ப்பு உள்ளது.அதிமுக இதுபோன்ற பிரச்சனைக்கு அப்பால்பட்ட விஷயங்களை கையில் எடுப்பதில்லை.மத்தியில் நிதிவரவில்லை என்றால் பிரதமருக்கு கடிதம் எழுதுவார்.அமைச்சர்களை அனுப்பி வைப்பார்.சாலையில் நின்று போராடியது கிடையாது.மக்களுக்கு எரிச்சலை உருவாக்குமாறு அடிக்கடி பேட்டியே கொடுக்க மாட்டார்.ஸ்டாலின் அடிக்கடி பேட்டி கொடுப்பதால் அவரது பேட்டியை கூர்ந்து கவனிப்பவர்கள் குறைந்து விட்டனர்.மத்திய அரசை கையில் வைத்துக் கொண்டு தனது திட்டங்களை செவ்வனே செய்கின்றனர்.இதை நாம் பாராட்டாமல் இருப்பதுதான் தவறு.ஆட்சி நடத்த சில சூட்சுமங்கள் இருந்தால் போதும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X