புதுடில்லி: பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், நுகர்வை அதிகரிப்பதற்காக, மத்திய வர்க்கத்தினருக்கு, வருமான வரியில் சில சலுகைகள் அளிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. வீடு வாங்குவோருக்கு புதிய சலுகைகள் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட், வரும், பிப்., 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு இரண்டாவது முறையாக அமைந்த பிறகு, தாக்கல் செய்யப்பட உள்ள, இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்.
நடவடிக்கை:
தமிழகத்தைச் சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இது இரண்டாவது பட்ஜெட். தற்போது நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. அதில் இருந்து மீள்வதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கார்ப்பரேட் வரி, கடந்தாண்டு குறைக்கப்பட்டது. இருப்பினும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. நுகர்வு உயராததே இதற்கு காரணம்.
அதையடுத்து, பல்வேறு தரப்பு மக்களை ஈர்க்கும் வகையிலும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும், 2020 - 2021 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜட் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், நிதி அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கூறியுள்ளதாவது: கார்ப்பரேட் வரியை குறைத்ததன் மூலம், பலன் இருந்தாலும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. நுகர்வு குறைந்துள்ளதால், விற்பனை உயரவில்லை. அதனால், மக்களின் நுகர்வை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
எதிர்பார்க்கலாம்:
அதனால், வரும் பட்ஜெட்டில், மத்திய வர்க்கத்தினரை குறிவைத்து பல திட்டங்களை எதிர்பார்க்கலாம். குறிப்பாக, அவர்களிடம் பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், வருமான வரி முறையில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வரி விகிதத்தை மாற்றுவது, சில சிறிய மாற்றங்கள் செய்வது போன்றவற்றின் மூலம், வரிச் சலுகை பலன் கிடைப்பது குறித்து ஆராயப்படுகிறது. மத்திய வர்க்கத்தினருக்கான வரியில், 10 சதவீதம் வரை குறைப்பது குறித்து ஆராயப்படுகிறது. அதாவது, தற்போது, 1 லட்சம் ரூபாய் வரி செலுத்துவோருக்கு, அதில், 10 ஆயிரம் ரூபாய் வரை குறையும்.
இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் தெரிவித்த ஆலோசனைகளை பரிசீலித்து வருகிறோம். தற்போதுள்ள வரி முறையில் உள்ள உபரி வரி, கூடுதல் வரி உள்ளிட்டவற்றை நீக்கி, வரி விகித முறையை எளிமைபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. வரி சலுகையின் ஒரு பகுதியாக, வீடு வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், ரியல் எஸ்டேட் துறையில் உள்ள தேக்க நிலையிலும் மாற்றம் ஏற்படும். ஏற்கனவே கட்டப்பட்ட அல்லது பாதியில் நிறுத்தப்பட்ட கட்டடங்கள் விற்பனை உயரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
'துன்புறுத்த மாட்டோம்'
டில்லியில் நேற்று நடந்த, சி.ஏ.ஐ.டி., எனப்படும் அனைத்திந்திய வர்த்தக கூட்டமைப்பின் மாநாட்டில், நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ஒழுங்காக வரி செலுத்தாதவர்களை துன்புறுத்த மாட்டோம். வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், வரி முறைகள் எளிமையாக்கப்படும். வருமான வரியில், வரி செலுத்துவோர் துன்புறுத்தப்படுவது, மிரட்டப்படுவதை தடுக்கும் வகையில், புதிய வசதி ஏற்படுத்தப்பட்டது. வரி கணக்கை தாக்கல் செய்யும்போது, அதை யார் பரிசீலிக்கிறார் என்பது தெரியாது. அதேபோல், பரிசீலிக்கும் அதிகாரிக்கும், தாங்கள் யாருடைய கணக்கை பார்க்கிறோம் என்பது தெரியாது. இதற்காக, டி.ஐ.என்., எனப்படும் ஆவண அடையாள எண் வழங்கப்படுகிறது. வருமான வரி தொடர்பான அனைத்து பரிவர்த்தனைக்கும் இதை பயன்படுத்தலாம்.
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறையை எளிமைபடுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை பெற்று உள்ளோம். வளைகுடா நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், வணிகத் திருவிழா நடத்தப்படுகிறது. உற்பத்தி துறையை ஊக்குவிக்கும் வகையில், இங்கும் அதுபோன்ற திருவிழா நடத்தப்படும். ஜவுளி, தோல் பொருட்கள், ஆபரண நகைகள், யோகா உள்ளிட்ட துறைகளில், இந்தத் திருவிழா, இந்தாண்டு முதல் நடத்தப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE