அணையை துார் வாருவது ஆபத்தா?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அணையை துார் வாருவது ஆபத்தா?

Added : ஜன 07, 2020

சென்னை : ''அணைகளை துார் வாருவதால், எந்த பாதிப்பும் ஏற்படாது; விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வண்டல் மண் மட்டுமே அள்ளப்படுகிறது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - ராமச்சந்திரன்: குடிமராமத்து திட்ட வேலைகள் முழுமையாக முடியவில்லை. தி.மு.க., ஆட்சியில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தஞ்சாவூர் முதல் அறந்தாங்கி வரை, கல்லணை கால்வாயை சீரமைக்க திட்டமிடப்பட்டது. அந்த பணிகளை இன்னும் முடிக்காததால், தண்ணீர் வீணாகிறது. மேட்டூர் அணையை துார் வாருவது என்பது, சரியான காரியமல்ல. இதனால், தண்ணீர் முறையாக, விவசாயிகளுக்கு கிடைக்காது.முதல்வர்: பொது மக்கள், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தான், மேட்டூர் அணையில் துார் வாரும் பணி துவங்கப்பட்டது.

ஒரு சொட்டு மழை நீரை கூட வீணடிக்க கூடாது என்ற எண்ணத்தில் தான், அணைகள் துார் வாரப்படுகின்றன. மேட்டூர் அணை, 83 ஆண்டுகளாக துார் வாரப்படதாதால், வண்டல் மண் அதிகளவில் தேங்கியுள்ளது. நானும் ஒரு விவசாயி என்பதால், நீரின் அருமை எனக்கு தெரியும். திருச்சி, புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் பயன் பெறும் வகையில், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை அறிவித்தவர், கருணாநிதி. இந்த, 10 ஆண்டுகளில், இத்திட்டத்தை, அரசு செயல்படுத்தி இருந்தால், தண்ணீரை சேமித்து இருக்க முடியும். மேட்டூர் உள்ளிட்ட அணைகளை துார் வார முடியாது.

அணைகளில் மணல் போக்கிகள் உள்ளன. எனவே, மழையில் அடித்து வரப்படும் மணல், அதன் வழியாக வெளியேறி விடும். ஆட்சி முடியும் நேரத்தில், இதுபோன்ற திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.முதல்வர்: வண்டல் மண்ணை அகற்றுவதால், மேட்டூர் அணைக்கு எந்த பாதிப்பும் வராது. இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X