நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் 22ல் தூக்கு

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 07, 2020 | கருத்துகள் (5+ 38)
Advertisement
nirbhaya,SupremeCourt,hang,நிர்பயா, குற்றவாளி,தூக்கு

புதுடில்லி: 'நிர்பயா வழக்கு, குற்றவாளிகள் நான்கு பேருக்கு, வரும், 22ம் தேதி, காலை 7:00 மணிக்கு, டில்லி திஹார் சிறையில், துாக்கு தண்டனை நிறைவேற்றப்படும்' என, டில்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

டில்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா. 2012, டிசம்பரில், ஓடும் பஸ்சில், ஆறு பேரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, சாலையில் வீசப்பட்டார்.


விசாரணை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஆறு பேரும் குற்றவாளிகள் என, நீதிமன்றம் அறிவித்தது. குற்றம் நடந்த போது, குற்றவாளிகளில் ஒருவரின் வயது, 18 வயதுக்கு குறைவாக இருந்ததால், அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் மூன்றாண்டுகள் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

மீதமுள்ள ஐந்து பேருக்கு, துாக்கு தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், ராம் சிங் என்ற குற்றவாளி, டில்லி திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், முகேஷ், 32, பவன் குப்தா, 25, வினய் சர்மா, 26, அக் ஷய் குமார் சிங், 31 ஆகிய நான்கு குற்றவாளிகள், டில்லி திஹார் சிறையில், உள்ளனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றம், துாக்கு தண்டனையை உறுதி செய்தது. ஜனாதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவும், நிராகரிக்கப்பட்டன.


மனு தாக்கல்:

இந்நிலையில், குற்றவாளிகளை உடனடியாக துாக்கில் போட வேண்டும் எனக் கோரி, நிர்பயாவின் தாயார், டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகள் நான்கு பேரையும், வரும், 22ம் தேதி, காலை 7:00 மணிக்கு, டில்லி, திஹார் சிறையில் துாக்கிலிட உத்தரவிட்டது. இந்த வழக்கில், 14 நாட்களுக்குள், சட்ட நிவாரணம் பெறலாம் எனவும் தெரிவித்தது. குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.சிங், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக கூறினார்.


சிறை எண் - 2ல் தண்டனை நிறைவேற்றம்!

துாக்கு தண்டனைக் கான தேதி அறிவிக்கப்பட்ட பின், டில்லி திஹார் சிறையை சேர்ந்த அதிகாரி கூறியதாவது: குற்றவாளிகளில் மூன்று பேர், திஹார் சிறையின் சிறை எண் - 2லும், ஒருவர் மட்டும் சிறை எண் - 4லிலும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நால்வரும், வரும், 22ம் தேதியன்று, சிறை எண் - 2ல் துாக்கிலிடப்படுவர். உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் இருந்து, துாக்கிலிடுபவரை அழைத்து வர, முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

குற்றவாளிகள் துாக்கிலிடப்பட போகும், 22ம் தேதி, என் வாழ்வின் மிக முக்கியமான நாள். அவர்களின் தண்டனை நிறைவேற்றப்படுவதன் மூலம், சட்டத்தின் மீது, பெண்களுக்கு இருக்கும் நம்பிக்கை, மீட்டெடுக்கப்படும்.
- ஆஷா தேவி, நிர்பயாவின் தாயார்


வழக்கு கடந்து வந்த பாதை:

2012, டிச., 16: டில்லியில் மருத்துவ மாணவி 'நிர்பயா' நண்பருடன் இரவில், தனியார் பஸ்சில் பயணம் செய்த போது ஆறு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பஸ்சில் இருந்து துாக்கி வீசப்பட்டார். நண்பரும் தாக்கப்பட்டார்.

டிச., 17: டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் நிர்பயா சேர்ப்பு.

டிச., 21: பஸ் டிரைவர் ராம் சிங், அவன் சகோதரர் முகேஷ் சிங் ராஜஸ்தானில் கைது. வினய் சர்மா, புவன் குப்தா, ஒரு சிறுவன் டில்லியில் கைது. அக் ஷய் தாகூர், அவுரங்காபாத்தில் கைது.

டிச., 21: சப்தர்ஜங் மருத்துவமனையில் மாஜிஸ்திரேட்டிடம் 'நிர்பயா' வாக்குமூலம்.

டிச., 26: குற்றவாளிகளை துாக்கிலிட வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம்.

டிச., 27: 'நிர்பயா' மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

டிச., 29: சிகிச்சை பலனின்றி, அதிகாலை 2:15 மணிக்கு உயிரிழந்தார். பாலியல் குற்றங் களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டம் பார்லிமென்டில் தாக்கல்.

2013 ஜன., 3: பாலியல் பலாத்காரம், கொலை, கடத்தல், ஆவணங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் ஐந்து குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு. ஆறு பேரில் மைனர் குற்றவாளி வழக்கு மட்டும் சிறுவர் கோர்ட்டுக்கு மாற்றம்.

ஜன., 17: டில்லி சாகேட் விரைவு கோர்ட்டில் விசாரணை துவங்கியது.

மார்ச் 11: திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளியான ராம் சிங் துாக்கிட்டு தற்கொலை. மற்ற ஐந்து பேர் மீதான விசாரணை தொடர்ந்தது.

ஆக., 31: குற்றம் நிரூபிக்கப்பட்ட மைனர் குற்றவாளிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை.

செப்., 10: குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதி மன்றம் தீர்ப்பு. 13 பிரிவுகளில் இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டது.

செப்., 13: நால்வருக்கும் மரண தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

2014 ஜன., 3: சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது டில்லி உயர் நீதிமன்றம்.

2014 ஜூன் 2: குற்றவாளிகள் இருவர் இத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.

2014 ஜூலை 14: குற்றவாளிகளின் துாக்கு தண்டனைக்கு இடைக்கால தடை.

2015 டிச.,: மைனர் குற்றவாளியை விடுவிக்கக் கூடாது என பா.ஜ.,வின் சுப்பிரமணியன் சாமி டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு.

டிச., 18: இம் மனுவை டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டிச., 20: மூன்று ஆண்டு சிறை தண்டனை முடிந்ததால் மைனர் குற்றவாளி விடுதலை.

2016 ஏப்., 3: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை துவக்கம்.

2017 மே 5: நான்கு பேருக்கும் (அக்சய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங்) மரண தண்டனை விதித்த டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

நவ., 13: தீர்ப்பை எதிர்த்து, அக்சய் தாகூரை தவிர மற்ற மூவரும் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு.

ஜூலை 9: சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2019 அக்., 29: கருணை மனு தாக்கல் செய்ய குற்றவாளிகளுக்கு ஏழு நாள் காலக்கெடுவை திகார் ஜெயில் நிர்வாகம் விதித்தது.

நவ., 8: டில்லி அரசிடம் வினய் சர்மா கருணை மனு.

நவ., 30: இதனை தள்ளுபடி செய்த டில்லி உள்துறை அமைச்சர், டில்லி துணைநிலை கவர்னருக்கு மாற்றினார்.

டிச., 2: கவர்னரும் மனுவை தள்ளுபடி செய்து, டில்லி அரசு முடிவெடுக்க அனுமதி.

டிச., 6: கருணை மனுவை உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு மாற்றியது. மனுவை தள்ளுபடி செய்ய டில்லி அரசு பரிந்துரை.

டிச., 10: அக்சய் தாகூர் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு.

டிச., 18: மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், மூன்று வாரங்களுக்குள் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்ய உத்தரவு.

2020 ஜன., 7: நான்கு குற்றவாளிகளையும் ஜன., 22, காலை 7:00 மணிக்கு துாக்கிலிட, திகார் ஜெயில் நிர்வாகத்துக்கு, டில்லி நீதிமன்றம் நோட்டீஸ்.

Advertisement
வாசகர் கருத்து (5+ 38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashanmugam - kuppamma,இந்தியா
08-ஜன-202016:29:29 IST Report Abuse
Ashanmugam The mother of Nirbhaya should not forgive and pardon hanging convicts on sympathy ground at any cost. All four should be hanged down until death and this set an example towards rape-crime-murderers in future.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - chennai,இந்தியா
08-ஜன-202011:24:41 IST Report Abuse
Tamilan சீக்கிரம் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் ........இது போன்று குற்றம் செய்ய நினைப்பவனுக்கு ஒரு பாடம் .....
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
08-ஜன-202009:47:54 IST Report Abuse
Lion Drsekar மன்னர்கள் மற்றும் மாமன்னர்கள் அன்று பந்த் நடத்துவார்கள், போர் மூளும் சூழ்நிலை உருவாகும், மாமன்னர்கள் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை காண அவர்கள் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறுவார்கள் இதுதான் ஜனநாயக வழி, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X