தமிழ்நாடு

இயற்கை உரம் தயாரிக்க மாநகராட்சி பயிற்சி மாடி தோட்டம் அமைத்து தனியார் பள்ளி அசத்தல்

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020
Advertisement

மாநகராட்சி ஊழியர்கள் அளித்த, இயற்கை உரம் தயாரிப்பு பயிற்சியால், மாடி தோட்டம் அமைத்து, தனியார் பள்ளி ஒன்று அசத்திவருகிறது.


சென்னை மாநகராட்சி, குப்பையை தரம் பிரித்து, மக்கும் குப்பையில், இயற்கை உரம் தயாரிக்க, ஆர்வம் காட்டி வருகிறது. வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள் என, குப்பை அதிகம் சேகரமாகும் இடங்களில், இயற்கை உரங்களை, அவர்களாகவே தயாரிக்க அறிவுறுத்தப் படுகிறது.

திருவொற்றியூர் மண்டலம், ஒன்றாவது வார்டில், துப்புரவு மேற்பார்வையாளர் ஜெகன், ஆய்வாளர் பாபு ஆகியோர் தலைமையிலான துப்புரவு குழுவினர், வீடு மற்றும் பள்ளிகளில், மொத்தமாக சேகரமாகும் குப்பையில், மக்கும் குப்பையை வைத்து இயற்கை உரம் தயாரித்து, செடி, மரங்களுக்கு பயன்படுத்த, பயிற்சி வழங்கி அறிவுறுத்தி வருகின்றனர்.அதன்படி, 50க்கும் மேற்பட்ட வீடுகளின் தோட்டங்களில், மக்கும் குப்பையில் உரம் தயாரித்து, பயன்படுத்தி வருகின்றனர்.இதற்கு ஒரு படி மேலே போய், எண்ணுார், சத்தியவாணி முத்து நகரில் செயல்படும், எஸ்.எஸ்.எம்., மெட்ரிக் பள்ளி நிர்வாகம், பள்ளியின் மொட்டை மாடியில், இயற்கை உரத்தை பயன்படுத்தும் வகையில், மாடி தோட்டம் அமைத்துள்ளனர்.

இது குறித்து பள்ளி தாளாளர் பி.விஜயராகவன், 51, கூறியதாவது:மக்கும் குப்பையில் இயற்கை உரம் தயாரிக்க, மாநகராட்சி அதிகாரிகள்,ஊழியர்கள் தொடர்ந்து அறிவுறுத்தினர். அந்த உரத்தை பயன்படுத்த,மாடி தோட்டம் அமைக்க வேண்டும் என,யோசனை தோன்றியது.6 மாதங்களுக்கு முன், மொட்டை மாடியில், 2,400 சதுரடி இடத்தில், மேற்கூரை அமைத்து, வெண்டை, கத்தரி, பீர்க்கங்காய், சுரக்காய், தக்காளி, எலந்தங்காய், முருங்கை செடி, மாதுளை, கீரை வகைகள், நித்ய கல்யாணி, செம்பருத்தி என, 30க்கும் மேற்பட்ட செடி, கொடி வகைகளை பயிரிட்டு வளர்க்கும் முயற்சியை துவக்கினோம்.

இதற்கு, 1 லட்சம் ரூபாய் செலவானது. தவிர, உரத்தேவைக்கு,மாடியிலேயே தொட்டி அமைத்து, மாநகராட்சியினர் அறிவுறுத்தல்படி, மக்கும் குப்பையை வைத்து, உரம் தயாரித்து, மாடித் தோட்டத்திற்கு பயன்படுத்துகிறோம்.பஞ்ச கவ்யம் தயாரிப்பும், நாங்களே செய்கிறோம். செடி, கொடிகளின் வளர்ச்சி, நல்ல முறையில் உள்ளது. விளையும் காய்கறிகளை, பள்ளி ஊழியர்கள், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு இலவசமாக தருகிறோம்.

அணில், பறவைகள் மாடிதோட்டத்தில் விளையும் பழங்கள், காய்கறிகளை உண்டு, மீதி இருந்தால், அதை அறுவடை செய்ய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.இதற்கு, பள்ளி முதல்வர் காயத்ரி ராகவன், மாநகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். மற்ற பள்ளிகளும், மக்கும்குப்பையை உரமாக்கி, மாடிதோட்டம் அமைத்தால், பசுமையை உருவாக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


இயற்கை உரம் விற்பனை: மாநகராட்சி புது திட்டம்தயாரிப்பு கூடம் சென்று, இயற்கை உரம் வாங்க, பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால், மக்கள் கூடும் இடத்திற்கு சென்று விற்பனை செய்யும் திட்டத்தை, மாநகராட்சி துவங்கி உள்ளது.
அடையாறு மண்டலத்தில், தினமும், 600 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.இதில், 120 டன் மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.இதற்காக, 170, 171 மற்றும் 173வது வார்டுகளில், இயற்கை உரம் தயாரிப்பு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை உரம், கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது.பெரும்பாலான தயாரிப்பு கூடங்கள், மயானத்தில் இருப்பதால், பொதுமக்கள் அங்கு சென்று, இயற்கை உரம் வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.

இதையடுத்து, மக்கள் கூடும் இடங்களில் சென்று, உரம் விற்பனை செய்யும் திட்டத்தை, மாநகராட்சி துவங்கி உள்ளது.முதற்கட்டமாக, பெசன்ட் நகர் கடற்கரை, அடையாறு, தரமணி, வேளச்சேரி பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள், கோவில்கள், ஐ.டி., நிறுவனங்கள், மால்கள் மற்றும் பூங்காக்களில், உரம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த பணியை, சுகாதார பரப்புரையாளர்கள் மற்றும் துப்பரவு ஊழியர்கள் செய்து வருகின்றனர். உரம் தயாரிக்க பயன்படுத்தும் குப்பை மற்றும் வீட்டில் தயாரிப்பது எப்படி என, ஆலோசனையும் வழங்கப்படுகிறது. இத்திட்டம், பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.


- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X