சினிமா ஆசை இருந்தாலும் பொருளாதாரத்தையும் யோசிக்கணும் சின்னதம்பி மார்த்தாண்டன் அட்வைஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சினிமா ஆசை இருந்தாலும் பொருளாதாரத்தையும் யோசிக்கணும் 'சின்னதம்பி' மார்த்தாண்டன் அட்வைஸ்

Added : ஜன 08, 2020
 சினிமா ஆசை இருந்தாலும் பொருளாதாரத்தையும் யோசிக்கணும் 'சின்னதம்பி' மார்த்தாண்டன் அட்வைஸ்

'நடிகர் பிரபுவின், சின்னதம்பி திரைப்படம், ஓராண்டை கடந்து திரையரங்கில், வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில், விதவையாக நடித்த நடிகை மனோரமாவுக்கு, தாலி கட்ட செல்லும் கேரக்டரில், 'எனக்கு கல்யாணம்... எனக்கு கல்யாணம்' என, அப்பாவித்தனமாக பேசி நடித்தவர், சின்னதம்பி மார்த்தாண்டன்.

இவர், அடிப்படையில் ஓவியர். சினிமா மீது ஏற்பட்ட ஆசையில், தான் பார்த்த ஓவிய ஆசிரியர் பணியை துறந்தவர். ''நான் சினிமாவில் நுழைய காரணமும் ஓவியம் தான். பிரபல நடிகராக முடியாமல் போனதற்கு காரணமும் ஓவியம் தான்,'' என்கிறார் மார்த்தாண்டன்.

அவரிடம் உரையாடியதிலிருந்து...


உங்களை பற்றி?

நான் பிறந்தது நாங்குநேரி அருகே, ஏறாந்தை என்ற குக்கிராமம்.இயற்பெயர்
முருக மார்த்தாண்டன். விவசாய குடும்பம். அப்பா, பனை ஓலையில் கிளி, குருவி செய்வார். அது தான், என்னை ஓவியனாக மாற்றியது.முறையாக ஓவிய ஆசிரியர் பயிற்சி பெற்று, திருச்செந்துாரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், ஓவிய ஆசிரியராக பணிபுரிந்தேன்.


சினிமா ஆசை எப்போது வந்தது?

திருவிழா நாடகங்களில், நகைச்சுவை, ஹீரோ கேரக்டரில் நடித்தேன். நண்பர்கள், 'உனக்கு சினிமாவில் நடிக்க தேவையான அத்தனை திறமையும் உள்ளது' என, துாண்டி விட்டனர். பெற்றோருக்கு, ஆசிரியராக பணிபுரிய விருப்பம். சினிமா மீது ஏற்பட்ட காதலால், 1978ல் சென்னை வந்தேன்.


இங்கு சினிமா வாய்ப்பு எப்படி கிடைத்தது?



உடனே, சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரபல சினிமா ஓவியர் உபால்டு, ஈஸ்வர் ஆகியோரிடம் சேர்ந்து, சினிமா போஸ்டருக்கு, நடிகர் - நடிகையர் படங்களை,ஓவியமாக வரைந்தேன்.மும்பையில், பிரபல ஓவியர் மோகனிடம், சினிமா போஸ்டர் தயாரிப்பு நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். கூடவே, சினிமா வாய்ப்பையும் தேடி வந்தேன். நடிகர் விவேக், சார்லி, தாமு போன்றோர், என்னோடு வாய்ப்பு தேடியவர்கள்.


உங்களின் முதல் படம்?

ஓவியங்களுடன், சினிமா வாய்ப்பு தேடினேன். இயக்குனர் ராஜசேகர், கழுகுமலை கள்ளன் படத்தில், அமாவாசை என்ற கேரக்டர் கொடுத்தார்.என் ஓவியத்தை பார்த்து வியந்த இயக்குனர் பாலசந்தர், ஒரு வீடு இரு வாசல் படத்தில், எதை பார்த்தாலும் கரித்துண்டால் ஓவியம் வரையும் கேரக்டர் கொடுத்தார். அதுதான் என்னை, சினிமாவில் அடையாளப்படுத்தியது.


சின்னதம்பி வாய்ப்பு எப்படி?



நடிகர் பிரபு, ஒரு வீடு இருவாசல் படத்தை பார்த்து,சின்னதம்பியில் நடிக்க பரிந்துரைத்தார். அதன் பின், தொடர்ந்து படவாய்ப்பு கிடைத்தது.ஏன் நடிப்பில் பிரபலமாக முடியவில்லை?நான், 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். எனக்கு, சினிமா, ஓவியம் இரு கண்களாக இருந்தன. ஓவியத்தை விட முடியாததால், தேடல் குறைவால், சினிமா வாய்ப்புகள் குறைந்தன.என்னை, சினிமாவில் நடிக்க வைத்ததும் ஓவியம் தான். நான் பிரபலமாக முடியாததற்கு காரணமும்ஓவியம் தான்.


சினிமாவில் புரிந்தது, புரியாதது எது?



சினிமாவில், 75 சதவீதம் பேர் நல்லவர்கள் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்பது தான் கடினம். ஏமாற்றுபவர்கள் எளிதில் கிடைப்பர். அவர்களிடம் சிக்கி, சினிமா வாய்ப்பை இழந்தவர்கள் தான் அதிகம்.


உங்கள் ஓவியத்தை பாராட்டியது யார்?



ரஜினி, கமல், பாலசந்தர் போன்றோர் ஓவியங்களை வரைந்து, அவர்களிடம் கொடுத்துள்ளேன். ரஜினியை, கத்தியால், 'நைப்' ஓவியம் வரைந்து, அவரிடம் கொடுத்தேன். பல ஆண்டுகள், அவரது வீட்டுவரவேற்பு அறையில், அதை வைத்திருந்தார்.


தற்போதைய சினிமா வாய்ப்பு எப்படி உள்ளது?

கடைசியாக, நடிகர் தனுஷ் நடித்த, பரட்டை படத்தில் நடித்தேன். எனக்கான கேரக்டர் கிடைத்தால் நடிப்பேன்.ஒரு தனியார் தொலைக்காட்சியில், ஓவியம் வரைவது குறித்த, சிறுவர் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன். யாராவது முகத்தை வரைந்து தருமாறு கேட்டால், உடனே வரைந்து கொடுப்பேன்.


உங்கள் பொருளாதார முன்னேற்றம் குறித்து?



சினிமா என்னை மக்களிடம் சேர்த்தது. ஓவியம், எனக்கு பொருளாதாரம் கொடுத்தது. என் குடும்ப கஷ்டத்தை பார்த்து, நடிகர் விவேக், ஒரு ஓவிய கண்காட்சி நடத்தி தந்தார். அதில் கிடைத்த வருவாய், என் குடும்ப பொருளாதாரத்திற்கு கைகொடுத்தது.


சினிமா வாய்ப்பு தேடுவோருக்கு உங்கள் ஆலோசனை?



சினிமா ஆசை எந்த காலத்திலும் அழியாது. இளைஞர்கள், சினிமாவை தெரிந்து, வாய்ப்பு தேடுவது அவசியம். அடிப்படை தேவைக்கான பொருளாதாரம் இல்லாமல் வாய்ப்பு தேடினால், மிகவும் கஷ்டப்பட வேண்டி வரும். ஆண்களை விட, பெண்கள் மிகவும் சிரமப்படுவர். அவர்கள், மிகவும்எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- -நமது நிருபர்- -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X