கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வேலுமணி மீதான புகாரில் விசாரணை அறிக்கை கேட்பு

Added : ஜன 08, 2020
Advertisement

சென்னை : அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரின், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை, லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அறப்போர் இயக்கத்தின், நிர்வாக அறங்காவலரான ஜெயராம் வெங்கடேசன், தாக்கல் செய்த மனு:உள்ளாட்சி துறை அமைச்சராக இருக்கும் வேலுமணி, அதிகார துஷ்பிரயோகம் செய்து, அரசு திட்டங்களை செயல்படுத்த, 'டெண்டர்' வழங்குவதில், விதிமுறைகளை மீறி உள்ளார். வேண்டியவர்களுக்கும், பினாமிகளுக்கும் ஆதரவாக செயல்பட்டுள்ளார்.இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு துறையிடம், ௨௦௧௮ செப்டம்பரில் புகார் அளித்தேன்; எந்த பதிலும் இல்லை. எனவே, அமைச்சருக்கு எதிராக, வழக்கு பதிவு செய்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.



தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதியும், இதுபோன்ற மனுவை தாக்கல் செய்தார். மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், புகார் தொடர்பாக, பொன்னி எஸ்.பி., விசாரணை நடத்தவும், அதை, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் மேற்பார்வையிடவும் உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


பாரதி சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ''புகாரில் முகாந்திரம் இருந்தால், வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆரம்பகட்ட விசாரணையில், சாட்சிகளை விசாரிக்க முடியாது. ஆனால், பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது,'' என்றார்.அறப்போர் இயக்கம் சார்பில், வழக்கறிஞர் சுரேஷ், ''மாநில அமைச்சருக்கு எதிரான புகாரை, மாநில அரசுத் துறை விசாரிப்பது முறையாக இருக்காது,'' என்றார். லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், ''ஆரம்பகட்ட விசாரணை முடிந்து, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.


இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஆரம்பகட்ட விசாரணையை முடித்து, அறிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த விசாரணை அறிக்கையை, ஆவணங்களுடன், சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடப்படுகிறது. மனுதாரர்கள் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களுக்கு, தலைமை குற்றவியல் வழக்கறிஞரும், அமைச்சரின் வழக்கறிஞரும் பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். விசாரணை, வரும், ௨௩ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X