தமிழ்நாடு

வியாபாரிகள், விவசாயிகளை தாக்குபவர்களுக்கு குண்டாஸ்! விருதையில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020
Advertisement
 வியாபாரிகள், விவசாயிகளை தாக்குபவர்களுக்கு   குண்டாஸ்!  விருதையில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை

விருத்தாசலம்:'கமிட்டிக்குள் அத்துமீறி நுழைந்து விவசாயிகள், வியாபாரிகளை மிரட்டி, தாக்குதலில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்' என விருத்தாசலத்தில் நடந்த சம்பா பருவ வரத்து ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் அன்புச்செல்வன் எச்சரித்தார்.
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், மார்க்கெட் கமிட்டிக்கு சம்பா பருவ வரத்து குறித்து விவசாயிகள், வியாபாரிகள் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். சப் கலெக்டர் பிரவீன்குமார், வேளாண் இணை இயக்குனர் முருகன், துணை இயக்குனர் (வணிகம்) ஜெயக்குமார், நேர்முக உதவியாளர் (விவசாயம்) மாரியப்பன், திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், உதவி இயக்குனர் பூவராகவன் முன்னிலை வகித்தனர். கமிட்டிகளின் செயலர் (பொறுப்பு) ஆறுமுகராஜன் வரவேற்றார். கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் தொகுத்து வழங்கினார்.
கூட்டத்தில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:கார்மாங்குடி, வெங்கடேசன்: சீசன் காலங்களில் 15 ஆயிரம் மூட்டைகளுக்கு அதிகமாக வரத்து இருக்கும் போது, அவற்றை கொள்முதல் செய்து வெளியே எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பூதாமூர் சாலையில் உள்ள மாற்று வழியை பயன்படுத்த வேண்டும். கமிட்டி வளாகத்தில் பல ஆண்டுகளாக அகதிகள் முகாம் செயல்படுவதால், அங்கு வசிப்போருக்கு மாற்று வழி ஏற்படுத்த வேண்டும்.
அகரஆலம்பாடி, வேல்முருகன்: சேத்தியாத்தோப்பு மார்க்கெட் கமிட்டி ஓராண்டாக காட்சிப்பொருளாகவே உள்ளது. அங்கு தினசரி கொள்முதல் பணி நடந்தால், விருத்தாசலத்திற்கு விவசாயிகள் அலைந்து திரிய வேண்டிய நிலை இருக்காது. கரும்புக்கு வாகன வாடகையை ஆலை நிர்வாகம் ஏற்பதுபோல, நெற்பயிருக்கு வாகன வாடகை தர வேண்டும்.
கலெக்டர் அன்புச்செல்வன் குறுக்கிட்டு, 'அறுவடைக் கூலியையும் கேட்பீர்கள் போல' என்றதும், கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
சின்னகண்டியங்குப்பம், குப்புசாமி: கமிட்டியில் விவசாயிகள் மீது வெளி நபர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். சாக்குகள் பற்றாக்குறை உள்ளது. எடைபோட, சாக்கு மாற்ற தலா 10 ரூபாய் கேட்டு மிரட்டுகின்றனர். தராத விவசாயிகளை அசிங்கப்படுத்துகின்றனர்.
கலெக்டர்: கமிட்டிகளுக்குள் அத்துமீறி நுழைந்து விவசாயிகள், வியாபாரிகளை மிரட்டி, தாக்குதலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக 300 சாக்குகள் வாங்கப்படும். விவசாயிகள் நலன் கருதி நாளொன்றுக்கு 2 ரூபாய் வாடகை பெறப்படும்.
கிள்ளை, ரவீந்திரன்: விவசாயிகளுக்கு திருப்தியான விலை கிடைப்பதால், விருத்தாசலத்திற்கு வரத்து அதிகமாக உள்ளது. திட்டமிட்டு பரிமாற்றம் செய்வது முக்கியம். பொருளின் தரம் குறைவு எனக் கூறி விலையை குறைத்து நிர்ணயம் செய்கின்றனர். எனவே, எந்த தரத்தில் விவசாயிகளிடம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
சாத்துக்கூடல், சக்திவேல்: 75 கிலோவாக உள்ள நெல் மூட்டையை, நெல் கொள்முதல் நிலையங்களை போல 40 கிலோவாக மாற்ற வேண்டும். கமிட்டியில் தரநிர்ணய அலுவலர் இல்லை. கிராமங்களில் உலர்களம் இல்லாததால், அறுவடை செய்ததும் கொண்டு வர வேண்டியுள்ளது. எனவே, கமிட்டி நிர்வாகம் சார்பில் கிராமங்களில் உலர்களம் அமைத்து தர வேண்டும்.
மார்க்கெட் கமிட்டி வியாபாரிகள் சங்கத் தலைவர் பழமலை: 30 ஆயிரம் மூட்டைகள் வரத்து இருக்கும்போது, அவற்றை சாக்குமாற்றி, வாகனத்தில் வெளியேற்றுவது சிரமமாக உள்ளது. நள்ளிரவு 2:00 மணிக்கு மேலாகும் போது, அடுத்தநாள் கொள்முதலுக்கு மூட்டைகள் வந்து விடுவதால் வெளியேற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.இதற்கு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு குரல் கிளம்பியது.
கலெக்டர் அன்புச்செல்வன்: வியாபாரிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அங்கு இடையூறு ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.விவசாயிகள் கூச்சலிட்டு வந்ததால், ஆலோசனை கூட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் அறையில், வியாபாரிகளுடன் கருத்துகளை கலெக்டர் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் சிரிப்பலை:
வி.குமாரமங்கலம், திருமால் என்பவர், 'நெல் விலை உயரவில்லை; ஆனால், உரம், பூச்சிமருந்து விலை உயர்ந்து விட்டது, என்றார். அப்போது, குறுக்கிட்ட அதிகாரிகள், தங்கள் பெயரை குறிப்பிடுங்கள் என்றதும், 'திருமால், வி.குமாரமங்கலம் ஊராட்சி செயலர்' என்றார். திடுக்கிட்ட கலெக்டர் 'ஊராட்சி செயலரா, நீங்கள் இன்று வேலைக்கு செல்லவில்லையா' என கேட்டார்.அதற்கு, அவர் நான் தி.மு.க.,வில் ஊராட்சி செயலர் என கூறியதும், கூட்டத்தில் சிரிப்பலை குறைய வெகுநேரமானது.தொடர்ந்த திருமால் பேசிக்கொண்டிருந்தார். கலெக்டர், 'இது அரசியல் மேடையல்ல. கமிட்டிக்கு நல்ல ஆலோசனை என்றால் கூறுங்கள். இல்லாவிட்டால் வெளியே மேடைபோட்டு பேசிக் கொள்ளுங்கள்' என முடித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X