முன்னேறுவதற்கு முதற்படி

Added : ஜன 08, 2020
Advertisement
 முன்னேறுவதற்கு முதற்படி

நம் வாழ்க்கையில் நாம் எதை அடைய நினைத்தாலும், எதை நோக்கிப் பயணப்பட்டாலும் முதலில் நம்முடைய பயணம் நம் காலை முதல் அடி எடுத்துவைப்பதில்தான் தொடங்குகிறது. ஓர் ஓவியம் வரைய ஆரம்பிக்கும்போது, அந்த ஓவியம் ஒரு புள்ளியில்தான் தொடங்குகிறது.

அதுபோல ஒரு கோபுரத்தைக் கட்ட ஆரம்பிக்கும்போது அது முதல் செங்கலை எடுத்து வைப்பதில்தான் தொடங்குகிறது.அதுபோல, நம்முடைய வாழ்க்கையில் நாம் முன்னேற விரும்பினால் அதற்கு முதல் தேவை நம் மனதில் ஆர்வம். முன்னேறுவதற்கு முதற்படி ஆர்வம் தான்.ஈடுபாடு ஆர்வத்திற்கு இன்னொரு பெயர் ஈடுபாடு. நாம் செய்யும் எந்தவொரு செயலிலும், காரியத்திலும் ஆர்வமில்லாமல் ஆரம்பித்தால் அந்தக் காரியத்தில், செயலில் மனம் முழுமையாக ஈடுபடாது. ஈடுபாடு இல்லாமல் செய்யும்போது அதில் நாம் எதிர்பார்க்கும் வெற்றியை அடையமுடியாது.

ஆர்வம், ஈடுபாடு இவற்றுடன் செய்யப்படும் ஒருசெயலில் தன்னாலேயே அதில் நமக்கு அக்கறை ஏற்படும். அக்கறையுடன் செய்யப்படும் செயல் நிச்சயம் வெற்றியடைவதோடு, சிறப்பாகவும் அமையும்.ஆர்வமற்றபோக்கு சோம்பல். சோம்பல் உள்ளவர்கள் எந்தச்செயலையும் ஆரம்பிக்கமாட்டார்கள். சிலர் செயல்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டு பாதியிலேயே நின்றுவிடுவார்கள். இவர்கள் அரைகுறை ஆர்வத்துடன் செயலைச் செய்ய ஆரம்பித்தவர்கள். முழுமையான ஆர்வமுள்ளவர்கள் இடையில் எத்தகைய இடையூறுகள் வந்தாலும் எடுத்த காரியத்தை நிறுத்தாமல் இறுதிவரைச் சென்று முடிப்பார்கள். இறுதிவரை ஓடும் இவர்களே வெற்றியாளர்கள்.காருக்கு பெட்ரோல்ஆர்வம், காருக்கு பெட்ரோல் மாதிரி. தொடர்முயற்சிக்கு அது சத்துணவு.

அதுவே தொடர்ந்து இறுதிவரைச் செல்வதற்கு உந்துசக்தி. நம்மை, நம்செயலில் முன் இழுத்துக்கொண்டு செல்லும் சக்தி. அந்த உந்துசக்தி நம்மை மேலும் மேலும் நகர்த்திக் கொண்டுசெல்லும்.சோம்பல் நம்மைப் பின்னிழுக்கும் சக்தி. அது தோல்வியையே தரும். சிலருடைய ஆர்வம் பவுர்ணமி நிலவுபோல் முழுமையாக ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்து இல்லாமற்போய்விடும். சிலர் ஆரம்பத்தில் அவ்வளவு ஆர்வமில்லாமலிருந்து வளர்பிறை நிலவுபோல் தனது ஆர்வத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கொண்டு செயல்படுவார்கள்.

இப்படி இல்லாமல் எப்போதும் குறையாமல் பிரகாசித்துக்கொண்டிருக்கும் சூரியனைப்போல தனது ஆர்வத்தைக் குறையாமல் பார்த்த்துக்கொண்டால் எதன்மீது ஆர்வம் கொண்டாலும் அதில் வெற்றி பெறமுடியும்.வாழ்க்கையில் முன்னேற ஆர்வம் மட்டுமே இருந்தால் போதுமா?ஆர்வம் என்பது முதற்படி என்று பார்த்தோம். முன்னேறி உச்சிக்குப் போக அடுத்தடுத்த படிகள் எவை எவை என்று பார்ப்போம்.காரியத்தில் இறங்குங்கள்நீச்சல் பழக விரும்புபவன் நீரில் இறங்கினால் தான் நீச்சல் கற்றுக்கொள்ளமுடியும். சும்மா யோசித்துக்கொண்டிராமல் விரும்பும் காரியத்தில் இறங்குங்கள்.

தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் பலர் ஒதுங்கிவிடுகிறார்கள்.முழுமையாக அறிந்துகொள்ளுங்கள்நீங்கள் இறங்கும் காரியத்தைப்பற்றி, துறையைப்பற்றி உள்ள விஷயங்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள். அது பயிற்சி பெறுவதற்கு, முன்னேறுவதற்கு, உதவியாக இருக்கும்.துணிச்சலும் முயற்சியும்' எடுத்துக்கொண்ட காரியத்தை முடிப்பேன்' என்று மனதிற்குள் உங்களுக்கு நீங்களே சவால்விடுங்கள். துணிச்சலுடன் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். தொடர்ந்த காரியத்தை இடையில் நிறுத்திவிடாதீர்கள்.

உலகத்தில் ஆஸ்கார் விருது, நோபல் பரிசு இரண்டையும் பெற்ற ஒரே ஒருவர் பேரறிஞர் பெர்னாட்ஷா. அவர் தனது படைப்புகளைப் பிரசுரிக்க ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து முயற்சி செய்தார். ஆனால் அவருடைய எண்ணம் அதற்குப் பின்னர் நிறைவேறியபோது அவருடைய எழுத்துக்களைப் பதிப்பிக்க பதிப்பகத்தார்கள் அவருடைய வீட்டில் வரிசையில் நின்றார்கள். அது அவருடைய தொய்வு ஏற்படாத தொடர்முயற்சிக்கான வெற்றி.நம்பிக்கை கொள்ளுங்கள் 'எடுத்துக்கொண்ட காரியம் எப்படியும் நிறைவேறப்போகிறது'என்று நம்புங்கள். தெய்வத்திடம் நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.சுயமந்திரம்தனக்குத்தானே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்வதை சுயமந்திரம் என்று சொல்கிறோம்.

“என்னால் முடியும், என்னால் முடியும்” என்று மீண்டும் மீண்டும் நம்பிக்கையுடன் சொல்லிக்கொண்டே இருங்கள். இதை மனதிற்குள்ளும் சொல்லலாம். இது உங்கள் ஆழ்மனதில் அமர்ந்து கொண்டு உங்கள் எண்ணங்களை நிறைவேற்றிவைக்கும்.குப்பைகளை வெளியேற்றுங்கள் மனதில் சேர்ந்துள்ள எதிர்மறையான எண்ணங்கள் என்னும் குப்பைகளை வெளியே தூக்கி வீசுங்கள். மனச்சோர்வையும, இது நடக்காது என்ற எண்ணத்தையும் அகற்றுங்கள்.தேடுங்கள்கடவுள் எல்லாவற்றையும் உரித்த வாழைப்பழமாக வைக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுக்குத் தேவையானது எதுவானாலும் தேடினால் கிடைக்கும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு தேடுங்கள்.எதிர்கொள்ளுங்கள்உங்களுக்குப் பிரச்னை வரும்போது ஓடி ஒளிந்துகொள்ளாமல் பிரச்னையைத் தைரியமாக எதிர்கொள்ளுங்கள். பிரச்னை உங்களைப்பார்த்து ஓடி ஒளிந்துகொள்ளும்.செய்துகாட்டுங்கள்யாராவது “ இந்த வேலையை உங்களால் செய்யமுடியுமா?” என்று கேட்டால் “ முடியும்” என்று சொல்லிச் செய்துகாட்டுங்கள். முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். நடத்திக்காட்டுங்கள்.

நல்லதையே பாருங்கள்பிறரிடம் உள்ள நல்ல குணங்களைப் பாருங்கள். அடுத்தவரிடம் உள்ள குறைகளைக் கண்டுகொள்ளாதீர்கள். இது பாதியளவு பால் நிரம்பிய டம்ளரைக் காண்பித்து, “ இந்த டம்ளர் எப்படி இருக்கிறது? என்று இரண்டு பேர்களிடம் கேட்டால், பிறரிடம் குறைகாணும் மனோபாவம் உள்ளவர்” டம்ளரில் பாதியளவு காலியாக இருக்கிறது” என்று சொல்வதையும், பிறரிடம் நல்லதையே பார்ப்பவர் “ டம்ளரில் பாதியளவு பால் நிரம்பியிருக்கிறது” என்று சொல்வதையும் போன்றது.வளைந்து கொடுங்கள்எல்லா நேரங்களிலும் நாம் நினைத்தபடியே, நமது விருப்பப்படியே சகலமும் நடக்காது.

சூழ்நிலைக்குத் தக்கவாறு வளைந்துகொடுக்கவும், விட்டுக்கொடுக்கவும் பழகிக் கொள்ளுங்கள். காலி பண்ணாதீர்கள்ஒரு காரியத்தில் ஈடுபடும்போது, காரியத்தை முடிக்காமல் பாதியிலேயே பின்வாங்கி இடத்தைக்காலி பண்ணாதீர்கள். சோர்ந்துபோகாமலும், மனம் தளர்ந்துபோகாமலும் வைராக்கியத்தோடு எடுத்த காரியத்தை முடிக்க முயலுங்கள். விட்டுவிடுங்கள்' நீங்கள் நினைத்தபடி வாழ்க்கை அமையவில்லையே ' என்று ஏங்கி முனகுவதை விட்டுவிடுங்கள்.

பிறருடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை விட்டுவிடுங்கள். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் தனித்தனியானது என்பதை மனதில் வையுங்கள். பிறருடைய முன்னேற்றத்தை பார்த்து பொறாமைப்படுவதை விட்டுவிடுங்கள்.இறுதியாகலட்சியத்தை எப்போதும் மனதில் வைத்திருங்கள். அதுநிறைவேறும் என்று முழுமையாக நம்புங்கள். உங்கள் ஆசையை, லட்சியத்தை உங்களால் அடையும் தகுதியும், திறமையும் உங்களிடம் உள்ளது என்ற தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

உங்கள் ஆசையோ, லட்சியமோ நிறைவேறிவிட்டதாகப் படமாக மனக்கண்ணில் அவ்வப்போது அடிக்கடி பாருங்கள். உழைப்புக்கு மிஞ்சி எதுவுமில்லை. உழைப்பு இல்லாமல் எதுவும் நடக்காது. லட்சியத்தை அடைய, இடையில் விட்டுவிடாமல், தொடர்ந்து உழையுங்கள். முன்னேற்றம் நிச்சயம் உங்ளுடையது.
-நீரஜா, எழுத்தாளர், மதுரை. 97870 37744

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X