தமிழ்நாடு

பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் எதிர்காலம்...கேள்விக்குறி!:பொங்கல், 'போனஸ்' வழங்குவதில் திணறல்;கவலையடையும் நெசவாளர்களுக்கு என்ன வழி?

Added : ஜன 08, 2020
Advertisement

காஞ்சிபுரம்:அறிஞர் அண்ணா மற்றும் முருகன் பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி நெசவாளர்களுக்கு, 'போனஸ்' வழங்க திணறுவதால், கைத்தறி சங்கங்களின் எதிர்காலம் குறித்து, நெசவாளர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.

உலக புகழ்பெற்ற பட்டு சேலைகள், இன்றைக்கும் காஞ்சிபுரம் நகரில், நெசவாளர்களால், கைத்தறியில் நெய்யப்பட்டு வருகின்றன.கைகளால், மிகுந்த சிரமப்பட்டு நெய்யும் நெசவாளர்களுக்கு, இன்று வரை, உரிய கூலி சரியாக கிடைப்பதில்லை.கூட்டுறவு சங்க நெசவாளர்கள் செய்யும் அதே பணியை, தனியார் நெசவாளர்கள் செய்கின்றனர்.ஆனால், கூலி விகிதத்தில் குறைந்த அளவே தனியார் நெசவாளர்களுக்கு வழங்கப்படுகிறது.


நெசவாளர்கள் கவலை

கூலி விகிதத்திலும், சலுகை வகையிலும், ஓரளவு நிறைவாக பெற்று வந்த கூட்டுறவு சங்க நெசவாளர்களின் வாழ்வாதாரமும், இனி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு வருவதாக, நெசவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.கூட்டுறவு சங்கங்களின் இன்றைய முகமாக, பட்டு சேலைகளின் தேக்கம், முறைகேடு, பணி முடக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் முன்வைக்கப் படுகின்றன.

அதிலும், லாபகரமாக செயல்பட்டு வந்த பட்டு கூட்டுறவு சங்கங்களின் மீது, பெரும் முறைகேடு புகார்களும், போனஸ் சதவீதம் குறைப்பு போன்ற விஷயங்களும், நெசவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் நகரில், லாபகரமாக இயங்கி வந்த பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்களில், அறிஞர் அண்ணா மற்றும் முருகன் போன்ற பட்டு கூட்டுறவு சங்கங்கள் முக்கியமானவை.

ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி, அதில் கிடைக்கும் வருவாயை வைத்து, நெசவாளர்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்தாண்டு, 44 சதவீத போனஸ் தொகையை, நெசவாளர்கள் போராடி பெற்றனர். அதேபோல், இரண்டாண்டுகளுக்கு முன், போனஸ் வழங்கிய முருகன் சங்கம், கடந்தாண்டு கோடிக் கணக்கில் நஷ்டம் மற்றும் முறைகேடு புகாருக்கு ஆளானது. இதனால், முருகன் சங்கத்திலும் போனஸ் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக போனஸ் வழங்க வேண்டும். ஆனால், இதுவரை, போனஸ் வழங்கப்படுவது சம்பந்தமாக, எந்தவித தகவலும் தெரியவில்லை என, நெசவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்முருகன், அறிஞர் அண்ணா உள்ளிட்ட பட்டு கூட்டுறவு சங்கங்களில், சமீப காலமாக நிர்வாக குளறுபடிகள் நடைபெற்று வருவதாக, நெசவாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.


முறைகேடு புகார்



இந்த சங்கங்களில், இரு ஆண்டுகளாகவே, முறைகேடு புகார் அதிகளவில் எழுந்துள்ளன. மாவட்டம் முழுவதும், இயங்கி வரும், 22 பட்டு கைத்தறி சங்கங்களில் ஏற்கனவே, 13 சங்கங்கள் நலிந்து, முடங்கிஉள்ளன.இந்நிலையில், லாபகரமாக இயங்கும் பட்டு கைத்தறி சங்கங்களும், முறைகேடு, நிர்வாக சீர்கேடு என, அதல பாதாளத்தில் செல்லும் நிலை ஏற்படுமோ என, நெசவாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பட்டு கைத்தறி சங்கங்கள் மட்டுமல்லாமல், பருத்தி கைத்தறி சங்கங்களும், பலவிதமான முறைகேடு காரணமாக நலிந்து, மூடப்படும் தருவாயில் இருப்பதாக, அவர்கள் கூறுகின்றனர்.அதுபோன்ற நிலைக்கு, அறிஞர் அண்ணா, முருகன் உள்ளிட்ட பட்டு கைத்தறி சங்கங்கள் வந்து விடுமோ என்ற அச்சம், நெசவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.தனியார் கடைகளுடன் போட்டி போட்டு லாபகரமாக இயங்கி வரும் அறிஞர் அண்ணா, பட்டு கைத்தறி சங்கத்தின் நடவடிக்கைகளால், நெசவாளர்களிடையே கவலை எழுந்துள்ளது.

இதை தவிர்க்கவும், சங்க நிர்வாகம் வெளிப்படை தன்மையுடன் இருக்கவும், கைத்தறி துறை இயக்குனர் நேரடி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X