கவர்னர் - முதல்வர் மீண்டும் மோதல் : தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்தால் பரபரப்பு| Dinamalar

கவர்னர் - முதல்வர் மீண்டும் மோதல் : தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்தால் பரபரப்பு

Added : ஜன 08, 2020

புதுச்சேரி:மாநில தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக, கவர்னர் - முதல்வர் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் நோக்கத்தில், மாநில தேர்தல் ஆணையரை நியமிப்பதற்காக, கடந்த ஜூலை மாதத்தில் உள்ளாட்சித் துறை சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டது. ஆனால், முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்கு வராமலேயே அறிவிப்பு வெளியிடப்பட்டதாக புகார் எழுந்தது.
சட்டசபையின் சிறப்பு கூட்டத் தொடரில், ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் மாநில தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக, அரசு கொறடா அனந்தராமன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் புகார் தெரிவித்தனர். மாநில தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து சபாநாயகர் சிவக்கொழுந்து அதிரடியாக உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலகிருஷ்ணன் மாநில தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். இந்த முடிவு அமைச்சரவையில் எடுக்கப்பட்டதாக, சட்டசபை யில் முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.
பொறுப்பேற்றுக் கொண்ட பாலகிருஷ்ணன், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை கவனித்து வருகிறார்.இந்த விஷயத்தை, மத்திய உள்துறையின் கவனத்துக்கு கவர்னர் கிரண்பேடி கொண்டு சென்றார். அகில இந்திய அளவில் விளம்பரம் வெளியிட்டு, தலைமைச் செயலர் தலைமையில் கமிட்டி அமைத்து, மாநில தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் விளக்கம் அளித்தது.
இதனடிப்படையில், மாநில தேர்தல் ஆணையர் நியமனம் ரத்தாகிறது என தெரிவித்த கவர்னர், மத்திய உள்துறையின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகள் சட்டப்படி நியமிக்கப்பட்டுள்ள மாநில தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும் என்றால், நீதிபதியை நீக்குவதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றியே நீக்க முடியும் என கூறினார்.'அமைச்சரவையிலும், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநில தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளதால், அவரை நீக்குவதற்கு கவர்னருக்கோ, உள்துறைக்கோ அதிகாரம் கிடையாது' என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையரை நியமிப்பதற்காக புதிய விளம்பரத்தை உள்ளாட்சித் துறை நேற்று அதிரடியாக வெளியிட்டது. பதவிக்கான தகுதி, வயது வரம்பு, பதவிக் காலம், சம்பளம் உள்ளிட்ட விபரங்களுடன், வரும் பிப்ரவரி 6ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு, ஆட்சியாளர்களின் கவனத்துக்கு வராமல் வெளியிடப்பட்டுள்ளதால், கவர்னர் - முதல்வர் இடையிலான மோதல் மீண்டும் வெடித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X