கண்காணிப்பு கோபுரத்தில் சுழலும் கேமரா: மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கண்காணிப்பு கோபுரத்தில் சுழலும் கேமரா: மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது

Added : ஜன 08, 2020
 கண்காணிப்பு கோபுரத்தில் சுழலும் கேமரா: மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது

உடுமலை:வனக்குற்றங்களை தடுக்க, கண்காணிப்பு கோபுரத்தில் பொருத்தப்பட்ட சுழலும் கேமரா மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகம் வழியாக மூணாறு ரோடு செல்கிறது. ஒன்பதாறு வனத்துறை சோதனைச் சாவடியில் இருந்து, தமிழக, கேரள எல்லையொட்டிய, சின்னாறு சோதனைச்சாவடி வரை, சுமார், 20 கி.மீ., துாரம், அடர்ந்த வனப்பகுதியின் நடுவே, இந்த ரோடு அமைந்துள்ளது.வனத்தின் நடுவே ரோடு செல்வதால், வனவிலங்குகள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விதிமுறைகள் குறித்து, பல்வேறு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சுற்றுலாப்பயணிகள், அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைவதும், குற்றச்செயல்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.இப்பிரச்னைகளை தவிர்க்க, சின்னாறு புங்கன் ஓடையில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து, கோபுரத்தின் நடுவே, சுழலும் கண்காணிப்பு கேமரா சில ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்டது.இக்கேமரா, 360 டிகிரி கோணத்தில், சுழலும் வகையிலும், பதிவுகளை, செக்போஸ்ட்டிலுள்ள மையத்திலிருந்து கண்காணிக்கவும் கட்டமைப்புகள், ஏற்படுத்தப்பட்டன. இந்நிலையில், இக்கேமரா பழுதடைந்து நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் இருந்தது.தற்போது, மழை சீசன் முடிந்து, வனவிலங்குகள் மூணாறு ரோட்டை கடந்து செல்வது அதிகரித்துள்ளது; அதே போல், சுற்றுலா சீசனும் விரைவில், துவங்க உள்ளது. அப்போது, வாகன போக்குவரத்து, மூணாறு ரோட்டில் கூடுதலாகும். எனவே, வனத்துறையினர் சுழலும் கேமராவை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். வனப்பகுதியில் கூடுதலாக இவ்வகை கேமராக்களை பொருத்தவும், திட்டமிட்டு வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X