செஸ் கட்டணம் ரத்து; சேவைக்கட்டணம் வசூல்: மக்காச்சோள விவசாயிகள் அதிருப்தி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'செஸ்' கட்டணம் ரத்து; சேவைக்கட்டணம் வசூல்: மக்காச்சோள விவசாயிகள் அதிருப்தி

Added : ஜன 08, 2020

உடுமலை:ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு 'செஸ்' கட்டணம் நீக்கப்பட்ட நிலையில், சேவைக்கட்டணம் வசூலிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.வேளாண்துறை சார்பில், மக்காச்சோளம், சோளம், ராகி, கம்பு ஆகிய பயிர்களின் அனைத்து வகையான ரகங்களுக்கும், மார்க்கெட் கட்டணம் எனப்படும், 'செஸ்' வரி நீக்கப்படுவதாகவும், இதற்கான ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.உடுமலை பகுதிகளில், 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களில் அறுவடை துவங்க உள்ள நிலையில், பெரும்பாலும், உடுமலை, பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களுக்கு, விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்வர். கடந்த சில மாதத்திற்கு முன், ஒரு குவிண்டால் மக்காச்சோளம், 2,800 ரூபாய் வரை விற்ற நிலையில், தற்போது விலை குறைந்து, 2,020 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது.இந்நிலையில், 'செஸ்' கட்டணம் ரத்து செய்தும், சேவைக்கட்டணம் என்ற பெயரில், மொத்த விலையில், ஒரு சதவீதம் வசூலிக்கப்படுவதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, விளை பொருட்களுக்கு சேவை கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் மதுசூதனன் கூறியதாவது: வறட்சி, நோய்த்தாக்குதல், விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது என, விவசாயிகள் பாதித்து வரும் நிலையில், 'செஸ்' வரியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஆனால், அதனை நீக்கிய அரசு, மாற்று வழியாக சேவைக்கட்டணம் என்ற பெயரில், அதே ஒரு சதவீதத்தை வசூலித்து வருகிறது.வியாபாரிகள், கால்நடை, கோழி தீவன உற்பத்தி நிறுவனங்கள், மக்காச்சோளத்திற்கான சேவைக்கட்டணத்தை கட்டினாலும், அதனையும் விவசாயிகளின் விலையில் ஈடு செய்து கொள்ளும். இதனால், விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில், சேவைக்கட்டணம் வசூலிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் கூறுகையில்,' விளை பொருட்களுக்கு 'செஸ்' வசூலிப்பதில்லை. ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யும் விளை பொருட்களுக்கு, வியாபாரிகள் ஒரு சதவீதம் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 'இ-நாம்' திட்டத்திலும் இது உள்ளது,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X