பொது செய்தி

தமிழ்நாடு

ஊழல் செய்யும் ஊராட்சி தலைவர்களை தட்டிக்கேட்கணும்!கிராமசபையை பயன்படுத்த விழிப்புணர்வு

Added : ஜன 08, 2020
Advertisement

பெ.நா.பாளையம்:புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சித் தலைவர்கள், ஊழல் செய்வதாக தெரிந்தால், அவர்களை தட்டிக்கேட்க வேண்டும்; அதற்கு கிராமசபை கூட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த துவங்கியுள்ளனர்.ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில், ஊராட்சி தலைவர்கள் பலர், பெரும் தொகையை தண்ணீராக செலவழித்து, பதவியை பிடித்துள்ளனர். இதனால், தேர்தலில் செலவழித்த தொகையை, வரும் ஐந்தாண்டுகளில் முறைகேடான வழியில் சம்பாதிக்க சிலர் திட்டமிடலாம்.அதனால், ஊராட்சிக்குட்பட்ட மக்கள், 'அரசாங்கத்தின் வரிப்பணம் உரிய முறையில் செலவழிக்கப்படுகிறதா' என, கண்காணிக்க வேண்டும். இதற்காக ஆண்டுதோறும் ஜன., 26, மே 1, ஆக., 15, அக்., 2 ஆகிய நான்கு தேதிகளில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.அதில், 'ஊராட்சியின் வரவு செலவு கணக்கு, ஊராட்சி சார்பாக வழங்கப்பட்ட அனுமதிகள், சட்டத்துக்குட்பட்டு உள்ளதா என்பது குறித்து விசாரித்து, சட்டவிதி மீறல் இருந்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்க கோர வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள், பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர், வெறும், 34 ஆயிரம் ரூபாய் மட்டும் செலவிட வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையம் விதி நிர்ணயித்துள்ளது. ஆனால், பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள், ஏராளமான வாகனங்களில் தங்களது ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.அவர்களுக்கான உணவு உள்ளிட்டவைகளுக்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ளனர்.கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பலரும், குறைந்தது, 50 லட்சம் ரூபாய் முதல், 2 கோடி ரூபாய் வரை பணத்தை வாரி இறைத்துள்ளனர்.என்னென்ன வாய்ப்பு?இவர்கள் அள்ளி வீசிய பணத்தை விட, பல மடங்கு பணத்தை, பல வழிகளில் திரும்ப பெற திட்டமிடுவர். குறிப்பாக, லே-அவுட்கள் அமைக்க ஊராட்சி நிர்வாகத்தின் ஒப்புதல் சான்று வேண்டும். இதற்கு ஏக்கர் ஒன்றுக்கு, 5 முதல், 10 லட்சம் ரூபாய் வரை ஊராட்சி தலைவருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்.புதியதாக வீடு கட்ட வளர்ச்சிக் கட்டணம், 40 ஆயிரம் ரூபாய் என்றால் லஞ்சமாக, 50 ஆயிரம் ரூபாய் ஊராட்சி நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும்.இது தவிர, மத்திய, மாநில அரசுகளின் நிதிகளில் இருந்து செயல்படுத்தப்படும் சாலை அமைத்தல், வடிகால் கட்டுதல், தொகுப்பு வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடம் குறிப்பிட்ட தொகை கமிஷனாக, ஊராட்சி தலைவருக்கு வந்து சேரும்.ஆனால், ஒரு சில தலைவர்கள் இன்னும் ஒருபடிமேலே போய் குறிப்பிட்ட வளர்ச்சிப்பணிகளை, தங்களது பினாமிகளை ஒப்பந்ததாரராக நியமனம் செய்து கொள்ளையடிப்பதும் உண்டு.இப்படி, பல வழிகளில் முறைகேடாக பணம் சம்பாதிக்க வழி உள்ளது.அரசு சட்டவிதிப்படி, ஊராட்சி தலைவருக்கு மாதம், 1,500 ரூபாய் மட்டுமே ஊதியம். ஊராட்சி மன்றக்கூட்டம் நடத்தினால், ஒரு அமர்வுக்கு, 100 ரூபாய் கட்டணம் வழங்கப்படும்.ஆனால், பதவி ஏற்பின்போது, சாதாரண வீட்டில் குடியிருக்கும் ஊராட்சி தலைவர், ஐந்தாண்டுகளுக்கு பின், மிகப் பெரிய பங்களாவில் வசிக்கும் நிலைக்கு மாறி விடுகிறார். இதைத் தடுக்க, கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.ஊரும்... நாடும்... நலம் பெற!ஊழல் நடப்பதை கட்டுப்படுத்த, குறிப்பிட்ட பணிகளில் முறைகேடு நடப்பதாக தெரிந்தால், அது குறித்து தகவல் அறியும் சட்டத்தில் மக்கள் கேள்வி எழுப்பலாம். கிராம சபைகளில், பொது மக்கள் முழுமையாக பங்கேற்று, ஊராட்சி நிர்வாகத்தின் ஒவ்வொரு செயல்பாட்டையும் கண்காணித்து, பஞ்சாயத்து நிர்வாகம் நியாயமான, நேர்மையான முறையில் நடக்க உதவ வேண்டும். இதனால், ஊரும், நாடும் நலம் பெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X