தென்பெண்ணையாறு நதி நீர் பங்கீடு: தமிழக அரசுக்கு எதிராக கர்நாடக அரசு மனு| Dinamalar

தென்பெண்ணையாறு நதி நீர் பங்கீடு: தமிழக அரசுக்கு எதிராக கர்நாடக அரசு மனு

Updated : ஜன 08, 2020 | Added : ஜன 08, 2020 | கருத்துகள் (3)
Share
தென்பெண்ணையாறு நதி நீர் பங்கீடு விவகாரம்: தமிழக அரசுக்கு எதிராக கர்நாடக அரசு  மனு


புதுடில்லி: தென்பெண்ணையாறு நதி நீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.


latest tamil news




தடை கோரி மனு



கர்நாடக மாநிலம், சென்னகேசவா மலையில், தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகிறது. அங்கிருந்து, ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வழியாக, 432 கி.மீ., பயணித்து, கடலுார் அருகே, வங்கக் கடலில் கலக்கிறது.இந்நிலையில், தமிழகத்தின் எல்லையை ஒட்டி, கர்நாடகா பகுதியில், தென் பெண்ணை ஆற்றின் கிளை நதியான, மார்கண்டேய நதியின் குறுக்கே, கர்நாடக அரசு, 2012ல் அணை கட்ட துவங்கியது. இதற்கு தடை கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, தமிழக அரசு, தென்பெண்ணையாறு நதி நீர் பகிர்வு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.


80 சதவீதம்



அதில், தென்பெண்ணையாறு தமிழகத்திலும் ஓடுவதால், அதற்கு, கர்நாடக அரசு முழு உரிமை கோர முடியாது என்றும், மாநிலங்கள் இடையிலான நதிநீர் விவகாரங்கள் சட்டத்தின் கீழ், நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தீர்ப்பாயம் அமைக்கப்படும் வரை, தென்பெண்ணையாறு பகுதியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள, கர்நாடக அரசுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும், கோரப்பட்டிருந்தது. இதையடுத்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:தமிழகத்தில் ஓடும் தென்பெண்ணையாறு தண்ணீரை, கர்நாடகா எந்த விதத்திலும் பயன்படுத்த வில்லை. இது குறித்து ஏற்கனவே அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு, 2012ல், மார்கண்டேய நதியின் குறுக்கே தான், 240 கோடி ரூபாய் திட்டச் செலவில், அணை கட்டத் துவங்கியது. இப்பணி, 80 சதவீதம் முடிந்து விட்டது.


தள்ளுபடி



இத்திட்டத்திற்காக, இதுவரை, 210 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த அணை, 45 கிராமங்கள் வழியே, கோலார், பங்காருபேட்டை மற்றும் மலர் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்டுள்ளது. அணையின் கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், அதற்கு இடைக்கால தடை விதித்தால், ஈடு செய்ய முடியாத இழப்பை கர்நாடகா சந்திக்க நேரும். அதனால், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X