தமிழ்நாடு

நவப்பட்டி தலைவர் பதவிக்கு இன்று ஓட்டு எண்ணிக்கை

Added : ஜன 08, 2020
Share
Advertisement

கொளத்தூர்: நவப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கான, ஓட்டு எண்ணிக்கை இன்று கொளத்தூரில் நடக்கிறது. கொளத்தூர், நவப்பட்டி ஊராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு (எஸ்.சி.,) ஒதுக்கீடு செய்யப்பட்டது. இங்கு, ஏழு பெண் வேட்பாளர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். பெயர் சேர்த்தல், நீக்கலுக்கு பின்பு கடந்த, 23ல் வெளியான வாக்காளர்கள் பட்டியலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் மலர்கொடி பெயர் நீக்கப்பட்டிருந்தது. கடந்த, 2ல், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான ஓட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மலர்கொடி பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டிருந்ததால், தலைவர் பதவிக்கான ஓட்டு எண்ணிக்கையை மட்டும் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்தது. அந்த ஓட்டுகள் அடங்கிய பெட்டி, நேற்று முன்தினம் மேட்டூர் அரசு சார்-நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் உத்தரவுபடி, கொளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் நவப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. இது, தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெள்ளக்கல்பட்டியிலும் ஓட்டு எண்ணிக்கை: ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில், வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் ஒன்பது வார்டுகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தலில், ஆறு பேர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். ராஜாகவுண்டர் என்பவர் ஊராட்சி தலைவர் பதவிக்கு, மூக்கு கண்ணாடி சின்னத்தில் போட்டியிட்டார். 2019, டிச.,23ல், வெளியான, சேலம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், ராஜாகவுண்டர் பெயர் நீக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த, 2ல், ஓட்டு எண்ணிக்கையின் போது, வெள்ளக்கல்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜாகவுண்டர் உள்ளிட்ட ஆறு வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள், எண்ணப்படாமல் நிறுத்தி வைக்க, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில், பதிவான ஓட்டுகளை எண்ண தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் முருகன் முன்னிலையில் ஓட்டு எண்ணிக்கை மையம் தயார் செய்யப்பட்டது. இன்று காலை, ஓமலூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட ஓட்டு பெட்டியை, ஓட்டு எண்ணும் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு, ஏஜன்டுகள், வேட்பாளர்கள் முன்னிலையில் காலை, 9:30 மணிக்கு எண்ணப்படவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X