வீரபாண்டி: ஊராட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், பதிவான ஓட்டுக்கும், எண்ணப்பட்ட ஓட்டுக்கும் இடையே, 1,260 ஓட்டுகள் குறைந்துள்ளதாக கூறி, ஒன்றிய அலுவலகத்தை வேட்பாளர்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட, கல்பாரப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு கடந்த டிச.,27ல் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இந்த ஊராட்சி பெண்கள் (பொது) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஐந்து பேர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில், ராஜம்மாள் வெற்றி பெற்றார். மொத்தமுள்ள, 4,253 ஓட்டுகளில், 3,850 ஓட்டுகள் பதிவானதாக, தேர்தல் நடத்தும் அலுவலர் அன்றைய தினம், வேட்பாளர்களுக்கு அளித்த எண்ணிக்கை விபரத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில், 25 ஊராட்சிகளில் பதிவான ஓட்டுகள், வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள், வித்தியாசம் என எண்ணிக்கை விபரங்கள் அதிகாரபூர்வமாக ஒட்டப்பட்டது. அதில், கல்பாரப்பட்டி ஊராட்சி தலைவர் தேர்தலில், பதிவான ஓட்டுகள், 3,850க்கு பதிலாக, 1,260 ஓட்டுகள் குறைவாக, 2,590 ஓட்டுகள் மட்டுமே பதிவானதாக அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது. இது குறித்து, தகவலறிந்த கல்பாரப்பட்டி ஊராட்சி தலைவராக வெற்றி பெற்ற வேட்பாளரை தவிர, மற்ற வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தேர்தல் அலுவலரிடம், 1,260 ஓட்டுகளை காணவில்லை என புகாரளித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் திருவேரங்கன் கூறுகையில், ''அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ள விபரங்களை, கணினியில் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பூத் வாரியாக பதிவான ஓட்டுகள், கணினியில் பதிவு செய்யப்பட்ட ஓட்டுகளை ஆய்வு செய்த போது, 1,260 ஓட்டுகள் பதிவேற்றம் செய்யாமல் விடுபட்டிருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது போன்று, வேறு ஊராட்சிகளில் ஓட்டுகள் விடுபட்டுள்ளதா என, முழுவதும் சரி பார்த்து, புதிய விபர பட்டியல் ஒட்டப்படும்,'' என்றார். இதையடுத்து, முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE