திருவள்ளுவர் சிலையை பராமரிக்க பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளுவர் சிலையை பராமரிக்க பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு

Added : ஜன 08, 2020

கரூர்: 'கரூர் அருகே, பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலையை பராமரிக்க வேண்டும்' என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தான்தோன்றிமலை நகராட்சியாக இருந்தபோது, காந்தி கிராமத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், கரூர் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 2008ல் பூங்கா வசதி ஏற்படுத்தப்பட்டது. அது நாள்தோறும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. நாளடைவில் போதிய பராமரிப்பின்றி, பூங்காவில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தன. சில பொருட்கள் திருடு போயின. இந்நிலையில், தான்தோன்றிமலை நகராட்சி, கரூர் நகராட்சியுடன், 2011ம் ஆண்டு இணைக்கப்பட்டது. இதனால், 'பூங்காவை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்' என, பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பூங்கா பராமரிப்பு செய்யப்படவில்லை. இதனால், பூங்காவில் பல இடங்களில் முட்புதர் முளைத்துள்ளது. அப்பகுதி மக்களால், காலை மற்றும் மாலை நேரங்களில் நடை பயிற்சி கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், பூங்காவில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை சேதமடைந்துள்ளது. வரும், 16ல் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால், பூங்காவை சீரமைத்து, திருவள்ளுவர் சிலையை பராமரிக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X