தேங்கும் குப்பை; மக்கள் அவதி: கரூர் அருகே வாங்கல் சாலையில், பொது மக்கள் குப்பையை குவித்துள்ளனர். ஆனால், சாலையில் தேங்கிய குப்பை அகற்றப்படாமல் உள்ளது. இதனால், பலமாக காற்று வீசும்போது, அவை சாலையில் பரவுகின்றன. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், அந்த பகுதியில் உலா வரும் நாய்கள், குப்பையை சாலை நடுவே இழுத்துப் போட்டு விடுகின்றன. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. புதிய தள்ளுவண்டி மூலம் தேங்கிய குப்பையை அகற்ற வேண்டும்.
சின்டெக்ஸ் தொட்டி மாற்றப்படுமா? கரூர் அருகே அரசு காலனியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால், பொதுமக்களால் தண்ணீர் பிடிக்க முடியவில்லை. மேலும், போர்வெல் குழாயில் தண்ணீர் வர நீண்ட நேரம் ஆகிறது. இதனால், போர்வெல் குழாயை சீரமைத்து, புதிய சின்டெக்ஸ் தொட்டி வைக்க வேண்டும். இதுகுறித்து, பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை.
கழிப்பிடத்தை பராமரிக்கணும்! கரூர், அரசு காலனியில் மகளிர் வசதிக்காக, பொது சுகாதார கழிப்பிடம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால், பல மாதங்களாக பயன்படுத்த முடியாத நிலையில், பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், கழிப்பிடம் உள்ள இடங்களை தேடிச் செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளது. இதனால், கழிப்பிடத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
சாலைகளை சீரமைக்கணும்! கரூர், காந்திகிராமம் விநாயகர் கோவில் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக நாள்தோறும், ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், கரூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து, டூவீலர்களில் ஏராளமான பொதுமக்கள், வேலைக்கு செல்கின்றனர். அப்போது, இரவு நேரத்தில் குண்டும், குழியுமான சாலையில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். விபத்து அச்சம் ஏற்பட்டுள்ளது. சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை: கரூர், தெற்கு காந்திகிராமம் பகுதியில், குடிநீர் வால்வு தொட்டி உள்ளது. தண்ணீர் திறந்து விடப்படும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் தொட்டியை மூட சிமென்ட் மூடி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, அது சேதமடைந்துள்ளது. இதனால், தொட்டியை சரிவர மூடாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் டுவீலர்களில் செல்கிறவர்கள், தடுமாறி கீழே விழுகின்றனர். விபத்தை ஏற்படுத்தும் குடிநீர் வால்வு தொட்டியை, புதிய சிமென்ட் மூடி கொண்டு மூட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE