பொங்கல் பண்டிகை: வெல்ல உற்பத்தியில் ஆலைகள் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை: வெல்ல உற்பத்தியில் ஆலைகள் தீவிரம்

Added : ஜன 08, 2020
Share
கரூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெல்லம் உற்பத்தியில் ஆலைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில், காவிரி கரையோரம் உள்ள நொய்யல், நடையனூர், முத்தனூர், கவுண்டன்புதூர், சேமங்கி, கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். இவர்களிடம் வாங்கிய கரும்புகளை கொண்டு, தனியார் வெல்லம்

கரூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெல்லம் உற்பத்தியில் ஆலைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில், காவிரி கரையோரம் உள்ள நொய்யல், நடையனூர், முத்தனூர், கவுண்டன்புதூர், சேமங்கி, கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். இவர்களிடம் வாங்கிய கரும்புகளை கொண்டு, தனியார் வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் அச்சு மற்றும் உருண்டை வெல்லம் தயாரிக்கின்றனர். இவற்றை, 30 கிலோ சிப்பங்களாக பண்டல் செய்து நாமக்கல் மாவட்டம், பிலிக்கல்பாளையம் வெல்லச் சந்தைக்கு கொண்டு சென்று ஏலம் விடுகின்றனர். இவற்றை வியாபாரிகள் வாங்கி, ஆந்திரா, கேரளம், கர்நாடகம், மஹாராஷ்டிரா, உத்தராஞ்சல், உத்தரப்பிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். மாவட்டத்தில், நொய்யலைச் சுற்றி, ஏழுக்கும் மேற்பட்ட தனியார் வெல்ல உற்பத்தி ஆலைகளில் பொங்கல் பண்டிகையையொட்டி வெல்லம் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இதுகுறித்து, வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: ஒரு டன் கரும்பிலிருந்து, 110 கிலோ வெல்லம் உற்பத்தி செய்ய முடியும். ஒரு நாளைக்கு, 30 கிலோ கொண்ட, ஏழு சிப்பம் வரை உற்பத்தி செய்ய முடியும். ஓணம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகளவில் வியாபாரிகள் வெல்லத்தை கொள்முதல் செய்கின்றனர். கடந்த மாதம் தரத்திற்கேற்ப, 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம், 1,050 ரூபாய், அச்சு வெல்லம், 1,100 ரூபாய்க்கு விற்பனையானது. பொங்கலை முன்னிட்டு, 150 ரூபாய் உயர்ந்து உருண்டை வெல்லம், 1,200 ரூபாய், அச்சு வெல்லம், 1,250 ரூபாய்க்கு விலை போனது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X