தமிழ்நாடு

மாணவர்களுக்காகவே தமிழில் வெளிவரும் இதழ் 'பட்டம்': சேலம் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கருத்தரங்கில் தகவல்

Added : ஜன 08, 2020
Advertisement

சேலம்: 'இந்தியாவிலேயே எந்த மாநில மொழியிலும், இதுபோன்று மாணவர்களுக்கு பிரத்யேக இதழ் வெளியாவதில்லை. முதன் முதலாக, தமிழில் வெளிவரும் 'பட்டம்' மாணவர் இதழ்; மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்' என, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
சேலம் மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில், கல்வி நிறுவன தாளாளர்கள், கல்வியாளர்களுக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், நேற்று சேலத்தில் நடந்தது. கருத்தரங்கில், கூட்டமைப்பின் தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். செயலாளர் ஜெயமுருகன் ஆண்டறிக்கை வாசித்தார்.

கூட்டமைப்பின் மாநில செயலாளர் இளங்கோவன் பேசியதாவது: இன்றைய சூழலில், பள்ளிகள் நடத்துவது கடினமாக மாறி வருகிறது. 70 சதவீதம் தனியார் பள்ளிகள் திணறி வருகின்றன. நாள்தோறும் முளைக்கும் அனைத்து பிரச்னைகளையும் சமாளித்து, நல்ல மாணவர்களை உருவாக்குவதில் பல சவால்கள் காத்திருக்கின்றன. இதில், நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது. சங்கத்தின் மூலம், நமது பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதோடு, நல்ல வழிகாட்டுதலையும் பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

பட்டம் மாணவர் இதழின் சார்பில் வெங்கடேஷ் பேசியதாவது: கல்வியின் தரத்தை, மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் எனில், அடிப்படை வகுப்புகளிலிருந்தே, புரிந்து படிக்கும் திறனை அதிகப்படுத்த வேண்டும். இதற்கு உதவும் வகையில், மாணவர் இதழாக பட்டம் வெளிவருகிறது. திங்கள் முதல், வெள்ளி வரை, தினமும், 12 பக்கங்கள் கொண்ட இந்த இதழ், பள்ளி மாணவ, மாணவியருக்கு தேவையான தகவல்கள், கட்டுரைகள், கற்றல் முறை உள்ளிட்டவை மிக எளிமையாக மாணவர்களை சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநில மொழியிலும், இதுபோன்று மாணவர்களுக்கு பிரத்யேக இதழ் வெளியாவதில்லை. முதன் முதலாக, தமிழில் வெளிவரும் பட்டம் மாணவர் இதழ், மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். எதிர்கால அறிவு சார் சமூகமாக மாற்ற, பட்டம் இதழ் உதவும். இவ்வாறு அவர் பேசினார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள, 200க்கும் மேற்பட்ட பள்ளி தாளாளர்கள், பள்ளி முதல்வர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். கண்காட்சியில், 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைத்திருந்தன. இதில், பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்கள், சீருடை, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், சூரிய மின் சக்தி உற்பத்தி, பள்ளி மேலாண்மைக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், கற்பித்தல் உபகரணங்கள் உள்ளிட்ட பள்ளி தேவைகளுக்கேற்ற பொருட்கள் இடம் பிடித்திருந்தன.

'பள்ளி வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் திறன் அவசியம்': சேலத்தில், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நடந்த, கல்வியாளர்களுக்கான கருத்தரங்கில், சேலம் இ.எஸ்.ஐ., கார்ப்பரேஷன் துணை இயக்குனர் கார்த்திகேயன் பேசியதாவது: கல்வி நிறுவனங்களில், 10க்கும் மேற்பட்டோர் சம்பளம் வாங்குபவராக இருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக, இ.எஸ்.ஐ., சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். பணியாளர்களின் சம்பளம், 21 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவர்களுக்கு இ.எஸ்.ஐ., பதிவு அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

லைவ் லைப் நிறுவனர் கண்ணன் கிரீஸ் பேசியதாவது: இன்றைய குழந்தைகளை, கையாளும் முறை குறித்து பெற்றோருக்கு தெரிவதில்லை. கூட்டு குடும்பம் இல்லாததால், அவர்கள் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள ஆட்கள் இருப்பதில்லை. இதனால், தனிமையில் பல தவறான முடிவுகளை எடுக்கின்றனர். பொதுவாக, பல் துலக்குவது உள்ளிட்ட பழக்க வழக்கங்களை, மற்றவர்கள் அறிவுறுத்தும் முன்பே குழந்தைகள் செய்துவிடும். அதுபோல், கற்றலையும், ஒரு வழக்கமாக மாற்ற வேண்டும். கற்றுக்கொள்வதை வாழ்க்கையில், பயன்படுத்துவதற்கு தயார் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தேசிய திறந்தவெளி பள்ளிக்கல்வி மண்டல இயக்குனர் ரவி பேசியதாவது: பள்ளிகளில் பல நவீன தொழில்நுட்ப வசதிகள், உள்கட்டமைப்பு ஆகியவை மட்டுமே சிறந்தவையாக உருவாக்கி விடாது. பள்ளியின் வளர்ச்சிக்கு, முக்கிய தூண்களாக விளங்குவது ஆசிரியர்களின் திறன். மாணவர்களுக்கு எளிமையாக விளக்கி, பாடங்களை புரிந்து கொள்ள செய்ய, அவர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வு அவசியம். இன்றைய ஆசிரியர்களுக்கு, குடும்பத்தில் உள்ள பிரச்னை, பள்ளியில் உள்ள நெருக்கடி, வகுப்பறையில் உள்ள பல வகைப்பட்ட மாணவ, மாணவியர் என பல சவால்கள் உள்ளன. இவற்றை சமாளித்து, சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும். இதற்கு அவர்களுக்கு போதுமான பயிற்சிகள் அவசியம். இதற்காக பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X