சம்பவம் செய்தி

தமிழ்நாடு

10 மனைவியர்; 10 கள்ளக்காதலிகள்: மோசடி பணத்தில் மாற்றுத்திறனாளி 'ஜாலி'

Added : ஜன 08, 2020
Advertisement

சேலம்: சேலத்தில், வேலை வாங்கித் தருவதாக, இளைஞர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி, 10 மனைவியர், 10 கள்ளக்காதலிகளுக்கு மோசடி பணத்தை செலவு செய்துள்ளது, போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த சவுகத்அலி மகன் அஸ்ரப் அலி, 24; இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு, நேர்முகத் தேர்வுக்கு சென்று திரும்பிய நிலையில், பஸ்சில் தன்னுடன் பயணித்த, பார்வையிழந்த மாற்றுத்திறனாளி சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த கமலேசன் மகன் டேவிட், 38, என்பவருடன் தொடர்பு கிடைத்துள்ளது. அஸ்ரப் அலியின் மொபைல் எண்களை பெற்றுக் கொண்ட டேவிட், அடிக்கடி பேசி வந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள, ரெனால்ட் நிசான் கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். அதை நம்பி கடந்த, 2019 மார்ச், 27 துவங்கி, மே, 13 வரையிலான கால கட்டத்தில், வேலைக்காக மூன்று தவணைகளாக, 4.25 லட்சம் ரூபாயை டேவிட்டிடம், அஸ்ரப் அலி கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர், வேலை வாங்கித் தரவில்லை;பணத்தையும் கொடுக்கவில்லை. இது குறித்து, அஸ்ரப் அலி சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்படி, வழக்குப்பதிவு செய்த போலீசார், டேவிட்டை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: பார்வையிழந்த டேவிட், பஸ்களில் பயணிப்பதை வழக்கமாக கொண்டு, பயணிகளிடம் பேச்சு கொடுத்து, மொபைல் போன் எண்களை பெறுவதும், பின்னர் அவர்களிடம் பேசி பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார். தனக்கு அரசு உயரதிகாரிகள், வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்கக்கூடிய அளவுக்கு ஆட்கள் இருப்பதாக கூறி பணத்தை பெறுவதும், அதை மோசடியில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில், 62 பேரிடம், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை மோசடி செய்து, அதை வைத்து சேலத்தில், ஆறு மனைவி, கரூர், நாமக்கல், தர்மபுரி, ஈரோட்டில் தலா ஒரு மனைவி என மொத்தம், 10 மனைவியருடன் உள்ளார். இவர்களை தவிர, சென்னை, பெங்களூரு, கரூர், நாமக்கல், ஈரோட்டில் தலா, இரண்டு கள்ளக்காதலிகள் என, மொத்தம், 10 பேரை வைத்துள்ளார். மோசடியில் கிடைக்கும் பணம் அனைத்தையும், மனைவியர், காதலிகளிடம் கொடுத்து உல்லாச வாழ்க்கையை அனுபவித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். பார்வையிழந்த டேவிட்டின் அதிரடி வாக்குமூலம், விசாரணை நடத்திய போலீசாரை மட்டுமின்றி, அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X