சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜன 08, 2020
Advertisement
 'டவுட்' தனபாலு

இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: காங்கிரஸ் பேச்சாளர் நெல்லை கண்ணன், பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக, பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், வரம்பு மீறி பேசினார். அதனால் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுக்கூட்டத்தில், என்ன தான் பேச வேண்டும் என்ற வரைமுறை உள்ளது.

'டவுட்' தனபாலு: சமீபத்தில் நெல்லை கண்ணன், அவதுாறாக பேசியதால், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முன், முதல்வரைப் பற்றியும், அமைச்சர்கள் பற்றியும், கவர்னரையும் தரக்குறைவாக விமர்சித்த, தி.மு.க., - ம.தி.மு.க., மற்றும் 'நாம் தமிழர்' சீமான் போன்றோர் மீதும், 'நடவடிக்கை' எடுத்திருந்தால், அவதுாறு என்பது என்ன என்பது மக்களுக்கும், பேசியோருக்கும், 'டவுட்'டே இல்லாமல் புரிந்திருக்குமே!

தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன்: சட்டசபையில் என்னை பேச விடாமல், அமைச்சர்கள் குறுக்கீடு செய்தனர். என் கருத்து, முழுமையாக சபையில் இடம் பெறக் கூடாது என்பதற்காக அவ்வாறு செய்தனர். ஏராளமான குறிப்புகளை பேச வைத்திருந்தேன். பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால், கவர்னர் உரையை கிழித்தேன்.

'டவுட்' தனபாலு: சட்டசபையில் கவர்னரை பேச விடாமல் தடுப்பது; அமைச்சர்களின் பதில்களை கேட்காமல், வெளிநடப்பு செய்வது; அதையும் மீறி, சாலையில் இருந்து போராட்டம் நடத்தி, மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது போன்றவற்றை தான், மக்கள் நலப் பணிகளாக கருதுகின்றீர்களோ என்ற, 'டவுட்'டை, உங்களைப் போன்றவர்களின் செயல்பாடுகள் ஏற்படுத்துகின்றன.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு: தி.மு.க., ஆட்சியில், நிதியமைச்சராக இருந்த அன்பழகன், 'விலைவாசி ஏற்றம், பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சி' என்று கூறினார். அதுபோல, காமராஜர் ஆட்சியிலும், விலைவாசி உயர்ந்துள்ளது. ஆண்டவனே நினைத்தாலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாது.

'டவுட்' தனபாலு: அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை, ஆண்டவனே நினைத்தாலும், கட்டுப்படுத்த முடியாது என்றால், மத்திய, மாநில அரசுகளில், ஆயிரக்கணக்கான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஏன்; அவர்களுக்கு கீழ், லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள்; அனைவரையும் வேலை வாங்கும் அமைச்சர்கள் ஏன் என்ற, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X