டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜன 09, 2020 | கருத்துகள் (1)
 'டவுட்' தனபாலு

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: தி.மு.க., - எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அவரவர் தொகுதியில், வேலையில்லாமல் தவிப்போருக்கு, பயிற்சி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

'டவுட்' தனபாலு: உங்கள் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுரை கூறும் நீங்கள், ஏன் முன்னுதாரணமாக இருக்கக் கூடாது; உங்கள் கட்சி சார்பில், தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும், கிளைகள் இருப்பது போல, தொழிற்பயிற்சி கூடங்களை ஏன் துவக்கக் கூடாது? வெறுமனே இத்தனை ஆண்டுகள் பேசியது போதும்; இனிமேலாவது, மாநில மக்கள் நலனில் அக்கறை கொள்வீர்களா என்ற, 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

***

இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: எதிர்க்கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கிறார். அமைச்சரை, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் மிரட்ட முடியாது. எங்களுக்கு உத்தரவு போட வேண்டும் என, நினைத்தால் அது நடக்காது. கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது எங்கள் கடமை. நாங்கள் யாருக்கும் அஞ்ச மாட்டோம்.

'டவுட்' தனபாலு: ஜெ., இல்லாத இந்த மூன்றாண்டுகளில், முதல்வர் இ.பி.எஸ்., நன்றாக பேச பழகிக் கொண்டது மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் என, வெளியே நிலவும் பேச்சு, 'டவுட்' இல்லாமல் உண்மை தான், என்பதை உறுதி செய்யும் விதமாக உங்களின் ஆணித்தரமான பேச்சு உள்ளது.

***

தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்:இல்லாத ஒன்றை, இருப்பதாக கூறி, மக்களை திசை திருப்பும் வேலையில், தி.மு.க., ஈடுபட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தால், சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அப்படி யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்த முடியுமா?

'டவுட்' தனபாலு: சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பது போல, தி.மு.க., காட்டிக் கொள்கிறது. ஆனால், அக்கட்சியின் பொருளாளர், 'குடியுரிமை திருத்த சட்டத்தை தி.மு.க., எதிர்க்கவில்லை' என, சட்டசபையிலும், வௌியிலும் கூறுகிறார். இது, தி.மு.க.,வின் இரட்டை வேஷமே என்பதை, 'டவுட்'டே இல்லாமல், நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X